

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை அவ்வப்போது பாராட்டினாலும், சில சமயங்களில் தனது கசப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு குறிப்பாக ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை, பிரிக்ஸ் நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவிருப்பது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தந்தில் இந்தியா கையொப்பமிட மறுப்பது, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருவது, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்தான் என இந்தியா கூற மறுப்பது, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வது ஆகியன.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நாடாக ரஷியா விளங்கி வருகிறது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நம் நாட்டின் எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உக்ரைன் போருக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியின் பெரும்பகுதிக்கு மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருந்தது.
2018-ஆம் நிதியாண்டில் ரஷியாவின் பங்கு 1.8 சதவீதமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு மாஸ்கோ, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து ரஷியாவின் எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. ரஷியாவின் உக்ரைன் போருக்கு இதன்மூலம் இந்தியா நிதியளிக்கிறது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
கடந்த 2024-ஆம் நிதியாண்டில் இந்தியா ஒரு நாளைக்கு 54 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதில், 36% (18 லட்சம் பீப்பாய்) ரஷியாவிடமிருந்தும், 20% இராக்கிடமிருந்தும், 14% சவூதியிடமிருந்தும், 9% ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்தும், 4% அமெரிக்காவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை உள்ளடக்கிய புள்ளிவிவரங்களின்படி, ரஷியா ஒரு நாளைக்கு சுமார் 1.7-1.8 மில்லியன் பீப்பாய்களை விநியோகித்துள்ளது. சலுகை விலையில் வாங்கியதால் முந்தைய நிதியாண்டில் இந்தியாவின் இறக்குமதி செலவில் 8.2 பில்லியன் டாலர் குறைந்தது.
கடந்த 15.10.2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், அண்மையிலும் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதை இந்தியா மறுத்துள்ளது. "கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா உலக அளவில் குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது. நிலையற்ற எரிசக்தி சூழலில் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் நிலையான முன்னுரிமை. இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள், இந்த நோக்கத்தின் அடிப்படையில் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன. எனவே, அதில் மாற்றம் செய்ய முடியாது. தற்போதைய அமெரிக்க அரசு இந்தியாவுடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் சிவப்புக் கோடு என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ரஷியா-உக்ரைன் போரிலிருந்து தள்ளுபடி விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, அதைச் சுத்திகரித்து, மற்ற நாடுகளுக்கு மறு விற்பனை செய்வதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுவதாக அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட்பெசென்ட் தெரிவித்திருந்தார். வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவை "கிரெம்ளினுக்கு எண்ணெய் பணச் சலவை செய்யும் நிறுவனம்' என தெரிவித்தார்.
இந்தியாவில் சர்வதேச வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அரசால் இந்திய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட ஐம்பது சதவீத வரி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான பொருள்கள் ஏற்றுமதி மே, 2025-இல் 8.8 பில்லியன் டாலரிலிருந்து, செப்டம்பரில் 5.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நான்கு மாத காலத்தில் 37.5% குறைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்தியப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. மேலும், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இதனால், ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையையும், நாடு இறக்குமதி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்துள்ளது.
ரஷியாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கக் கூடும். ஏனெனில், இந்த நிறுவனங்கள், குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி அளித்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 3.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன.
ஜெர்மனியில் அண்மையில் பேசிய மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், "அழுத்தத்துக்குப் பணிந்து அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடாது. இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்குப் பார்வையைக் கொண்டது. அமெரிக்க வரிவிதிப்பைக் கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருகிறோம்; புதிய சந்தைகளைத் தேடி வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்பு வாகனங்கள், பாதுகாப்பு விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியவை ரஷியாவின் கூட்டு முயற்சியால் உருவானது என்பதால் இந்தியா, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவுக்கு தடையற்ற ஒத்துழைப்பை ரஷியா வழங்கி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களின் மீது 50% வரியை டிரம்ப் விதித்த போது, பிரதமர் மோடி விளாதிமீர் புதினுடன் வலுவான உறவுகளை வளர்த்துள்ளார். "இந்தியாவின் நிலைப்பாட்டை என்றும் நாங்கள் மதிக்கிறோம். ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காமல் தவிர்ப்பது அவர்களது நிலைப்பாட்டை பொருத்தது. எண்ணெய் கொள்முதலில் பன்முகத்தன்மையை இந்தியா விரும்பினால் அதில் தலையிட மாட்டோம்' என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா நீண்ட காலமாக கிரெம்ளினுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது. மேலும், நிகழாண்டு இறுதியில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை வரவேற்க இந்தியா தயாராகவுள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா திடீரென நிறுத்துவது சாத்தியமற்றது என வர்த்தகப் புலனாய்வு நிறுவனமான கெப்ளரின் மூத்த எண்ணெய் ஆய்வாளர் முயு சூ தெரிவித்துள்ளார்.
2025-2026-ஆம் நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் இந்தியா ரஷியாவிலிருந்து, எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், எரிபொருள் செலவு 9.1 பில்லியன் டாலராகவும், அடுத்த நிதியாண்டில் 11.7 பில்லியன் டாலராகவும் உயரும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது நிச்சயமாக இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டம்பர் மாதத்தில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை 14% இந்தியா குறைத்துள்ளதாக ஐரோப்பிய எரிபொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், "வர்த்தகத்துக்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குப் பல நாடுகள் உள்ளன. ரஷியாவுடனிருக்கும் நீண்ட கால நட்புறவை பலவீனப்படுத்தவே வர்த்தகத் தடை அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிடுகிறார். ரஷியாவுடனான இந்தியாவின் நட்பு என்பது ஆழமானது; தேச நலனை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் ராணுவத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
உலகளாவிய அரசியல் விவகாரங்களிலிருந்து இந்தியாவைத் தள்ளிவைக்க முயல்வது, இந்தியாவின் தன்னாட்சி மற்றும் சுயமாக முடிவெடுக்கும் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அமெரிக்காவின், 25% வரி விதிப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்; அதற்காக, இந்தியா அடிபணிந்து விடக் கூடாது' என்றார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி, சந்தைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது; 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. எனவே, ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து தனக்கு லாபமான பொருள்களை வாங்குவது, அந்நாட்டின் தனிப்பட்ட உரிமை; அதில் தன் சுயலாபத்துக்காக மற்ற நாட்டின் தலைவர்கள் தலையிடுவதற்கு உரிமையில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.