

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
உட்கார்ந்தே இருப்பது புகைபிடிப்பதற்கு இணையான தீய பழக்கமோ, அதேபோல், அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவது என்பது போதைபோல் அடிமையாக்கி, நங்கூரம்போல் இளையோர்களின் வாழ்வை முடக்கிவிட்டது.
முன்பெல்லாம் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் உரையாடுவது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, பத்திரிகைகளை வாசிப்பது, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து காண்பது என்று இருந்த நமது சமூகம் இன்று முற்றிலும் மாறி விட்டது.கைப்பேசி உபயோகம் என்பது தவழும் குழந்தை முதல் வயது முதிர்ந்தோர்வரை ஒரு பொதுவான விஷயம்தான் என்றாலும், எத்தனை நேரம் பயன்பாடு, எதற்காகப் பயன்பாடு என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.
இன்று அனைவரும் அறிதிறன்பேசிகளையே விரும்புகின்றனர். அதில் இணைய இணைப்பு உள்ளிட்ட பிற வசதிகள் இருப்பதால் அவை மக்களை அதிகம் கவர்ந்துள்ளன.
இந்த அறிதிறன்பேசிகளையும் சுமார் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். குறைந்த எடை, மெலிதான தோற்றம், பாக்கெட்டில் வைக்கும் அளவு, அதற்கு திரைப் பாதுகாப்பு கண்ணாடிகள், பின்புற அலங்காரங்கள், ஹெட்போன்களும் தேவைப்படுகின்றன.
ஓர் அறையில் இருந்து அடுத்த அறைக்கு செய்தி, அழைப்பு இன்று பல வீடுகளில் கைப்பேசி வாயிலாகவே நடைபெறுகிறது. ஆளுக்கு ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு, அதில் நேரத்தை தொலைத்து நிற்கிறார்கள்.
ஒரு பொருளைப் பயன்படுத்துதல், அதிகமாகப் பயன்படுத்துதல், மிக தீவிரமாகப் பயன்படுத்துதல், தவறாகப் பயன்படுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அதீத பயன்பாடு மூலம் அடிமையாதல் என்று கைப்பேசி உபயோகிப்போரை வகைப்படுத்தலாம். எப்படி பலர் அடிமையானார்கள் என்றால் சாப்பிடும் போதும், கழிப்பறையில், குளிக்கும்போதும், வாகனம் ஓட்டும்போதும், அலுவலகத்தில் பணியாற்றும்போதும், குழந்தைக்கு உணவூட்டும் போதும், கணவரோ மனைவியோ
அருகில் வைத்துக் கொண்டு, யாருடனும் பேசாமல் பழகாமல், சுற்றி நடப்பதைக் கவனிக்காமல் கைப்பேசியில் மூழ்கி அடிமையாகி விட்டார்கள். இவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கற்பனை இழத்தல், சுயத்தை இழத்தல், உறவை} நட்பை இழத்தல், நேரத்தை இழத்தல், செய்கிற வேலைகளை தவறாகச் செய்தல், எதையும் கவனிக்காது இருத்தல் என்று கைப்பேசியை அதிக அளவில் பயன்படுத்துவோரின் மனநிலை, நடத்தை பெருவாரியாக மாறியுள்ளது. இதனால், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை எல்லாமே பாதிக்கப்படுகிறது.
எந்தப் பொருளின் அதிகப்படியான பயன்பாடும் சலிப்பையும் அலுப்பையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. ஏதோ ஒன்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக இணையத்தில் நுழைபவர்கள் கற்றுக்கொள்வதும், அறிந்துகொள்வதும் வேறு என்று புரிந்துகொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு மூலம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தமது சொந்த ஆற்றல், திறமை எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இழந்து வருகிறார்கள்.
நிறுவனத்தின் கொள்கை, முதல் தகவல் அறிக்கை, நிறுவனங்களுக்குள் ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், புத்தக அட்டைப்படம், திரைப்படத்தின் கதை வசனம், பாடலுக்கு இசை, நோய்க்கு மருந்து, காதலிக்கு கடிதம், விவாகரத்து செய்ய யோசனை என்று எதுவாயினும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை சார்ந்து இருக்கின்றனர்.
மனநோய் வந்ததுபோல், இரவு} பகல் பாராமல், உண்ணாமல் உறங்காமல் சதாசர்வ காலமும் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக்கொண்டு, தானே பேசிக்கொண்டு, தானே சிரித்துக்கொண்டு இருப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கைப்பேசியில் மின்னூட்டம் குறைந்தாலோ, ரீசார்ஜ், டேட்டா பயன்பாடு முடிந்து விட்டாலோ பித்து பிடித்தவர்கள் போல ஆகி விடுகின்றனர். அதீத கைப்பேசி பயன்பாட்டால் மாணவர்களில் பலரும் படிப்பில் பின்தங்கி விடுகிறார்கள். பணியாளர்களில் சிலர் கவனச்சிதறலால் தவறுகள் செய்து வேலையை இழக்கிறார்கள். சிலர் எதிர்பாராத விபத்தில் சிக்குகிறார்கள். நமது கண்கள்தான் இன்று அதிகம் நுகரும் கருவியாக உள்ளது. இதனால், சிலருக்கு பார்வைச் சிக்கலும் ஏற்படுகிறது.
சமச்சீர் உணவுபோல், வாழ்விலும் சரியான விகிதத்தில் நாம் இருக்க எண்ம (டிஜிட்டல்) டயட் என்பது தேவையாகிறது. கைப்பேசிகளை அதீதமாக உபயோகிப்பவர்கள் மனநல ஆலோசகர்களின் உதவியுடன் இந்தப் பழக்கத்திலிருந்து மீள வேண்டும்.
பிரார்த்தனை, யோகா, தியானம், பாடல்கள் கேட்டல், இயற்கையை ரசித்தல், பூங்காக்களுக்கு செல்லுதல், நண்பர்களோடு உரையாடுதல், உறவினர்களின் இல்லம் செல்லுதல் என எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி சீரான முறையில் நமது வாழ்வை செதுக்கிக் கொள்வது சரியான தீர்வு.
கத்தியால் கனியையும் நறுக்க முடியும்; கையையும் நறுக்க முடியும். கைப்பேசி பயன்பாடு நமது வாழ்வைச் செதுக்கப் பயன்பட வேண்டும். நம்மை உலகில் இருந்து ஒதுக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறைந்த அளவு தேன் பயன்பாடு என்பது மருந்தாகும்; அதுவே அதிக அளவில் என்றால் தேனும் நஞ்சாகும்.
விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.