

பொ. ஜெயச்சந்திரன்
கடந்த நவ.24-ஆம் தேதி அனைத்து சமூக ஊடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது மிகப் பெரிய ஆளுமையின் மறைவுச் செய்தி. கம்போடியாவில் நடைபெற்ற "கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன்' மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்றவர்தான் தமிழறிஞர் க.சிவகுருநாத பிள்ளை (சிவா பிள்ளை 83). இவர் இலங்கை யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி "எம் மொழியும் உயிரும் வேறு இல்லை' என வருங்காலச் சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க, ஆக்ஸ்ஃபோர்டு தமிழர் வரலாற்று வளாகத்தில், திருவள்ளுவரின் 183-ஆவது சிலையை நிறுவ ஏற்பாடு செய்தவர்களில் முக்கிய நபர்களில் ஒருவர்.
கடந்த 1990-களின் இறுதியில் இலங்கையின் வட கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கணினி வசதிகளும், மின்சார வசதிகளும் குறைவாக இருந்த காலகட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்ந்தார். தொலைதூர கிராமங்களுக்குச் சென்று கணினி விழிப்புணர்வு, தமிழ் தட்டச்சு, மென்பொருள் பயன்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொண்டு செல்வதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளார்.
பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழ்கிற பிரிட்டன் போன்ற நாட்டில் கற்பித்தலில் பல மொழிகளைப் பயன்படுத்துவது என்பது சிரமமான பணி. ஆட்சி மொழி என்பது வேறு, கற்றல் மொழி என்பது வேறு. அந்நாட்டில் அதிகமானோர் ஆங்கில மொழிதான் பேசுகின்றனர். ஆனால், கற்றல் செயற்பாட்டில் ஆங்கில மொழி முதன்மையாக இருந்தாலும், மாணவர்கள் தாங்கள் விரும்பிய மொழிகளைக் கற்கலாம்.
அங்கே பிரெஞ்ச், டச்சு போன்ற ஐரோப்பிய மொழிகள் நீண்ட காலமாகக் கற்பிக்கப்பட்டு வந்தாலும் தமிழ் போன்ற ஆசிய மொழிகளைக் கற்கும் வாய்ப்பை பிரிட்டிஷ் அரசு 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேசிய தமிழ் பாடத்திட்டத்தை கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகம் தலைமையின் கீழ் வெளியிட்டது. அதன் ஆக்கத்தில் ஒருவராக இருந்தவர்தான் சிவா பிள்ளை. கேம்பிரிட்ஜ் தேர்வுக் குழுவின் சபையால் மூன்று நிலையில் தேர்வுகள் நடத்தி அந்தச் சபை தமிழ் மொழிக்கு அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
பிரிட்டனில் ஏனைய ஐரோப்பிய மொழிகளுக்கு இருப்பதுபோல, தமிழ்மொழிக்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, 2006-ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டன் அரசுப் பள்ளிகளிலும், வார முடிவு நாளில் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் நடக்கும் தமிழ் பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டது. அவற்றில், கற்பிக்கும் ஆசிரியர் பலர் தாய்நாட்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர், சிலர் தமிழ் கற்பிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட சமூகத் தொண்டர்கள். ஆனாலும், அந்நாட்டுக்கு ஏற்றவாறு தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தன.
இதனால், அந்நாட்டு மாணவர்களிடம் அணுகும் முறைகள் ஆசிரியர்களிடம் காணப்படுவது மிகவும் குறைவாகக் காணப்பட்டது. இதற்கென பல பயிற்சிப் பட்டறைகளை அந்நாட்டு பல்கலைக்கழக ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டாலும் அதில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான். இதைக் கவனத்தில் கொண்ட சிவா பிள்ளைதான் கணினித் துறையில் தொடக்க காலம் முதல் கவனம் செலுத்தியதால், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் இந்தத் துறையைச் செயல்படுத்த வேண்டும் எனக் கருதி, முழுமையாகக் கற்றுக்கொண்டு அதன் வழியாகத் தமிழ் மொழியை கணினி மூலமாக புகுத்தி தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தியவர்.
பிரிட்டன் உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றும்போது, அவர் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டுமின்றி, ஒரு புனிதப் பாரம்பரியமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் மாணவர்களிடம் கொண்டு வந்தவர். அவர் உருவாக்கிய கணினி, தமிழ் சார்ந்த மாணவர்கள் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் எஸ்.ஓ.ஏ.எஸ். என்பது ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மொழி, கலாசாரம் மற்றும் சமூக அமைப்புகளை ஆராய்வதில் உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம். இப்படி மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் துறை மீட்டுருவாக்கக் குழுவின் தொடக்ககால உறுப்பினராக இருந்து அந்த முயற்சியை இடைவிடாமல் முன்னெடுத்துச் சென்று செயலாற்றியவர்.
எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், அவர் மனதில் இருந்தது எளிமை. அவரின் வீட்டின் கதவு என்றும் திறந்ததாய் இருந்தது.
இலங்கையில் பிறந்து, பிரிட்டனிலும் வளர்ந்தாலும் அவருடைய சுற்றுப் பயணங்கள் பெரும்பாலும் தமிழகத்தை நோக்கியே இருக்கும். தமிழின் வளர்ச்சிக்காக எந்நேரமும் பணியாற்றியவர். இன்னும் சொல்லப் போனால் அவர் சிவா பிள்ளை அல்ல; உண்மையான தமிழ்ப் பிள்ளை என்றுகூட சொல்லலாம். அவர் விதைத்த விதைகள் இன்று வேரூன்றி விளைந்து கொண்டிருக்கின்றன. அவரது பெயர் மொழிக்கான அன்பின் அடையாளம்; அவரது வாழ்வு அர்ப்பணிப்பின் பேராலயம்; அவரது செயல்கள் தமிழின் வரலாற்றின் அழியாத பக்கங்கள்.
எளிமை, நேர்மை, ஒழுக்கம். மனித நேயம்- இவை அனைத்தும் அவரது வாழ்வின் அடையாளங்கள். கடைசியாக கடாரம் கொண்டான் ராசேந்திர சோழன் விழாவைப் பற்றி அவர் நேரலையாக விளக்கம் அளித்த காணொலி. தனது இறுதி மூச்சு வரை தமிழ் மொழிக்காக உழைத்த பெருமகன் என்ற பெருமையைப் அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.