தடை செய்யப்பட்ட இருமல் மருந்து
தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகோப்பிலிருந்து எடுக்கப்பட்ட படம்

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

Published on

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நீா்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

2022-ஆம் ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும், 2023-ஆம் ஆண்டு கேமரூன் நாட்டிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனா். குழந்தைகளின் மரணங்களும் நீா்ம மருந்துகளில் கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மாசுகளும் இந்திய மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை கண்காணிப்பில் தீவிர குறைபாடு இருப்பதையே காட்டுவதாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.

டைஎத்திலின் கிளைகோலின் நச்சுத்தன்மை விளைவுகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், அதை உட்கொண்டதாகக் கருதப்படும் நோயாளிகளுக்கான நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் சவாலாக உள்ளன. இதனால், சிகிச்சை அளிப்பதிலும் நச்சுக்கான மாற்று மருந்து வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அறியாமையையும் அக்கறையின்மையையும் அகற்றி டைஎத்திலின் கிளைகோல் நச்சுத்தன்மை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் குறித்த விழிப்புணா்வை மருத்துவா்களுக்கு ஏற்படுத்துவது அரசின் கடமை. இதற்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உடனடியாக வலுப்படுத்துவது அவசியம்.

இந்தியாவின் மருந்துச் சந்தையில் சில நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தி நடைமுறையின் கீழ் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், மலிவான நச்சுத்தன்மையுள்ள கரப்பான், கரை திரவங்கள், பொதி பொருள்கள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்துகின்றன.

குறைந்த விலை மருந்துகளுக்கான சோதனை, தரக்கட்டுப்பாடு பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவதில்லை. நாடு முழுவதும் 29 மருந்து சோதனை ஆய்வகங்கள் மத்திய அரசின் கீழும் 8 ஆய்வகங்கள் மாநில அரசின் கீழும் செயல்படுகின்றன. குறைவான ஆய்வகங்களைக் கொண்டு மருந்து விநியோகச் சங்கிலியில் நிகழும் பாதிப்புகளைக் கண்டறிவது கடினம் என்றாலும் சாத்தியமற்றது அல்ல.

1940-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் சட்ட விதிகள் நவீன சவால்களுக்குப் பொருந்தாத வகையில் உள்ளன. இந்தச் சட்டத்தின் விதிகள் மீறப்படும்போது வழங்கப்படும் தண்டனைகளில் கடுமை இல்லை. இந்தச் சட்டத்தில் மருந்தகக் கண்காணிப்பு, எண்ம (டிஜிட்டல்) கண்காணிப்பு, நிகழ்நேர மருந்து தரக் கண்காணிப்பு போன்ற முக்கிய அம்சங்களுக்கான விதிகள் இல்லை.

இந்தச் சட்டம் ஏற்றுமதிக்கான தரச் சான்றுகளையும் போதுமான அளவில் ஒழுங்குபடுத்தவில்லை. பொது சுகாதார அவசரகால நடவடிக்கைகள்மூலம் தரமற்ற, போலியான மருந்துகளை விரைவாக திரும்பப் பெறுவதற்கான அமைப்பு விதிகள் இல்லை. இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்ய மருந்துகளுக்கான சட்டங்களைத் திருத்துவது அவசியம்.

ஆய்வுகளுக்கான தொழில்நுட்பத் திறனும் பயிற்சி பெற்ற மனித வளம் உள்ளிட்ட வளங்களும் மாநில மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளில் குறைவாக உள்ளன. மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இடையே நிலவும் சீரற்ற, முரண்பட்ட ஒருங்கிணைப்பு, சட்ட அமலாக்கக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைகிறது.

சட்ட விதிகளை சரியாக நிறைவேற்றுவதற்கு ஏற்படும் செலவைவிட விதிமீறல்களுக்கான அபராதம் மிகக் குறைவாக இருப்பதால், மருந்து நிறுவனங்கள் விதிகளை மீறுவதில் தயக்கம் காட்டுவதில்லை. தண்டனை விகிதங்கள் குறைவாகவும், வழக்குத் தொடுக்கும் நடைமுறைகள் மந்தமாகவும் இருப்பதால் விதி மீறல் தடுப்பு நடவடிக்கைகள் வலுவடைந்துள்ளன.

நிறுவனங்கள், மருந்துகள் குறித்த வெளிப்படைத்தன்மை, ஒழுங்காற்று கட்டுப்பாடுகள், ஆய்வறிக்கைகள், சந்தேகிக்கப்படும் மருந்துகளின் சோதனை முடிவுகள் அரிதாகவே பொதுமக்களிடையே பொதுவெளியில் வெளியிடப்படுகின்றன. உரிமம், ஒப்புதல் பெறுவதற்கான ஊழல், அரசியல் பரிந்துரைகள் ஒழுங்குமுறை நம்பகத்தன்மையைச் சீா்குலைக்கின்றன.

மருந்து மேலாண்மையில் நோய்த்தொற்று அறிவியல் (எபிடடியாலஜி) கோட்பாடுகளின் குறைந்த அளவு பயன்பாடு இந்தியாவில் மருந்து ஒழுங்கு முறைக்கான மிகப்பெரிய தடையாகும். நோய் பரவுதல் குறித்த தரவுகள் இல்லாத நிலையில் மருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் நோய்த் தடுப்புக்குப் பதிலாக எதிா்வினையையே ஆற்றும்.

விழிப்புணா்வும் ஊக்கமும் இல்லாத காரணத்தால் மருத்துவா்கள், மருந்தாளுநா்கள் மருந்துகளின் எதிா்வினை (அட்வா்ஸ் எஃபெக்ட்) குறித்த அறிக்கைகளை அரிதாகவே சமா்ப்பிக்கின்றனா். மருந்துகள் ஏற்படுத்தும் சிக்கல்களை யாரிடம் எப்படி புகாா் அளிப்பது என்பது குறித்து பெரும்பாலான நோயாளிகளுக்குத் தெரியாது. மருந்து ஒழுங்குமுறை தரவு தளங்களுடன் ஒருங்கிணைக்கப்படாத நிகழ்நேர நோய் பரவுதல் தரவுகள் பொதுவாகப் பகிரப்படுவதில்லை.

இந்தியாவில் மருந்தக முன்னாய்வு பரிசோதனை (கிளினிக்கல் ட்ரையல்ஸ்) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மருந்துப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது. சந்தைப்படுத்தப்பட்ட பிறகு, அந்த மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளிலும் கண்காணிப்பிலும் முக்கியத்துவம் அளிக்கப்படாதது துரதிருஷ்டம்.

X
Dinamani
www.dinamani.com