கேரளத்தில் ஓர் ஆய்வு நிறுவனம் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை இணையவழியில் ஒன்பது நாள்களுக்கு நடத்தியது. கேரளத்தை மையப்படுத்தி குறிப்பாக, "குன்றாவளம் கொண்ட கேரளத்தை உள்ளாட்சி மூலம் வளர்த்தெடுப்பது' என்ற தலைப்பில் விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தக் கருத்தரங்கில் 8-ஆவது நாள் "மைய மாநில உள்ளாட்சி உறவுகள்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அன்றைய தினம் கேரளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் மையக் கருத்தாக, இன்றைய நிதி ஆழ்கையில் உள்ள முரண்பாடுகளையும், குறைபாடுகளையும் கடந்தகால வரலாற்றை வைத்து புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அவரே ஒரு பொருளாதார பேராசிரியர் என்பதால், மிக ஆழமான ஒரு பதிவை செய்து, தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை செம்மையாக நடைமுறைப்படுத்தி சமூக- பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நீதி மறுக்கப்படுவதை எடுத்துவைத்தார்.
அதில் ஒரு மையக் கருத்தையும் முன்வைத்தார். மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் மாநில அரசுகள் மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளும் பாதிப்பைச் சந்திக்கின்றன. மத்திய மாநில உறவுகள் என்று விவாதம் செய்கிறபோது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் ஒன்றை மறந்து செயல்படுகின்றன. மாநிலத்துக்கு கீழ் ஓர் அரசு அரசமைப்புச் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுவிட்டதைக் கணக்கில் கொண்டு உள்ளாட்சிக்கான நிதிப் பங்கீட்டில் உள்ள சிக்கல்களை, புறக்கணிப்புகளை விவாதிப்பதில்லை.
இதில் உள்ளாட்சிகள் மட்டும் சிரமத்துக்கு உள்ளாகவில்லை. உள்ளாட்சியால் நன்மைகளைப் பெறும் கடைக்கோடி மனிதர்களும் பாதிப்படைகின்றனர் என்ற உண்மையை விளக்கினார். பொருளாதாரம் படித்தவர்களுக்கு அதைப் புரிந்துகொள்வது எளிது.
அடுத்து, இரு பொருளாதார ஆய்வறிஞர்களும் நிதிப் பங்கீட்டில் உள்ள கண்ணோட்டங்கள் குறித்து விளக்கினர். அடுத்து என்னையும், எனக்குப் பிறகு இருவரையும் உரையாற்ற அழைத்தனர். நாங்கள் மூவரும் நிதிப்பங்கீட்டைக் கடந்து ஒட்டுமொத்த மத்திய- மாநில உள்ளாட்சி உறவில் உள்ள சிக்கல்களைப் படம் பிடித்தோம். பொருளாதார நிதிப் பங்கீட்டில் உள்ள பாகுபாடுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசு ஆளுகைக் கட்டமைப்பில் உள்ள முரண்களை நாம் முறையாகப் புரிந்து விவாதிக்கவில்லையானால் இந்த விவாதத்தை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் உள்ள குறைபாடுகளுடன் நிறுத்தி விடுவோம்.
எனவே, ஓர் அடிப்படையிலிருந்து இந்த விவாதத்தை நாம் தொடங்க வேண்டும். நம் அரசமைப்புச் சாசனத்தை பின்புலத்தில் வைத்து நம் அரசுகள் செயல்படவில்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தோம். இந்திய அரசமைப்புச் சாசனம் அடுக்குநிலை அரசாக உருவாக்கப்படவில்லை; மூன்று அரசுகளும் ஒன்றின்மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்தாமல் மூன்றும் இணைந்து மக்களை நோக்கிச் செயல்பட வேண்டும்.
இந்த அரசமைப்புச் சாசனம்தான் ஆளுகைக்கு வழிகாட்டும் அடிப்படை சாசனம். அதில் ஒரு அடிப்படைக் கருத்து மையப்படுத்தப்பட்டுள்ளது; அதுதான் அடிப்படைக் கட்டமைப்பு; அதில் கூட்டாட்சி என்பது ஒரு கூறு.இந்திய அரசாங்க அமைப்பு மாநிலங்களின் தொகுப்பு என்று அரசமைப்புச் சாசனம் கூறுகிறது. அந்த அடிப்படையில்தான் இதைக் கூட்டாட்சி என்று அழைக்கிறோம். இதில் இரண்டு அரசுகள் இணைந்து மக்களுக்குப் பணி செய்கின்றன. 73-ஆவது மற்றும் 74-ஆவது அரசமைப்புச் சாசன திருத்தச் சட்டங்கள் வந்த பிறகு, மூன்றாவதாக ஓர் அரசு உருவாக்கப்பட்டுள்ளது. அது அரசமைப்புச் சாசனத்தில் பகுதி ஒன்பது, மற்றும் ஒன்று (அ) என்று சேர்க்கப்பட்டுவிட்டது.
மக்களுக்குப் பக்கத்தில் உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டு முதல் அரசாக நிற்கிறது. இது உருவான பிறகு, இந்தக் கூட்டாட்சியில் ஒரு புதுத் தன்மை உருவாகியிருப்பதை நாம் யாரும் கணக்கில் கொள்வதில்லை. இனிமேல் மத்திய, மாநில உறவுகளுடன் ஆளுகை நிற்க முடியாது; மத்திய, மாநில உள்ளாட்சி உறவுகள் என்ற நிலையில்தான் அரசுகளின் அனைத்துச் செயல்பாடுகளும் பார்க்கப்பட வேண்டும்;
முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அது நிதிப் பங்கீடு மட்டுமல்ல, அதிகாரப் பங்கீடு-நிர்வாகக் கட்டமைப்பு என அனைத்தையும் இந்த புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். மாநில
அரசுக்கு நிதிப் பங்கீடு பேசும் மாநில அரசுகள் மத்திய அரசின் பங்கீட்டு நிதியில் உள்ளாட்சிக்கும் பங்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தை அரசமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ளது என்பதை எவரும் விவாதிப்பதில்லை.
கூட்டாட்சிக்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. அதை மக்களாட்சி அனைவருக்கும் தரும். எனவே, முதலில் மக்களாட்சியை வலுப்படுத்த வேண்டும். மக்களாட்சி என்பது தானாக வளர்வது கிடையாது. அதை முயன்று வளர்த்து பக்குவப்படுத்த வேண்டும். இன்று நம் நாட்டில் மக்களாட்சி நடைபெறுவதாக நாம் பிரகடனப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் அதில் நமக்கொரு உண்மை விளங்கும்; அதாவது, மக்களாட்சிக்குத் தேவையான உண்மை நம் அரசியலில் இல்லை என்பது.
இந்தியாவில் மத்திய அரசு தனக்கென ஒரு பட்டியலில் 100 பொருள்களின்மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளன. மாநிலத்துக்கு ஒரு பட்டியல் அதில் 61 பொருள்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது மாநில அரசு. இந்த இரண்டு அரசுகளும் தேவையின் அடிப்படையில் முடிவெடுக்க ஒத்திசைவுப் பட்டியல் என அதில் 52 பொருள்களை வைத்துள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள பொருள்களில் முடிவெடுக்கும்போது முரண்பாடு வந்து விட்டால், மத்திய அரசின் முடிவு இறுதியானது. எனவே, 152 பொருள்களிலும் மத்திய அரசு முடிவெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
உள்ளாட்சிக்கு 11, 12-ஆவது அட்டவணையில் 29 பொருள் மற்றும் 18 பொருள் பட்டியலைக் கொண்டு முடிவெடுத்துச் செயல்பட வேண்டியுள்ளது. மூன்றாவது அரசாக வந்த பிறகு அதற்கான ஒரு பட்டியல் என்றுதானே வரவேண்டும். அது ஏன் வரவில்லை? உள்ளாட்சி இன்றும் மாநில அரசுப் பட்டியலில் உள்ளது என்று விவாதிப்பது அரசமைப்புச் சாசனத்தில் அடிப்படைக் கட்டமைப்பை கேள்விக் குறியாக்குகிறது. இந்தக் கருத்தை விவாதப் பொருளாகக்கூட பொது விவாதங்களில் நாம் கொண்டுவருவதில்லை.
இந்தப் புதிய உள்ளாட்சி குறித்து நாம் விவாதிக்கும்போது அது ஓர் அரசு. அது இன்று அரசமைப்புச் சாசனத்துக்குள் கொண்டுவந்து ஆளுகையையும், மக்கள் பங்கேற்பையும், மக்களாட்சி விரிவாக்கத்தையும், குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டையும், சமூக நீதியையும் மையப்படுத்தியுள்ளது. அத்துடன்
நம்முடைய பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு வலுவூட்டவும், பங்கேற்பு மக்களாட்சியாக மக்களாட்சியை விரிவுபடுத்தும் குறிக்கோளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த உள்ளாட்சியும் மத்திய, மாநில அரசுகள்போல் அதிகாரத்தை அரசமைப்புச் சாசனத்திலிருந்து பெறுகின்றன.
ஆனால், அப்படி இந்த அரசு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான வழிகாட்டுதலைச் செய்யும் மத்திய நிதி ஆணையமும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் அரசமைப்பு சாசனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்காமல் மத்திய, மாநில உறவில் உள்ளாட்சி என்பது மத்திய- மாநிலத் திட்டங்களை நிறைவேற்றும் ஒரு முகமைபோல் பார்ப்பதுதான் ஒரு வினோதம்.
இன்றைய கூட்டாட்சியில் நடைபெற வேண்டிய நிகழ்வு மத்திய, மாநில அரசுகளின் ஒத்திசைவு செயல்பாடுகள். ஆனால், இன்று அது ஒட்டுமொத்த முரண்பாட்டில் செயல்படுகின்றன. இதே உறவு முறையைத்தான் மாநில- உள்ளாட்சி அரசுகளின் செயல்பாடுகளிலும் பார்க்க முடிகிறது. மாநில அரசு உள்ளாட்சியின் மீது நம்பிக்கைகொண்டு செயல்படுவதில்லை.
கிராம, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். இன்றைய சூழலில் கிராம உள்ளாட்சிகள் அடிப்படையில் ஒரு வலுவான கட்டமைப்பைப் பெற்றுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இன்னும் அதிகாரிகள் வசமே உள்ளன.
உள்ளாட்சி கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. மத்திய அரசில் கிராமப்புற, நகர்ப்புற மேம்பாட்டுக்கு தனி அமைச்சகங்கள் இருக்கலாம், தவறில்லை. அதே நேரத்தில் ஒட்டுமொத்த உள்ளாட்சிக்கும் ஒரே அமைச்சகம் இருக்க வேண்டும். அதுபோல், மாநிலத்திலும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஆளுகை, நிர்வாகக் கட்டமைப்புகள் வலுவாக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சிக்கான நிதி உருவாக்கலில் தனியாக உள்ளாட்சிகளுக்கு வரிச் சுதந்திரம் வழங்கப்பட்டு அதை உருவாக்க உள்ளாட்சிகள் பணிக்கப்பட வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் இரண்டும் ஒன்றாக்கப்பட்டு அனைத்துவித தேர்தல்களையும் அந்த ஆணையமே நடத்த வேண்டும்.
மக்களின் பங்கேற்பின்றி இந்திய நாட்டின் மேம்பாடு சாத்தியமில்லை. அதேபோல், வேற்றுமைகள்-வேறுபாடுகள் கொண்ட இந்திய சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளுக்கு, உள்ளாட்சியைத் தவிர வேறு எந்த அமைப்புகளும் தீர்வைத் தராது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த மக்களைத் தயார் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.