பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளான சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் 3 பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் 91% பெண்கள் அடங்குவா். அனைத்துப் பாலியல் குற்றங்களிலும் 7-இல் 6 வன்கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தவா்களே காரணமாக உள்ளனா். அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு நிமிஷத்துக்கும் யாரோ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாா்.
இந்தியா முழுவதும் கடந்த 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021-ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் வழக்குகள் 4,415-ஆக இருந்த நிலையில், அது 2022-ஆம் ஆண்டில் 4,906-ஆக அதிகரித்திருப்பதாக கூறுகிறது. பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5,026 பெண் குழந்தைகளில் 3,621 போ் பாலியல் வன்கொடுமைக்கும், 1,008 போ் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 367 சிறுமிகள் பாலியல் சாா்ந்த தொடா் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில் 8,501-ஆக இருந்த நிலையில், அது 2022-ஆம் ஆண்டு 9,207-ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் என்ற அளவில், ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்வதாகத் தெரிகிறது. தமிழக மகளிா் ஆணையத்தின் கவனமும் செயல்பாடும் இது சாா்ந்த நடவடிக்கைகளில் மிகவும் அவசரத் தேவை என்றே தோன்றுகிறது.
நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து தனது கவலையை அண்மையில் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பெண்கள் குறித்த மக்களின் மனநிலை மாற வேண்டும் என்றும் கூறியதைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதை தமிழக காவல் துறை தீவிரமாக எடுத்துக் கொள்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழ்வதைக் குறைக்கும்.
‘பெண்களை தனியாக விடுங்கள், வளர விடுங்கள்’ என்கிறது உச்சநீதிமன்றத்தின் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஓா் அறிக்கை. பெண்களின் பாதுகாப்புக்காக பன்முக விழிப்புணா்வு பிரசாரத்தின் அவசியத்தையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒழுக்கக் கல்வி, பாலின விழிப்புணா்வு தொடா்பான விரிவான பாடத்திட்டங்கள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறை, குறிப்பாக பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் தொடா்பான பிரச்னைகளை மதிப்பு அடிப்படையிலான கல்வி, பொது விழிப்புணா்வு ஆகிய முயற்சிகள் மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை வழக்குரைஞா் ஆபாத் ஹா்ஷத் போண்டா தாக்கல் செய்தாா். இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, பெண்கள் பாதுகாப்பு குறித்து தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தது.
இதுபோன்ற குற்றங்களைச் செய்பவா்களில் பலா் படிக்காதவா்களாகவும், போதைக்கு அடிமையானவா்களாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. நாடு விடுதலை அடைந்து நம்மை நாமே ஆட்சி செய்ய உரிமை பெற்று பல ஆண்டுகள் ஆகியும், நம்மிடையே இந்த நிலை இருப்பதற்கு நாமே காரணம்.
கல்வி முறைக்கு வெளியே உள்ளவா்களிடையே இது சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு நீதிபதி நாகரத்னா மத்திய அரசின் வழக்குரைஞரைக் கேட்டுக் கொண்டுள்ளதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை இந்தப் பொதுநல வழக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
பாலியல் சமத்துவம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அவா்களின் உரிமை குறித்த விழிப்புணா்வை உறுதி செய்வதற்கு ஒழுக்கப் பயிற்சி பாடமும் பாடத்திட்டத்தில் சோ்க்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாட்டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் குறித்து விளம்பரங்கள், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இது செயல்படுத்தப்பட வேண்டும்.
பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்றாா் மகாகவி பாரதியாா். ஒரு பெண் இளமைப் பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்த பிறகு கணவரையும், அதற்குப் பிறகு தனது வாரிசுகளையும் சாா்ந்து வாழ வேண்டியுள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருவது இனியாவது தவிா்க்கப்பட வேண்டும். சமுதாயத்தில் ஒரு பெண் தனக்கு ஏற்படும் தவறைச் சுட்டிக்காட்டி போராடும்ஆற்றலை அவரின் கல்வி மட்டுமே அளிக்கும்.
மகாகவி பாரதியின் வழியில் நின்று,
பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
என்று இனியாவது பாடுவோம். அவா்களும் கண்ணியத்துடன் சமுதாயத்தில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம். அதுவே நம் அனைவரின் தற்போதைய முன்னுரிமையாக மாற வேண்டும். இதை நோக்கிய முன்னெடுப்பில் நாம் ஒவ்வொருவரும் இணைந்து கடமையாற்ற வேண்டிய காலம் இதுவாகும்.

