

மிகச் சிறந்த தலைவன் சமூகத்தில் உள்ள மிகச் சிறந்த இரண்டாவது வரிசைத் தலைவர்களை ஈர்த்து விடுகிறான். அவனுடைய தலைமையில் உள்ள அமைப்பு சமூகத்தில் ஒரு பெருந் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
'சத்தியம்' பொதுவாழ்விலோ, சமூகத்திலோ ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதாக எந்த நாட்டு வரலாற்றிலும் கிடையாது! சத்தியத்தை, தன்னலமின்மையை நாட்டுப் பணியில் கலந்தார் காந்தி!
புரட்சியில் ஈடுபடுகின்றவனின் தனியொழுக்கம் குறித்து லெனின் கவலைப்பட்டதில்லை! ஆனால், காந்தி அத்தகையவர்களைப் புறக்கணித்துவிடுவார். ஏனென்றால் நாளை அதிகாரம் இவர்களிடம்தான் போய்ச் சேரும்; அப்போது நாடு நாசமாகி விடும் என்பது காந்தியின் கருத்து!
சட்டமறுப்பு (சிவில் டிஸ்ஸொபீடியன்ஸ்) போன்ற புதிய கால அரசியல் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திய போது, அதை நடைமுறைப்படுத்த இந்திய நாட்டின் முனிவர்கள் போதித்த அறம் சார்ந்த நிலைப்பாட்டை மையமாகக் கொண்டார்!
அந்த அடிப்படையில் பொது வாழ்வை நடத்தி விடுதலைபெற்ற இந்தியாவின் தேசியக் கொடியில் தருமச் சக்கரம் மையம் கொண்டது. இந்திய அரசின் இலச்சினையாக நான்கு திசைகளிலும் சிங்கங்கள் அறத்தை முழங்குகின்றன! ஒரு மைய அரசின் நோக்கம் அறவழி ஆட்சி! இதற்கு முந்திய நெடிய வரலாற்றில் குறிப்பாக சங்க காலத்தில் நீதி வழுவா மன்னர்கள் பரவலாக இருந்திருக்கிறார்கள்! அன்றைக்கு அவர்களை நெறிப்படுத்தியவர்கள் புலவர்கள்தாம்! அவர்கள் செவி கைய்ப்பச் சொல்லும் இயல்புடையோர்! அந்தப் புலவர்கள் அன்றைய மன்னர்களுக்கு எதிர்க்கட்சியாகச் செயல்பட்டிருக்கின்றனர்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும்போது, 'புலவர்கள் என்னைப் பாடாதொழிக' என்கிறான். அறிவார்ந்த சான்றோர்களாகிய புலவர்கள் பாராட்டாத வாழ்க்கை வீண் வாழ்க்கை என்று அன்றைய மன்னர்கள் கருதினர்! ஒவ்வொரு பேனாவும் வாடகைக்கு விடப்படுகின்ற காலம் இது! சங்க காலத்தில் புலவர்கள் ஆற்றிய பணியை இடைக்காலத்தில் சமயம் மேற்கொண்டது!
கடவுளின் பெயரில் அச்சுறுத்தி, நல்வினை, தீவினை ஆகிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு, செய்த வினையை அறுக்காமல் தீராது என்று போதிக்கப்பட்டு, குப்பையைச் சேகரித்துச் சேகரித்து கடைசியில் குளிர் காயாமலேயே போய் விடுகிற மானிட அற்பனுக்கு வாழ்க்கையின் நோக்கம் அது அன்று; வினைகளின் காரணமாக வந்த உடல்; வினைகளைப் பெருக்கி வாழ்வதால் என்ன பயன்?
இருமல் மருந்து உற்பத்தி செய்கிறவன் இருபத்தியொரு பிஞ்சுகள் உயிரிழக்கக் காரணமாகிறான்! ஒரு நெசவாளியின் சிறுநீரகத்தை ரூ.ஐந்து லட்சத்துக்கு வாங்கி ஒரு பணக்காரனுக்கு ரூ. ஐம்பது லட்சத்துக்குப் பொருத்தும் மருத்துவமனை உரிமையாளர்கள் ஒரு பக்கம்!
ஒரு மாநில நெடுஞ்சாலையில் ஓர் ஒப்பந்தக்காரர் நாற்பது அடிக்குப் போட வேண்டிய சாலையை முப்பதடிக்குப் போட்டு நாற்பதடிக்குப் போட்டதாக ஏடுகளில் தலைமைப் பொறியாளர்களே பதிந்து, அதற்குரிய தொகை வழங்கப்பட்டு, அந்தத் தொகையைப் பொறியாளர்கள், மந்திரி அனைவரும் பங்கிட்டுக் கொள்வதைத் தண்டிக்கக் கூடிய ஆற்றல் நம்முடைய அரசுக்கு இல்லை. காரணம், ஆட்சியிலிருப்பவர்கள்தானே இதைச் செய்கிறார்கள்!
இவன் சேர்த்து வைத்த வரம்பு மீறிய செல்வத்தை வழி வழியினரோ, யார் யாரோ நுகர்வார்கள். பாவம் மட்டும் இவனுடைய உயிரைப் பற்றிக் கொண்டு தொடரும்! வரம்பு மீறிய பணம் ஓர் அதிகாரத்தைத் தருகிறது! அந்த அதிகாரத்தால் ஆகப் போவதென்ன?
அதிகாரத்தில் உள்ளவர் பயணம் செய்கிறார்! சாலைப் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது! அவருடைய பணி முதன்மையானது! எல்லாரும் காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் தேசியக் கொடி கட்டிய காரில் அவர் ஆசை நாயகி வீட்டுக்குக் கூடப் போவார்! அதுவும் தேசப் பணிதான். இவற்றில் ஏற்படுகிற பெருமிதங்கள் வாழ்க்கையை வெற்றியாகக் காட்டுகின்றன!
ஆனால் வாழ்க்கை பெருநோய்கள், முதுமை, மரணம் இவற்றை எல்லைகளாக உடையது! எழுபது மாடிக்கு எழுநூறு கோடிக்கு அரபிக் கடலோரம் வீடு கட்டினாலும், கடைசி மூச்சுக்குப் பின் 'நாறும்' என்று வெளியேற்றி விடுவான்! எரிப்பான்; நீரில் மூழ்குவான்! நினைப்பொழிந்து போவான்! கடவுளைக் கண்டு அறிய வேண்டிய தேவையை நிலையாமைதான் நமக்கு உண்டாக்கியது!
பெரியாரிய சாதி மறுப்புத் திருமணங்கள் சாதியை ஒழிக்கவில்லை. பிறக்கின்ற பிள்ளை இருவரில் யார் சாதி தாழ்ந்ததோ அதில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசே வழிகாட்டிவிட்டது!
முன்னேற்றத்திற்கு இது தேவைதான் என்பது வாதமாயினும், தலைமைச் செயலகத்தில் மேல்நிலைப் பதவியில் இருக்கும் ஒருவனும், நாடாளுமன்ற உறுப்பினராகும் ஒருவனும் எந்தச் சாதியினனும் லஞ்சம்தான் வாங்குகிறான். அவன் மேட்டுக்குடியினரோடு பூர்சுவா வாழ்க்கைக்கு மாறிவிடுவான்!
பணம்தான் சமூக மதிப்பீட்டின் அளவு கோல் என்பதால், தாழ்த்தப்பட்டவனை உயர்நிலைக்குத் தூக்கிப் பூர்சுவாக்க முடிந்ததே தவிர, அவனை வணங்கத்தக்க நாயன்மார் ஆக்க முடியவில்லை! வாழ்க்கையில் உயர்ந்ததற்கான அளவுகோல், பதவியும், பணமும் என்பதால், நெறி சார்ந்த வாழ்வு நிலை பெற முடியவில்லை! கக்கன் போன்றோர் விதிவிலக்கு!
ஒரு சமயம் கட்டும் முயற்சியில் தமிழ்நாட்டைச் சமத்துவப்படுத்தும் முயற்சியும், உயர்ந்த வாழ்க்கை நெறியை வற்புறுத்தும் முயற்சியும் கலந்துள்ளன!
ஆனால், ஒரு சமயம் நிறுவனம் ஆகும்போது, பல தீங்குகளை அது உருவாக்கும்! அந்த நிறுவனத்தின் மீதே பக்தி ஏற்படும்! கட்சிக்கு விசுவாசம், சமய நிறுவனத்திற்கு விசுவாசம்; அது வளர்ந்து தலைவனுக்கும், மடாதிபதிக்குமான விசுவாசமாக மாறும்!
மெய்கண்டார் என்னும் மன்னன் தீவிரமான சைவன்! அவனுடைய அரண்மனையில் சிவனடியார்கள் யார் வந்தாலும் எந்த நேரம் வந்தாலும் தடுக்கக்கூடாது எனக் கட்டளை.
முத்தநாதன் என்னும் வஞ்சகத் துறவி இரவில் வந்தான்! மெய்கண்டான் அவனுடைய தாள் பணிந்தான்! முத்தநாதன் ஒளித்து வைத்திருந்த குறுவாளால் மன்னனைக் குத்திவிட்டான்.
மெய்கண்டான் மெய்க்காவலன் தத்தன் வாளை உருவி முத்தநாதனை வெட்டப் போனான்!
'தத்தா நமர்' என்றார் மெய்கண்டார்!
அவன் சிவ வேடத்தில் வந்த கபட சன்னியாசி என்றான் தத்தன்!
சிவவேடமும் வணக்கத்திற்குரியதே என்றான் மன்னன் மெய்கண்டான்!
வேடத்தை வணக்கத்திற்குரியது என்று சொன்னதன் மூலம் மெய்கண்டார் ஒரு சீரழிவுக் கலாசாரத்திற்கு வழி வகுத்துவிட்டார்! 'அவன் நம்ம ஆள்; கரை வேட்டிக்காரன்' என்று திராவிட மாடல் கொள்ளும் கொள்கைக்குப் பெரிய புராணமே திறவுகோல்!
கொலை செய்தவன் சிவவேடம் அணிந்திருந்ததால் அவனைத் திரும்பக் கொல்லக் கூடாது என்பதைப் பின்பற்றி 'திராவிட மாடல்' கரை வேட்டி அணிந்திருப்பதால் அவனை போலீசு பிடிக்கக் கூடாது; அவன் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் கேட்கக் கூடாது என்னும் சிந்தனையை இவர்கள் பெற்றனர்.
சைவம் என்பது நிறுவனமாகும் போது, உத்திராட்ச மாலை போன்றவை அவனை அடையாளப்படுத்துகின்றன! அடையாளத்தில் இல்லை சைவம் என்றாலும், நிறுவனங்கள் அடையாளங்களின் மீதே உயிர்த்திருக்கின்றன.
சைவம் வளர்ச்சியடைகிறது. பக்தி இயக்கத்தின் இறுதிக் கட்டத்தில் மடாதிபதிகள் தோன்றுகிறார்கள்! சைவத்தை வளர்ப்பது செல்வர்களின் கடமையாகிறது! பல ஆயிரம் வேலி நிலங்கள் மடங்களின் பேரில் எழுதப்படுகின்றன.
மடங்கள் வெறும் சொத்து மடங்களாகவும் சேர்த்து மடங்களாகவும் ஆகிய நிலையில் வள்ளலார் தோன்றினார், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தினார்!
தமிழ்நாட்டில் அது ஒரு பெரும் புரட்சி! சாதி மேட்டிமைக்கு எதிராக மூட்டப்பட்ட தீ! சாதியினுடைய பெருந்தீமையே பிறப்பு வழியாக உயர்வு தாழ்வு கற்பித்தல்தான்! வாழும் முறைதான் ஒருவன் உயர்வதற்கான வழி என்பது பிறப்பு வழி மேட்டிமையைச் சுக்கு நூறாக்கிவிடுகிறது! சாதியின் முதுகுத்தண்டில் விழுந்த மரண அடி அது!
சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்தாரே ஒழிய எந்த நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு எந்தச் சொத்துமில்லை! பஞ்சம் பேயாட்டம் ஆடிய போது, அணையா அடுப்பை மூட்டினார்! பசி நீக்கமே முதற்கடமை; கடவுள் இரண்டாவது என்றார்! அவர் தமிழர்க்கு வாய்த்த கடைசி மகான்!
அவருக்குப் பின்னால் சமயப் பணியை, இறையச்சத்தின் வழி சமூகத்தை மேம்படுத்தும் பணியை யாரும் செய்ய முன்வரவில்லை! நிகழ்காலச் சந்தைப் பொருளாதாரம் புதுவகையான சாமியார்களை உருவாக்கி இருக்கிறது.
'யோகப் பயிற்சிதான்' அவர்களின் மொத்தக் கற்பித்தலும்! ஆங்கிலமே அவர்களின் மூலதனம்! மலையடிவாரங்களெல்லாம் இவர்களுடையதே! பல ஊழல் மந்திரிகளுக்குக் காப்பிடம்!
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.