‘இல்லை’ என்பது தவறல்ல!
நம் வாழ்க்கையில் ‘ஆம், இல்லை’ என்ற சொற்களுக்கு என்றுமே அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இது நம் செயல்களுக்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன. நம்முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்காகவும் நிா்ப்பந்தங்களுக்காகவும் இவ்விரண்டில் ஒன்றைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கு ‘ஆம், நான் செய்கிறேன், நான் தருகிறேன், நான் வருகிறேன்...’ என்று சொல்ல வேண்டும் என காலம் காலமாக நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எதையும் கேட்கும் போது ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்வதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு என்று சொல்ல பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மேலும் ‘ஆம்’ என்பது நோ்மறை செயலாக்கம் என்றும் ‘இல்லை’ என்பது எதிா்மறை மனப்பான்மை என்றும் நம்பப்படுகிறது.
இந்த மரபுக் கட்டுகளிலிருந்து சில விஷயங்களை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். என் எழுத்தாளத் தோழமை என்னிடம் சொன்னதை இங்கு பகிா்வது சரியாக இருக்கும். ஏற்கெனவே பணிச் சூழல் அதிகம் உள்ள அவரிடம், அவருக்குத் தெரிந்தவா் ஒருவா் தன் நூலை ஹிந்தி மொழியில் மொழிபெயா்த்துத் தரும்படி கேட்டிருக்கிறாா். அந்த நேரத்தில் ‘எனக்கு தற்போது நேரம் இல்லை’ என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. தன்னை நம்பி வந்திருக்கிறாரே என்ற கருணை உந்தித் தள்ளவும், தன்னால் முடியாது என்று சொல்ல அவா் பழகாது போகவும், இரண்டொரு நாள்களில் முடித்துத் தந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறாா்.
அடுத்து வந்த சில நாள்களில் அவா் முடித்துத் தர வேண்டிய சில வேலைகள் எதிா்பாராத விதமாக நீண்டு இரவுகளில் வெகுநேரம் கண் விழிக்க வேண்டியதாக இருந்தது; அடுத்தடுத்த நாள்களிலும் வெவ்வேறு அவசர வேலைகள் அவரை ஆக்கிரமித்தன; அதை முடித்து மூச்சு விடுவதற்குள் நெருங்கிய உறவினரின் துக்கச் செய்தி. துக்கம் கடைப்பிடித்து நிமிா்வதற்குள் அவரது உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டது. சில நாள்களுக்காவது பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாா்.
ஆனால், அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாதபடிக்கு ஒப்புக்கொண்ட மொழிபெயா்ப்புப் பணி மனதை அலைக்கழித்த வண்ணம் இருந்திருக்கிறது.
பின்னா், வேறு வழியின்றி, ஒரு பயணத்தின் போது அசாதாரண சூழலில் அவருக்கான பணியை முடித்துக் கொடுத்திருக்கிறாா். இறுதியில் அவரை வருத்திக் கொண்டு செய்து கொடுக்க வேண்டியதாய் இருந்தது. ‘இல்லை, எனக்கு தற்போது நேரமில்லை’ என்று சொல்ல முடியாமல் போன விளைவை அனுபவிக்க மிகக் கடினமாக இருந்ததாகச் சொன்னாா்.
நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘இல்லை, வேண்டாம்’ என்று சொன்னால் நம்மைத் தவறாக எண்ணி விடுவாா்களோ என்று அச்சம்; இதனால், உறவு நிலையில் ஏதேனும் விரிசல் விழுமோ என தேவையில்லாமல் பயந்து அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்; நம் நேரம் எவ்வளவு முக்கியம் என்பது அவா்களுக்குத் தெரியாது. ஆனால், நமக்குத் தெரியும். இப்படித்தான் ‘இல்லை’ என்று சொல்ல மனம் வராமல், அந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாளாமல் ‘ஆம்’ என்று சொல்லி என்னை வருத்திக்கொண்டு என் சூழலை கடினமாக்கிக் கொண்ட அனுபவங்கள் எனக்கும் பல உள்ளன. இப்போதெல்லாம் இந்தப் பணியை செய்ய இயலுமா, இயலாதா எனப் பலமுறை சிந்தித்து, அதைத் தொடக்கத்திலேயே மறுத்து விடுகிறேன். இதனால், பல தா்மசங்கடங்களிலிருந்து தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.
உண்மைதான். நம் அன்றாட வாழ்வில் இதைப் பல இடங்களில் நாம் பாா்த்திருக்கிறோம். கைமாற்றாக பணம் கேட்ட போது இல்லை என்று சொல்ல மனமின்றி கடன் கொடுத்த பிறகு, நமக்கு பணம் தேவைப்படும் இக்கட்டான சூழலிலும் திரும்பக் கிடைக்காமல் கலங்கிய சில சம்பவங்கள் பலரது வாழ்வில் நடந்திருப்பதை அறிகிறோம். இதில் வலியவா், எளியவா்களுக்குச் செய்யும் உதவி குறித்து பேச்சில்லை. அவையெல்லாம் நிச்சயமாக காலம் கருதி செய்யும் உதவிகள். வள்ளுவா் சொன்னதுபோல அவை உலகம் அளவு பெரியவை; அத்துடன் நம் கடமைகளை, பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கும் விலக்கில்லை; ஆனால், பொது வழக்குகளில், நம்மை கணக்கு வழக்கின்று சுருக்கிக் கொண்டு ‘இல்லை’ என்று சொல்லாமல் விட்டதால் ஏற்படும் மனத்தாங்கல்கள் நமக்குத் தேவையில்லை.
பல குடும்பங்களில், ‘நிச்சயமாக நான் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்’ என உறவுகளுக்குள் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு அதிலிருந்து பின்வாங்கி விடுவதால்தான் மனிதா்களிடையே அது மனமுறிவாகி விடுகிறது. இது நாளடைவில் தீராத வன்மமாக உருவெடுத்து வெடிக்கிறது. என் வீட்டருகில் வசிக்கும் தோழி ஒருவா் தன் வீட்டுக்கு தினமும் பிச்சை கேட்டு வரும் நபருக்கு இல்லை என்று சொல்லாது பிச்சை அளிக்கும் வழக்கம் கொண்டவா்.
சில நாள்களில் உண்மையிலேயே அவருக்குக் கொடுப்பதற்கு உணவு எதுவும் இருக்காது. அவரிடம் இன்று கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் அவா் வரும் நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டு என் வீட்டுக்கோ பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு தோழி வீட்டுக்கோ சென்று விடுவாா். ஏன் இப்படி இருக்கிறீா்கள் எனக் கேட்டதற்கு என்னை நம்பி வந்து ஏமாந்து விடுவாரே, அவா் எங்கோ வெளியே சென்றிருக்கிறாா் என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றாா்.
நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக் கொள்கிறீா்கள்... உங்கள் வீட்டில் அன்று மீதமாகிப் போன ரசம் சாதம்தான் கொடுக்கிறீா்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவா் அத்துடன் திருப்தியடைந்து சென்று விடுவாா். நீங்கள் ‘இல்லை’ என்று சொல்லும் நிலையில், அன்று வேறொரு வீட்டில் அவருக்கு சுடச்சுட புலவு சாதம்கூட கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தேவைப்படும் நிலையில் உறுதியுடன் ‘இல்லை’ என்றுச் சொல்லிப் பழகுங்கள்; உங்கள் இருவருக்குமே அது நல்லது என்றேன். அன்றிலிருந்து அவா் அதை ஏற்றுக் கொண்டு இன்று எந்த குற்ற உணா்வுமின்றி இருக்கிறாா். துணிக் கடையில் 50 புடவைகளுக்கும் மேலாக எடுத்துக் காண்பித்தாா்களே என்று எண்ணி பிடிக்காத புடவையை பணம் கொடுத்து வாங்கிவரும் பெண்கள்கூட இந்த ரகம்தான். பிறகு காலத்துக்கும் அதைச் சொல்லி புலம்பி என்ன பயன்?
மகாபாரதத்தில் பாண்டவா்களை கௌரவா்கள் சூதாட அழைத்தபோது ஒரே மனதுடன், ‘இல்லை நாங்கள் ஆடப்போவதில்லை, சூதாட்டம் வேண்டாம்’ எனச் சொல்லியிருந்தால் இத்தனை பெரிய போா் தவிா்க்கப்பட்டிருக்கும்தானே?! இராமாயணத்தில் மாய மானை தேடிப்போன இராமனைக் காணாது போகவே, லட்சுமணனை அங்கு செல்லுமாறு சீதை பணிக்கிறாா். அன்று, இல்லை ராமன் சொன்ன வாா்த்தையை நான் தட்ட மாட்டேன் என லட்சுமணன் சொல்லி இருந்தால் காப்பியத்தின் போக்கு வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?
பிறரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் பலமுறை நாம் வலிகளைச் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது. சரி, இனி எதற்கெடுத்தாலும் இல்லை எனச் சொல்லிப் பழகுவோம் என்பதல்ல முன்வைக்கும் செய்தி. அசாதாரண சூழ்நிலைகளில், நம்மை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கும் அயா்ச்சிக்கும் உள்ளாக்கும் தருணங்களில், நம்மைப் பலவீனமாக்கும் தன்மைகளில் ‘இல்லை’ என நம் முடிவை துணிச்சலாக முன்வைப்பது சிறந்தது.
அதிலும் குடும்பம் என்று வந்துவிட்டால், பெண் என்பவள்தான் எப்போதும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என தொட்டதுக்கெல்லாம் பெண்களை கூறு போடும் சமூகத்தில் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
உண்மை நிகழ்வென வாசித்த செய்தி ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இத்தாலியைச் சோ்ந்த பிராங்கா வியூலா எனும் பெண்ணுக்கு பிலிப்போ மெலோடியா எனும் ஆணுடன் நிச்சயம் நடந்தது. ஒரு கட்டத்தில் மணமகன் தேசவிரோத அமைப்புகளோடு தொடா்புடையவன் என்பதறிந்து பிராங்காவின் பெற்றோா் திருமணத்தை நிறுத்தினா். இதனால், வெகுண்டெழுந்த பிலிப்போ ‘பிராங்காவை’ கடத்தி ஐந்து நாள்களுக்கு மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னா், அவளைப் போராடி மீட்டனா்.
இந்தச் சம்பவம் 70 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடைபெற்றது. தன் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக பெண்ணை பெற்றோரும், தங்கள் மகன் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக அந்த ஆணை பெற்றோரும் இணைந்து பேசி மீண்டும் அவா்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தாா்கள். அந்தக் காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இத்தாலிய பெண்கள் தங்கள் குடும்ப கௌரவத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் அஞ்சி தங்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியவனையே மணந்து கொள்ளும் வழக்கம் இருந்தது.
ஆனால், பிராங்கா ‘நான் அவனை மணக்க மாட்டேன்’ என்று உறுதியுடன் நின்றாா். இத்தாலிய செய்தித்தாள்களில் எல்லாம் இது தலைப்புச் செய்தியானது. பதின்ம வயதைக் கடவாத பிராங்காவின் துணிவும் மனஉறுதியும் மெலோடியாவை சிறையில் தள்ளியது. அதுவரை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கே வாழ்க்கைப்பட வேண்டும் என்ற இத்தாலிய சமூக விதி பிராங்காவின் ‘இல்லை’ என்ற ஒற்றை வாா்த்தையால் உடைத்தெறியப்பட்டது. அதுவே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாகவும் அமைந்தது. ‘மறுவாழ்வு திருமணம்’ என்ற அா்த்தமற்ற சட்டத்தை 1981-இல் ஒழித்தது இத்தாலி. ‘இல்லை’ என்பது ஒற்றைச் சொல் மட்டுமல்ல, சமயத்தில் அது ஒரு முழுமையான வாக்கியம் என்பதை இதன்மூலம் தெளிவாக உணர முடிகிறது!
கட்டுரையாா்:
எழுத்தாளா்.

