உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

மூலிகைகள் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகள் உயிர்க்காக்கும் புதிய நம்பிக்கைகள் என்பதைப் பற்றி...
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
Updated on
2 min read

ஆட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400'இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய்கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

கிமு. 520 'இல் 'அடோசா' எனும் பாரசீக பேரரசிக்கு முதன்முதலில் புற்றுநோய் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மார்பகத்தில் தோன்றிய அத்தகைய புற்றுநோயால் வலியும், வேதனையும் இருந்துள்ளது. அந்த நிலையில் 'டெமோஸீட்' எனும் புகழ்மிக்க அந்தக் காலத்து வைத்தியர் உதவியால் அந்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் தீர்க்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இருப்பினும், அந்தக் கட்டியானது புற்றுநோய் கட்டியா அல்லது கிருமிகளால் ஏற்பட்டதா என்ற புரிதல் இல்லை. அறிவியல் வளராத காலம் அது.

புரிதல் இல்லாத புற்றுநோய், இருபதாம் நூற்றாண்டில் டி.என்.ஏ. எனும் மரபணுவைக் கண்டறிந்த பின்னர்தான் அறிவியல் உலகுக்கு தெளிவு பெறுகிறது. அந்தப் பெருமை வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு அறிவியலாளர்களைச் சாரும். அதன் பின்னரே புற்றுநோயானது, மரபணுவின் திடீர் மாற்றத்தில் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டது.

இன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்படும் மன அழுத்தம் மனதை மட்டுமின்றி உடலையும் பாதிக்கிறது. அத்தகைய நாள்பட்ட மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய்க் காரணிகள் மரபணு சிதைவை உண்டாக்குவதாக உள்ளன. நம் உடலுக்கு மரபணு சிதைவை சரிசெய்யும் தன்மை இயல்பாகவே உண்டு. ஆனால், மரபணு சிதைவு அளவில் அதிகமாகும் போது, நமது உடல் அதை சரிசெய்யும் தன்மையை இழந்து விடுகிறது. இதுவே புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகிறது.

இந்த நிலையில், உடல் செல்கள் பல்வேறு புரதங்களை உற்பத்தி செய்து அவற்றை புற்றுநோய் செல்களாக மாற்ற ஆயத்தமாகின்றன. இந்தப் புரதங்களும், நொதிகளும் புற்றுக்கட்டிகள் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவே இன்றைய காலகட்டத்தில் ரத்தப் பரிசோதனையில் கணக்கிடப்பட்டு சிகிச்சை அளிக்க உயிர் குறிப்பானாக (பயோமார்க்கர்) உள்ளது.

புற்றுநோயின் தனித்தன்மை என்னவெனில் இது பாதிக்கப்பட்ட உறுப்பை மட்டுமின்றி அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ஒரு பகுதியில் உண்டாகும் புற்று நாளடைவில் உடல் முழுவதும் பரவக்கூடியது. புகையிலையும், நிலக்கரி புகையும், ஆஸ்பெஸ்டாஸ், பூச்சிக்கொல்லி மருந்துகளும், வைரஸ் கிருமிகளும் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இவை ஒருபுறமிருக்க வாழ்வியல் சூழலும், உணவுப்பழக்க வழக்கத்தால் உண்டாகும் உடல் பருமனும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு 30% கூடியுள்ளதாக அண்மைக்கால ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை விடுக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு குடல், சிறுநீரகம் சார்ந்த புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய வருகிறது.

நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் நோய்க் குற்றங்களான வாதம், பித்தம், கபம் இந்த மூன்றின் பிறட்சியால் புற்றுநோய் வருவதாக கூறுகிறது. இந்த மூன்று குற்றங்களையும் தன்னிலைப்படுத்தும் மருந்துகளும், இன்றைய நவீன அறிவியல் முன்னெடுக்கும் 'கைனேஸ்' நொதி தடுப்பு மருந்துகளும் நோயின் வளர்ச்சியைத் தடுத்து நோயிலிருந்து மீள உதவும்.

சித்த மருத்துவ மூலிகைகளில் பல புற்றுநோயின் வளர்ச்சிக்குக் காரணமாகும் 'கைனேஸ்' நொதியின் செயல்பாட்டை தடுக்கும் தன்மை உடையதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிக்றன. உடம்பை அழியாமல் காக்கும் 'காயகல்ப' மருந்துகள், செல்லுக்குள் இருக்கும் மரபணு சிதைவை சீர் செய்யும் வல்லமை உடையன.

நிறமிச் சத்துள்ள மூலிகைகளும், உணவு வகைகளும் புற்றுநோயைக் கொல்லும் பேராயுதங்கள். மஞ்சளில் உள்ள 'குர்குமின்', பூண்டில் உள்ள 'அலிசின்', மிளகில் உள்ள 'பைப்பரின்', கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' போன்ற மருத்துவ மூலப்பொருள்களின் பின்னே நிற்கும் அறிவியல் ஆய்வுகள் ஏராளம். மூலிகைகள் நம் மரபார்ந்த மருத்துவத்தின் நோய் நீக்கும் ஆயுதங்கள். சீந்தில், நெல்லி, கீழாநெல்லி, நிலவேம்பு, துளசி போன்ற பல மூலிகைகள் உயிர்காக்க உதவுவதாக உள்ளன.

இன்றைய நவீன அறிவியல் செம்பு, துத்தநாகம், கால்சியம், பாதரசம், தங்கம் ஆகிய தாதுப்பொருள்கள் கைனேஸ் நொதியைத் தடுப்பதாக கூறுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கணித்திருந்த நம் சித்த மருத்துவ முன்னோடிகள் செம்பு பற்பம், நாக பற்பம், ரச செந்தூரம், பாஷாண செந்தூரம், தங்க பற்பம் ஆகிய மருந்துகளை இந்நோய்நிலையில் பயன்படுத்தி உயிர்பிழைக்க செய்துள்ளனர்.

அண்மையில் ஸ்வீடன் நாட்டில் நடந்த ஆய்வில் ஏற்கெனவே குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு ஆஸ்பிரின் எனும் மருந்து கொடுத்து ஆய்வு செய்ததில் இந்த நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நமது பாரம்பரிய மருத்துவத்தில் ஆகச்சிறப்

பான ஆயிரக்கணக்கான மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பண்புகளுடன் நமது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க காத்துக்கொண்டுள்ளன. அவற்றை ஆய்ந்து பயன்படுத்துவது தற்போதைய சமூக சூழலுக்கு மிக அவசியம்.

டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளில் புற்றுநோய் சார்ந்து மிகப்பெரும் ஆய்வில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 23% மட்டுமே மரபியல் சார்ந்து இருப்பதாகவும், மீதி 77% ஆபத்து சூழல் சார்ந்து மட்டுமே இருப்பதாகவும் கூறுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

நமது மரபார்ந்த மருத்துவ அறிவையும், மரபு சார்ந்த உணவுப் பழக்கமுறைகளையும் உதாசீனப்படுத்தாமல் உற்றுநோக்கிப் பயன்படுத்தத் தொடங்கினால், உயிர்க்கொல்லி நோயிலிருந்து உயிர் பிழைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com