வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடைவதற்கான தத்துவங்கள் அடங்கியுள்ளன.
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
Published on
Updated on
3 min read

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடைவதற்கான தத்துவங்கள் அடங்கியுள்ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமையான தனது இரண்டு அடிகளில் படிப்படியாக எடுத்துரைக்கிறது.

திருக்குறள் நெறிகளை தம்வாழ்வில் பின்பற்றி உயர்ந்தோர் ஆல்பர்ட் சுவைட்சர், லியோ டால்ஸ்டாய், லாசரசு, சார்லஸ் கோவர், விண்டர்னிட்சு, ஜி.யு.போப் ஆகியோர். அவருள் முதன்மையராகக் குறிப்பிடத் தகுந்தவர் மகாத்மா காந்தி. அவருடைய வாழ்வும் கொள்கைகளும் எக்காலத்துக்கும் ஏற்றவாறு அவர் பெயரிலேயே காந்தியம் என்னும் மரபாயிற்று. அது வள்ளுவத்தின் வேரிலிருந்து கிளைத்ததாகும். வள்ளுவம் உலகப் பொதுமறை ஆனதைப் போலவே காந்தியமும் உலகக் கொள்கையாக நிலைபெற்றுவிட்டது.

சர்வாதிகாரத்தின் கொடூரப் பிடிலிருந்து அடித்தட்டு மக்களை மீட்டுக் கொணரும் சமூகப் போராட்ட முறையாக மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே கிளைத்திருக்கிற அறியாமைகளிலிருந்தும், மடமைகளிலிருந்தும் தானே விடுதலை அடைய முயல்கின்ற அகப்போராட்ட முறையாக - அறப்போராட்ட முறையாகக் காந்தியம் அமைந்தது.

இதுவும் வள்ளுவத்தின் வெளிப்பாடே.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கூடவே இணைந்து வந்த கொடுங்கோன்மையும், அடக்குமுறையும் அறியாமையும் முற்றிலும் வில(க்)கிக் கொள்ளக் கிடைத்த பெருநெறியாகக் காந்தியம் தோன்றியது.

அறிவியல் வான்நோக்கி நீண்டு கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி மரபியலிலும் ஆன்மிகவியலிலும் ஆழ்ந்து கொண்டிருந்தார். உலகம் கணினியைக் கருவியாக்க முயன்று கொண்டிருந்த காலத்தில் இவர் கைராட்டையைக் கொண்டு புரட்சி செய்தார். அடிப்படையில் திருக்குறள்தான் உள்ளிருள் நீக்கும் விளக்காகத் தோன்றி மோகன்தாûஸ மகாத்மா ஆக்கியது.

வாழ்வின் பொருள் தெரியாமல் அலைந்த மோகன்தாஸுக்கு நல்ல வழிகாட்டு நூலாக அமைந்தது வள்ளுவம். இயல்பாகவே வள்ளுவத்தின் கொள்கைகள் சிலவற்றோடு அவர் ஒன்றியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை, அறவழிநிற்றல், இல்வாழ்வு, வாழ்க்கைத் துணைநலம், அன்பு, செய்நன்றிப் பாங்கு, நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை போன்ற குணங்கள் இயல்பாக இருந்தபோதும் கூடவே தீவினையச்சம், கள்ளாமை, புலால் மறுத்தல், வாய்மை முதலியவற்றைப் பின்பற்ற மோகன்தாஸ் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.

நாகரிகத்தின் பெயரால் மேற்கத்தியம் இந்திய மரபுகளைப் பழைமை என இகழ்ந்த வேளையில் எது சரி என்பதைத் தேர்ந்து கொள்ள இயலாமல் தவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் நேரும் சகல வாழ்வியல் அவலங்களும் சாதாரண மனிதனாக இருந்த மோகன்தாஸுக்கும் நேர்ந்தன.

அவர் தன்னை முதன்முதலில் வள்ளுவத்தின்வழி வாய்மைக்குள் வயப்படுத்திக் கொண்டார். முதலில் வள்ளுவத்தின் நெறியில் மோகன்தாஸ் என்னும் தனிமனிதர் தூய்மையானார்.

பிரிட்டனின் நாகரிகச் சூழல் அவர்தம் மரபார்ந்த இந்திய வாழ்வின் மேன்மையை உயர்த்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் அவருடைய தனிமனிதக் குணங்கள் பண்புகளாக மாற்றம் பெறுவதற்கு அடிப்படையாகவும் ஆயிற்று.

அவர் தம்முடைய அன்னைக்குச் செய்து தந்த சத்தியங்கள் மூன்றும் திருக்குறளின் அடிப்படை ஒழுக்க நெறிகளாகும்.

கள்ளுண்ணாமையையும் பிறன்மனை விழையாமையையும் மிக எளிதாகக் கடைப்பிடிக்க முயன்ற மகாத்மா காந்திக்கு, புலால் மறுத்தல் பெருஞ்சவாலாக அமைந்ததோடு அதன் மூலத்தைத் தேடும் ஆய்வாகவும் விளங்கிற்று.

தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால், தாழ்ந்த உயிரினங்களைத் தின்று மனிதன் உயிர் வாழ்வது எப்படி உயர்வுடையதாகும்? என்னும் வினா மகாத்மா காந்திக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

"தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது

ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்'

என்னும் வள்ளுவத்தின் வினாவே அது. இவ்வினா உணவின் அடிப்படையில் மட்டுமின்றி உணர்வின் அடிப்படையிலும் ஆறாவது அறிவினையும் கடந்த பேரறிவை நோக்கி உந்தியது.

சமூக வாழ்க்கைக்கு அவர் பழக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில்தான். அடக்குமுறைகளிலும், கொடுமைகளிலும் சிக்கித் தவித்த மகாத்மா காந்திக்குப் போராட்டத்துக்கான வழிமுறை எது என்ற தேடல் பிறந்தது. இந்தக் காலத்தில்தான் மகாத்மாக காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது.

1906-இல் சத்தியாகிரகப் போராட்ட முறையை (இன்றைய காந்தியத்தை) தொடங்கிய மகாத்மா காந்தி அதை எந்த வழியில் மேற்கொள்வது என்று தெரியாது திகைத்தார். அது குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு டால்ஸ்டாய் வழியாக வள்ளுவர் தெளிவாக தரிசனம் ஆனார்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய "ஓர் ஹிந்துவுக்குக் கடிதம்' என்ற கட்டுரையை மகாத்மா காந்தி தனது "இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் டால்ஸ்டாய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாண்டார்.

தனது தேடலுக்கு விடை கிடைத்து விட்டதாய் மகிழ்ந்த மகாத்மா காந்தி, தனது கொள்கைகள் வள்ளுவத்தை ஒத்திலங்குவதை அறிந்து பேரூக்கத்துடன் அதையே பின்பற்றலானார்.

வள்ளுவத்தில் கூறப்பெற்றுள்ள சான்றாண்மையாளனுக்குரிய தகுதிகள் யாவும் காந்தி வகுத்த சத்தியாகிரகிக்கான குணநலன்களோடு வெகுவாக ஒத்திருப்பதைத் திருக்குறளையும் சத்தியசோதனையையும் ஆய்ந்து உணரலாம்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியைச் சூழ்ந்து காத்து நின்றவர்கள் தமிழர்கள் என்றும், அவர்கள் இயல்பிலேயே தமிழிய இந்திய மரபுகளை (வள்ளுவம்) பெற்றிருந்தார்கள் என்றும், அதுவேதான் போராட்டத்தில் வெற்றியடைய வழிகோலியது என்றும் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக நூலின் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் குறித்து தாம் மேலும் அறிந்தவிதமாக, 1935-இல், ஹரிஜன் இதழில் திருக்குறள் குறித்து "தமிழ் மறை' என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளார் மகாத்மா காந்தி.

"திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் - திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம். ஏரியலால், "மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,' என்று போற்றப்பட்டது. இதில் 1,330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன் மற்றும் பிற சேவைகளுக்காக சேர்மாதேவி (சேரன்மகாதேவி) ஆசிரமத்தை நிறுவிய, அமரர் வ.வே.சு.

ஐயர் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். வாசகர்களின் ஹரிஜன அன்பைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன் என இரண்டு குறள்களையும் தருகிறார். அவையும் காந்தியத்தின் உயிர்நாடியான கோட்பாடே எனலாம்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலைத் தமிழில் படிக்க வேண்டும். அதற்காகவே நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும் என்னும் மகாத்மா காந்தியின் உள்ளம்

வள்ளுவத்தை எத்தனை ஆழமாகச் சிந்தித்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.

காந்தியக் கொள்கைகளில் தலையாய தமிழராக விளங்கிய நாமக்கல் கவிஞர்,

தெள்ளு தமிழுயிர் வள்ளுவம் வாழ்க

மார்க்கிஸ் காந்தி மார்க்கம் வெல்க

திருவறம் வளர்க அருளறம் வெல்க

என்று மூன்றையும் வரிசைப்படுத்தி வாழ்த்துகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் இலக்காக்கிய அருளாட்சியை மகாத்மா காந்தி தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார்.

அத்தகு அருளாட்சி என்றும் தொடருமாயின், இந்த உலகத்தின் இன்னலெல்லாம் மறைந்து விடும் என்று திரு.வி.க.

நிறைமொழி கூறுகிறார். இதையே, செய்தற்கு அரிய செயல் செய்து புகழ் பெற்றுத்

தெய்வமே ஆயினான் சீர்க்காந்தி-

பொய்யறியீர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் என்று தமிழ்க்கடல் ராய.சொ. உறுதிப்படுத்திப் பாடுகிறார்.

தெய்வத்துள் வைக்கப்படுகின்ற உயர்ந்த வாழ்வியலை வள்ளுவர் வகுத்துக் காட்டினார். அது வள்ளுவம் என்றாயிற்று. சாதாரண மனிதராகத் தோன்றிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த உயர்ந்த வாழ்வியல் வழியிலே வாழ்ந்து காட்டி மக்கள் மனத்துள்ளெல்லாம் நிலைத்து நிற்கும் "மகாத்மா' என்னும் பெருநிலைக்கு உயர்ந்தார். ஆதலால், வள்ளுவர் வழியிலேயே காந்தியடிகளின் வாழ்வும் நிகழ்ந்தது; என்றும் இந்த உலகத்தையும் வழிநடத்துகிறது; நாமும் வழிநடப்போம்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com