மயக்கும் மாயத் திரை!

நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.
குழந்தைகள்
குழந்தைகள் கோப்புப்படம்.
Published on
Updated on
3 min read

நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.

சக மனிதனுக்கு நேரும் வன்முறைகளை சர்வசாதாரணமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் நான்தான் ஒருகாலத்தில் பொம்மையின் கை உடைந்ததற்கு ஒரு வாரம் அழுது இருக்கிறேன்.

பொம்மையின் கை உடைந்ததற்கு அழுத குழந்தை வளர வளர ஏன் இரக்கத்தைத் தொலைக்க ஆரம்பிக்கிறது? மென்மையான அதன் இதயம் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது? முன்பெல்லாம் வேலியில் போகும் ஓணானைக் கல்லால் அடிப்பது, தட்டான் பூச்சியைக் கயிற்றால் கட்டி இழுப்பது போன்ற அடாவடிகளைச் செய்தார்கள். தற்போதைய பிள்ளைகள் கைப்பேசி வன்முறை விளையாட்டுகளை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இவர்களும் பிற உயிர்களை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கைப்பேசி விளையாட்டுகள் வன்முறையை உள்ளடக்கியதாகவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதாகவோ இருக்கின்றன.

சில வகை விளையாட்டுகளில் வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டு வீழ்த்திய பிறகு, கடைசியில் நிற்பவர் வெற்றியாளர் ஆவார். தீவிர சண்டை, துப்பாக்கிச் சண்டையை மையமாகக் கொண்ட விளையாட்டை சிறுவர்கள் விரும்பி விளையாடுகிறார்கள். பல விளையாட்டுகள் பயங்கரமான வன்முறையைக் கொண்டவை.

இதனால், வளரும் குழந்தைகள் மனநலன் மற்றும் நடத்தை சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது அவர்களது தீவிர கோபம், வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கிறது. விளையாட அனுமதிக்காத போது பெற்றோருடன் சண்டையிடுகிறார்கள்; பொருள்களைப் போட்டு உடைக்கிறார்கள்; குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காக தாயை சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் வழக்கு ஒன்று உள்ளது. சில சிறார்கள் தற்கொலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதால் மிகுந்த மன அழுத்தம், பதற்றம் மற்றும் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள். படிப்பில் கவனம் இருக்காது. அறிவார்ந்த மாணவர்கள்கூட தேர்வில் தோல்வியைத் தழுவுகிறார்கள். மேலும், உடல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்து விளையாடுவதால் முதுகெலும்பில் தேய்மானம் ஏற்படுவது, முதுகுத்தண்டு வளைவது, நடக்கவும் சிறுநீர் கழிக்கவும்கூட அவதிப்படும் நிலை என பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதிக நேரம் விளையாடுவதால் கைகள், குறிப்பாகப் பெருவிரல் வீங்கி வலி உண்டாகிறது. கண்ணில் வறட்சி, கிட்டப் பார்வை கோளாறுகள் வருகின்றன.

தூக்கம் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளை இத்தகைய கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாக்கும் செயல்முறை ஒரு சிக்கலான உளவியல், வடிவமைப்பு காரணிகளின் கலவையாகும். இந்தச் செயலிகள் குழந்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் விதமாக வடிவமைக்கப்படுகின்றன.

விளையாடும் போதும் விளையாட்டில் வெற்றி பெறும் போதும் டோபமைன் அவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை அளிப்பதுடன் மீண்டும் விளையாட வேண்டும் என்ற உந்துதலையும் உருவாக்குகிறது. வெற்றி பெற்றால் மீண்டும் வெற்றி பெற வேண்டும், தோல்வி ஏற்பட்டால் வெற்றி அடைய வேண்டும் என்ற வெறி அவர்களை இயக்குகிறது.

கைப்பேசி பிள்ளைகளின் இயல்பை மாற்றி விட்டது. அவர்களிடமிருந்து அவர்களின் குழந்தைமையைப் பறித்து விட்டது. விளையாட்டு மட்டுமல்ல, அறிதிறன்பேசித் திரையை அதிகமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் அது குழந்தைகளின் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுத்து அவர்களை முரட்டுத்தனமாக மாற்றிவிடுகிறது.

பெரியவர்களாகிய நாம்தான் இதை ஆரம்பித்து வைக்கிறோம். சோறு ஊட்ட குழந்தையிடம் கைப்பேசியைக் கொடுத்ததுதான் முதல் தவறு. கேலிச் சித்திரத்தையும், குழந்தைப் பாடல்களையும் பார்த்துக் கொண்டு குழந்தைகள் உணவை வேக வேகமாக விழுங்குகின்றனர். அவர்களின் முழுக் கவனமும் திரையில் இருப்பதால் உணவின் சுவை குறித்த உணர்வு அறவே இருப்பதில்லை. வேடிக்கை காட்டி, கதை சொல்லி ஊட்ட நேரமில்லை; பொறுமையும் இல்லை.

பெரியவர்களிடம் குழந்தையை விட்டுச் சென்றால் அவர்களும் நிதானமாக ஊட்டாமல் கைப்பேசியைக் கொடுத்து விடுகிறார்கள். மெல்ல மெல்ல குழந்தைகளின் எண்ம நேரம் அதிகரிக்கிறது. கையில் கைப்பேசியைக் கொடுத்துவிட்டால் பிள்ளைகள் குறும்பு செய்வதில்லை. குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுமே, அவர்கள் இதற்கு அடிமையாகிப் போய் விடுவார்களே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. பணிப் பெண்களிடம் குழந்தையை விட்டுச் செல்வது சரியாக வருவதில்லை. அவர்களும் குழந்தையின் கையில் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கிறார்கள்.

எல்லோருக்குமே இது ஓர் எளிய வழியாகி விட்டது. குழந்தைகளை எங்கு அழைத்துப் போனாலும் அவர்கள் தொல்லை தராமல் இருக்க கைப்பேசி உதவுகிறது. வீட்டில் இருக்கும்போதும் இப்படித்தான் சமாளிக்கிறார்கள். ஒரு சில அம்மாக்கள் எண்ம நேரம் அதிகமாகி விடக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்; ஆனால், காலச் சூழ்நிலையால் அவர்களும் கைப்பேசியைக் கொடுக்கும்படி ஆகிவிட்டது.

கரோனா காலத்தில் இணையவழி வகுப்புகளுக்காக வேறு வழியில்லாமல் கைப்பேசியைக் கொடுத்தோம். அதனால், தற்போது பல பிள்ளைகள் அதற்கு அடிமையாகிவிட்டார்கள். "அரேபியனும் ஒட்டகமும்' கதையாகி விட்டது. ஒரு பாலைவனத்தில் அரேபியன் ஒருவன் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தான். இரவு நேரம் வந்தது, கடும் குளிர் வாட்டியது. அவன் தங்குவதற்கு கூடாரம் அமைத்துக் கொண்டான்; ஒட்டகத்தை வெளியே கட்டிப் போட்டான்.

அவனுக்குள் ஒட்டகத்தின் மீது இரக்கம் சுரந்தது. அதற்கும் குளிருமே என்று நினைத்து, அது தன் கழுத்து வரைக்கும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள்ள அனுமதித்தான். அங்கே ஒருவர் படுக்க மட்டுமே இடமிருந்தது. இவன் தன்னைக் கொஞ்சம் சுருக்கிக் கொண்டான். சுகத்தை அனுபவித்த ஒட்டகம் மெல்ல தன் உடலின் ஒரு பகுதியை உள்ளே நுழைத்தது; பிறகு மெல்ல மெல்ல முழுவதும் உள்ளே நுழைந்தது. அவனை வெளியே தள்ளிவிட்டு, முழுவதுமாக கூடாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தக் கதை கைப்பேசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

நான் பிரிட்டனில் பல விஷயங்களைக் கவனித்தேன். மேற்கத்திய நாடுகளில் மக்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்வதாகவும், விவாகரத்து வழக்குகளால் குடும்ப நீதிமன்றங்கள் நிறைந்து கிடப்பதாகவும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஓர் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். முன்பு எப்படியோ? ஆனால் தற்போது அவர்கள் கிழக்கத்திய சிந்தனைகளை மதிக்கிறார்கள், குடும்ப உறவுகளைப் பேணுகிறார்கள்.

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எங்கு சென்றாலும் குடும்பத்துடன் செல்கிறார்கள்.

பச்சிளம் குழந்தையைக்கூட பாதுகாப்புடன் வெளியே எடுத்துச் செல்கிறார்கள். குழந்தையின் கையில் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு உணவு ஊட்டும் வழக்கம் அறவே இல்லை. இது ஒரு குறுகிய கால தீர்வு என்று அதைப் புறந்தள்ளி விட்டார்கள். உணவு ஊட்டும் நேரம் என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

உலக சுகாதார நிறுவனம், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு எந்தவிதமான திரை நேரத்தையும் பரிந்துரைக்கவில்லை. உணவு நேரத்தில் கைப்பேசியை மேஜையில் வைக்கக் கூடாது என்பது இங்குள்ள குடும்ப விதி. அமைதியான இசை, மெதுவான பேச்சு அல்லது ஒரு வேடிக்கையான விளையாட்டுடன் உணவு நேரத்தைத் தொடங்குகிறார்கள்.

இரண்டு வயது வரை எந்தத் திரை நேரமும் கூடாது என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் மூலமாக நேரடித் தொடர்பு மற்றும் வெளிப்புற உலகிலிருந்து குழந்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

குழந்தை தானே கண்டு, கேட்டு, ரசித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் திரையைப் பார்க்கலாம். உடற்பயிற்சி, தூக்கம், படிப்பு இவற்றுக்கான நேரத்தை திரையில் செலவழிக்கக் கூடாது என்பதைக் கடுமையாகப் பின்பற்றுகிறார்கள்.

பெரியவர்களும் எந்நேரமும் கைப்பேசியைப் பயன்படுத்துவதில்லை. ஓடி விளையாடும் வயதில் உள்ள குழந்தைகளை மைதானம் அல்லது சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் சென்று நன்றாக ஓடியாடி விளையாட வைக்கிறார்கள்.

மழை, குளிர்காலங்களில் குழந்தைகளை உற்சாகப்படுத்த வீட்டுக்குள் பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் தூண்டும் விதமாக விளையாட்டுகளை வடிவமைக்கிறார்கள்.

காகிதம், வண்ணங்கள் அல்லது மறுசுழற்சி பொருள்களைப் பயன்படுத்தி ஓவியம் வரைவது, வண்ணம் சேர்ப்பது, பொம்மைகள் செய்வது போன்றவற்றை செய்ய வைக்கிறார்கள்.

அறிதிறன்பேசி அறிவியல் கண்டுபிடிப்பில் ஒர் ஆகச் சிறந்த சாதனம். அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் அறிவு வானில் பறக்கலாம்; சிகரம் தொடலாம். முறையான பயன்பாடு முக்கியம். ஆகவே, எண்ம நேரத்தை பெரியவர்களும் குறைத்துக்கொண்டு குழந்தைகளையும் ஆக்கபூர்வமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தினால் அது வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முனைவோம்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com