

தமிழ்நாட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரிய திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. திமுக அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்கிற ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் உரிமை என்கிற போது ஓரணியில் நின்று தமிழர் உரிமை காப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.
எத்தனை பிரச்னைகள் எழுந்தாலும் தமிழர் உரிமை காப்பதில் அக்கறை செலுத்துகிற எவரையும் தமிழ்நாடும், தமிழக மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்த வகையில், மத்திய அரசு இதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்தாமல் தமிழ்ச்சங்கம் வளர்த்த பழம்பெருமை வாய்ந்த மதுரையிலும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழருடைய விருப்பம்.
20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட காரணத்தால் மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசின் விதிகள் தெரிந்தும்கூட இந்த நகரங்களின் சரியான மக்கள்தொகையையும், பிற விவரங்களையும் திமுக அரசு முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது.
மாநிலத்தில் வேகமாக வளர்ந்துவரும் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.
20 லட்சத்துக்கும் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, பாட்னா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதன்மூலம் மத்திய அரசு கோவையையும், மதுரையையும் சிறப்பு நிலையாகக் கருதி பரிசீலிக்க வேண்டும். சென்னை மெட்ரோ திட்டம் 1-இல் 55 கி.மீ. தொலைவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சராசரியாக 4 லட்சம் பேர் பயணித்துள்ள நிலையில், கோவையில் 34 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் தடத்தில் 5.9 லட்சம் பேர் தினமும் பயணிப்பார்கள் என்று கூறுவது அதீத மதிப்பீடாக இருப்பதாக மத்திய அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
உக்கடம் - ஹோப் கல்லூரி, கோவை சந்திப்பு-ராமகிருஷ்ணா மில்ஸ் உள்ளிட்ட தடங்களின் விவரங்களைக் குறிப்பிடும் அந்தக் கடிதம் 79 சதவீத சாலைகள், 20 மீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. சில இடங்களில் 15 மீட்டருக்கும் குறைவாக உள்ளன. எனவே, உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமாகாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோவை நகரின் மக்கள்தொகை 15.84 லட்சம் மற்றும் மதுரை நகரின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே என்று தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கையில் உள்ளதைக் குறிப்பிடும் மத்திய அரசின் கடிதம். மெட்ரோ ரயில் கொள்கை 2017-இன்படி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்குத் திட்டமிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மேலும், மெட்ரோ ரயில் திட்டங்கள் அதிக பொருட்செலவைக் கொண்டவை. நீண்டகால நிலைத்த தன்மைக்கு மிகக் கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து வசதி நகர்ப்புறப் போக்குவரத்து போன்றவை ஏற்கெனவே இயங்கி வருகிறது. ஆகவே, இவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏனென்றால், கோவையும், மதுரையும் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம். குருகிராம், புவனேஸ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருந்த போதும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து விரிவடைந்து வருகிறது. ஆக, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மிக அவசியமான ஒன்றாகும்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர். இது மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டு நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்கு பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் 16-ஆவது பெரிய மாநகரமாகும். 1804-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்தின் தலைநகராகத் திகழ்ந்தது. 1866-இல் நகராட்சித் தரம் வழங்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மும்பையில் பருத்தி தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் ஜவுளி வர்த்தகம் ஏற்றத்தைச் சந்தித்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்நகரம் குறைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. கோயமுத்தூர் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் (கிரைண்டர்), கோவை கோரா பருத்தி ஆகியவை இந்திய அரசால் புவிசார் குறியீடுகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் ஆடைத் தொழிலின் மையமாக இருப்பதால் இந்த நகரம் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நகர வரிசையில் இந்திய நகரங்களில் நான்காவது இடத்தையும், உலகளாவிய நகரங்களில் பதினேழாவது இடத்தையும் கோவை பிடித்திருக்கிறது; கல்வி அறிவு விகிதம் 89.23 சதவீதம் பெற்றிருக்கிற மாவட்டமாகும்.
மேற்கில் உள்ள பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கில் உள்ள சகல்பட்டி கணவாய்க்கும் இடையில் இருப்பதால் இது நீண்டகாலமாகவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே கருதப்படுகிறது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் கோவையைக் கைப்பற்றி அதை தங்கள் படைக்கலனாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோவன் என்ற அரசன் ஆட்சி செய்ததால் அவரது ஊர் கோவன்புதூர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் கோயமுத்தூர் என்று மருவியதாக வரலாறு சொல்கிறது. கோணியம்மன் கோயில் பெயரில் இருந்ததாகவும், பின்னர் போர் செய்வதையே தொழிலாகக் கொண்ட கோசர்கள் ஆட்சி செய்ததாலும் கோயமுத்தூர் என்ற வரலாற்றைச் சுமந்திருக்கிற கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்பதை மத்திய அரசு புரிந்துகொண்டு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாகும்.
அதைப்போலவே, மதுரையானது தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மற்றும் கல்வி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரையின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 68.1 சதவீதமாகும். தூங்கா நகரம் என்றும் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிற மதுரை பழைமையான நகரங்களில் ஒன்றாகும். வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. கீழடி நாகரிகம் வைகைநதிக் கரையில் தொடங்கி நதிக்கரை நாகரிகம் பண்பாட்டின் வளர்ச்சியை 3,500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த செழுமைமிக்க பண்பாட்டு நகரமாகும்.
சங்ககாலம் பாண்டியர்கள், நாயக்கர்கள், பல்லவர்கள் போன்ற பல்வேறு அரசுகளின் ஆட்சியைப் பார்த்துள்ளது இந்த நகரம். நான்மாடக்கூடல் நகரில் அன்னை மீனாட்சியின் அருள் பார்வையும், திருமலை நாயக்கர் மகாலும், தெப்பக்குளமும் தமிழ் இலக்கியங்களில் பொற்காலமான சங்க காலத்தில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டிருக்கிற நகரமாகவும்,
பாண்டியர்களின் தலைநகரமாகவும் கொண்டது மதுரை. பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழும் மதுரை ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மதுரை ஒரு மாநகராட்சியாக உருவானது.
இந்திய துணைக் கண்டத்தின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மைமிகு நகரம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்த பரப்பளவு கொண்ட அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரமாகும். 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டிருப்பதாக அறியப்பட்டாலும், சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான தொடர்ந்து மக்கள் வசித்துவரும் உலகின் சில நகரங்களில் ஒன்றுதான் மதுரை. தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புகொண்டு சங்ககாலம் முதல் பொ.ஊ.மு. 4- ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ.மு.
2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமை உடைய நகரமாகும் மதுரை. மெüரியப் பேரரசின் அமைச்சர் கெüடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் ஆகியோரின் குறிப்புகளில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது ஆகச்சிறந்த பெருமையாகும்.
சங்ககாலப் பாண்டியர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக ராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள் போன்றவர்களால் மதுரை ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாள்கள் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவில் 10 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் இங்குதான் நடைபெறுகின்றன. இத்தகைய வரலாற்றுப் பெருமைகளைச் சுமந்து கொண்டிருக்கும் மதுரைக்கும், கோவைக்கும் மெட்ரோ திட்ட ஒப்புதலை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது கடந்தகால வரலாறுகளின் நிலைத்த சாட்சிகளாக இருக்கின்றன. இவற்றை மத்திய அரசு தவிர்த்தால் தமிழர்களின் நீண்ட நெடிய வரலாறு மன்னிக்காது.
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.