

விதைத்துக்கொண்டே இரு...
முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்!
என்கிற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப சோர்வடையாத உழைப்பால் நிகழ்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள்தான் பிறரை வழிநடத்தும் தலைவர்களாக உயர்வடைகிறார்கள். தலைவன் என்பவன் தலைமையிடத்தில் இருப்பவன்; அவனிடம் அதிகாரம் இருக்கிறது; அவன் சொல்லுக்கு பலம் இருக்கிறது; கூடுதல் மதிப்பு இருக்கிறது. தலைவன் மிக உயரத்தில் இருக்கிறான்; அவனுடைய கூட்டமோ மிக அதிகம். அதனால் பல தலைவர்களால் எல்லா நேரமும் எல்லோருடனும் கலந்து பழக, சேர்ந்து இருக்க, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்தத் தலைவர்களுக்கு கீழ் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் தினந்தோறும் தலைவர்களுடன் பேசுவார்கள்; ஆலோசிப்பார்கள்.
தலைவன் என்ன சொல்கிறான்; என்ன நினைக்கிறான் என்பதையும் மற்றவர்களுக்குச் சொல்வதும் அவர்கள்தான். தலைவன் நடுநாயகமான ஒரு புள்ளி என்றால், அந்த புள்ளியைச் சுற்றி வரையப்பட்ட முதல் நெருக்கமான வட்டத்தில் சிலர் இருப்பார்கள். அரசியல் கட்சிகள் என்றில்லை, நிறுவனங்களில் இருக்கும் தலைவர்களுக்கும் இதேபோல் நெருக்கமான உள்வட்டம் உண்டு. தலைவர்கள் சுதந்திரமாக இருப்பது சில இடங்களில்தான்; சிலரிடம் மட்டும்தான். அந்தச் சிலர்தான் நெருக்கமானவர்கள், உள்வட்டம் என அறியப்படுபவர்கள்.
இதுதவிர தலைவர்களுக்கு சில சீடர்களும் இருக்கலாம். சீடர்கள் என்றால் யார்? தலைவர்களிடம் கற்றுக்கொள்பவர்கள். தலைவர் மீது அன்பு, மரியாதை எல்லாம் உடையவர்கள். முழு நேரமும் தலைவருடனேயே இருந்து பணிவிடை செய்பவர்கள். இவர்கள்தான் சீடர்கள். இவர்களால் தலைவர்களுக்கும் தலைவர்களால் இவர்களுக்கும் நன்மைகள் உண்டு. தலைவர்களின் வெற்றி-தோல்விக்கும் இவர்களின் பங்கு முக்கியமானது.
தலைமை என்பது ஒரு பதவி; ஒரு பொறுப்பு; அது எப்படியேனும் கிடைக்கலாம்; தகுதி திறமையின் காரணமாகவும் கிடைக்கலாம்ச தலைவனைக் காட்டிலும் திறமைவாய்ந்த சீடர்கள் அமைந்துவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட திறமைவாய்ந்த சீடர்களை வளர்த்துவிடும் தலைவர்களும் உண்டு. தனக்குப் பிரச்னை என்று கருதி அழிப்பவர்களும் உண்டு. அது தலைவனின் மனப் பக்குவத்தை பொருத்தது. ஆனால், சீடர்களை அழிக்கவே முடியாது. இங்கு இல்லாவிட்டால் வேறு இடம் என அவர்கள் வளர்ந்துவிடுவார்கள். வரலாற்றில் இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட இயலும்.
தலைவர்கள் தங்கள் வாழ்நாளில் எங்கோ தொடங்கி தொடர்ந்து முயன்று தங்களின் கடின உழைப்பால், அறிவால், திறமையால் தலைமைப் பண்புகளால் தலைவர்கள் ஆனவர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியன் வலிமையான மனம் படைத்தவனாக விளங்கினான். எப்போதும் விழிப்போடும் பொறுப்போடும் செயல்பட்டான். அன்றாட வாழ்வில் குறைந்த நேரமே தூங்கும் பழக்கம் உடையவனாக இருந்தான். அந்தக் குறைந்த நேர தூக்கத்தைக்கூட தான் பயணம் செய்யும் குதிரையின் மீதே கழிக்கக் கூடியவனாகச் செயல்பட்டான். எதிலும், அவன் தலைமை வகிக்க எண்ணினான். பிறரின் கீழ் அடிமையாக இருப்பதை வெறுத்தான். தலைமைப் பண்புகளையும் நிர்வாகத் திறன்களையும் வளர்த்துக் கொண்டான்.
சிறுவயதில் நெப்போலியனின் குள்ளமான உருவத்தைக் கண்ட அவனது தந்தை, "மகனே! நீ இசைத்துறையில் கவனம் செலுத்தினால் புகழ் பெறலாம்; எனவே, இசையை கற்றுக்கொள் என்றார். அதற்காக அவர் கூறிய காரணம், இசையைக் கற்றுக் கொண்டால் நிறைய வருமானம் கிடைக்கும் என்பதும், இசையை வெளிப்படுத்த தோற்றம் முக்கியமல்ல என்பதும்தான். அதற்கு நெப்போலியன் தன் தந்தையிடம், "அப்பா! நான் ஆயிரம் பேர்களின் முன்னே இசை நிகழ்ச்சியை நடத்தும் சொற்ப தகுதியுடையவன் அல்ல; நான் பெரிய அரசனாக வரவே விரும்புகிறேன்' என்றான்.
பின்னாளில் நெப்போலியன் தனது பெரும் முயற்சியால் ராணுவத்தில் சேர்ந்தான். சிறப்பாகச் செயல்பட்டு அதில் பெரும் பதவிகள் பெற்று உயர்ந்தான். அவனது மனம் உயர்ந்த எண்ணங்களாலும், மிகப் பெரிய லட்சியங்களாலும் நிரம்பி இருந்தது. அத்தகைய லட்சிய நோக்கம் அவனுடைய முயற்சியால் மிக உயர்ந்த இடத்துக்கு அவனை அழைத்துச் சென்றது. நாளடைவில் ராஜ தந்திரங்களையும் போர் நுணுக்கங்களையும் வெகுவாகக் கற்றான். நெப்போலியன் போனபார்ட் என்கிற மாவீரனின் தலைமைப் பண்பையும் மதிநுட்பத்தையும் உலகமே வியர்ந்து பார்க்கும் அளவுக்குப் பல நாடுகளை வென்றான். முடிவில் ஈடு இணை இல்லாத மாவீரனாகவும், பேரரசனாகவும் வரலாற்றில் உயர்ந்து காட்டினான்.
கைகளை ஊன்றித் தானே தன் முயற்சியால் எழுந்து நின்றவர்கள் தலைவர்கள்; தலைவர் ஆவதற்காக தாங்களே முயன்று இயக்கங்கள் அமைப்புகளில் உழைத்து மேலே வந்தவர்கள். அவர்களின் முயற்சியும் உழைப்பும் சாதரணமானது அல்ல; அடிமேல் அடி, வலிமேல் வலி, இழப்பு, தியாகம் என சிரமப்பட்டு உழைத்து மேலே வந்தவர்கள். இன்னொரு ரகம்-ஒருசில தலைவர்கள் தற்செயலாகவோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுவது உண்டு. மொத்தத்தில் எல்லாத் தலைவர்களும் சாகாவரம் பெற்றவர்கள் அல்லர். அதேபோல், தங்கள் வாழ்நாள் முழுவதும்கூட தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் உண்டு. காலம் ஒரு நாள் மாறும் என்ற பாடல் வரிக்கேற்ப தலைமையும் ஒரு நாள் மாறும்; மாறித்தான் தீரும்; அது காலத்தின் கட்டாயம்.
தலைமை மாற்றம் அவசியமான ஒன்றாகும்; அதுதான் நிறுவனத்துக்கும் இயக்கத்துக்கும் நல்லது. தலைவனைவிட அமைப்பு முக்கியம் என்பதால், தலைமை மாற்றம் தவிர்க்கப்பட இயலாததாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.