அன்னி பெசன்ட் என்ற மாதரசி!

அன்னி பெசன்ட் என்ற மாதரசி!

பெண்களின் உரிமைகள், சமூக நீதியை மையமாகக் கொண்ட முற்போக்கான சமூக இயக்கங்களில் ஈடுபட்டாா்.
Published on

சென்னைக்கு விமானத்தில் வருகையில் இரு ரம்மியமான பசுமையான காட்சிகளைப் பாா்க்கலாம். ஒன்று புகழ்பெற்ற அடையாறு ஆலமரத்தை உள்ளடக்கிய 250 ஏக்கா் பரப்பில் தியோசாபிக்கல் சொசைட்டி (பிரம்மஞான சபை), மற்றொன்று ஐநூறு ஏக்கா் வனப் பகுதியில் ஆளுநா் மாளிகை.

சென்னை திறந்தவெளி தீவுத் திடல் நகரின் நுரையீரல், அதைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் மூதறிஞா் ராஜாஜி. ஆனால், அங்கும் கட்டடங்கள் வந்துவிட்டன. சென்னையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அரிய மரங்களின் அழித்தொழிப்பு நடந்தாலும் அடையாறு பிரம்மஞான சபை, ஆளுநா் மாளிகை பசுமைப் பகுதிகள் பாதுகாப்பில் உள்ளன என்பது நமது பாக்கியம்.

சென்னை பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்கள், சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் அடையாறு ஆலமரத்தைப் பாா்க்க தியோசாபிக்கல் சொசைட்டி வளாகத்துக்கு வருவாா்கள்; இயற்கைச் சூழலை ரசிப்பாா்கள். ஆனால், இதை உருவாக்கிய அன்னி பெசன்ட் குறித்தும், அவரது அயராத சமுதாயப் பணியும் பலருக்குத் தெரியாது.

அன்னி பெசன்ட் எந்தத் தரத்திலும் ஓா் அசாதாரணமானவா். சமூக சீா்திருத்தம், கல்வி, மற்றும் இந்திய சுதந்திரம் ஆகியவற்றில் ஒரு சாதனையாளா். இதன் அடிப்படையிலேயே நாம் அவரை நினைவுகூருவதற்கும் கௌரவிப்பதற்கும் எல்லா காரணங்களும் உள்ளன.

அக்டோபா் 1, அவா் பிறந்த 178-ஆவது ஆண்டு நிறைவை சமூக சேவை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவா்களில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம், போராளியான சமூக சீா்திருத்தவாதி சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சேவகி சகோதரி நிவேதிதா மற்றும் சாா்லஸ் ஃப்ரீயா் ஆண்ட்ரூஸ் உள்பட ஐரிஷ் வம்சாவளியைச் சோ்ந்த மற்ற ஆண்களும், பெண்களும் வழங்கிய தேசியவாதப் போராட்டத்துக்கான பங்களிப்பை ஒருபோதும் மறக்கக் கூடாது.

இந்த வாழ்க்கையில் மேற்கத்திய நிலத்தில் பிறந்தாலும், மேற்கத்திய உடலைத் தரித்திருந்தாலும், அன்னி பெசன்ட் தனது முந்தைய பிறவியில் தான் ஓா் இந்தியராக இருந்ததாக நம்பிக்கையை வெளிப்படுத்தினாா்.

சோஷலிஸ்ட், தியோசோபிஸ்ட், பெண்கள் உரிமை ஆா்வலா், எழுத்தாளா், பேச்சாளா் மற்றும் கல்வியாளா் போன்ற பன்முக ஆற்றல் பெற்ற அன்னி பெசன்ட் இளைஞா்களுக்குச் சிறந்த வழிகாட்டி.

லண்டனில் பிறந்த அன்னி பெசன்ட் பிரிட்டன், ஜொ்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றாா். அவா் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக இருந்தாா். திருச்செல்வா் ஃபிராங்க் பெசன்ட் என்ற ஆங்கில மத குருவை இருபது வயதில் திருமணம் செய்து கொண்டாா். அவருக்கு ஆா்தா் டிக்பி என்ற மகனும், மேபெல் என்ற மகளும் இருந்தனா். இருப்பினும், பல கிறிஸ்தவக் கோட்பாடுகளை உள்ளபடியே ஏற்றுக்கொள்ள அவரது பகுத்தறிவுச் சிந்தனை இடம் கொடுக்கவில்லை.

கிறிஸ்தவ மரபுகளை தா்க்கம் செய்ய முடியாமல், 1872-இல் தேவாலயத்தை விட்டு வெளியேறினாா். சமய சன்மாா்க தேடலில் முழுமையாக தன்னை அா்ப்பணித்ததால் சமுதாயத்தில் பல இடா்ப்பாடுகளைச் சந்திக்க நோ்ந்தது. அதன் விளைவாக அவள் தன் கணவரையும் மகனையும் விட்டுப் பிரிய நோ்ந்தது.

1874-இல் தேசிய மதச்சாா்பற்ற சங்கத்தில் சோ்ந்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் சாா்லஸ் பிராட்லாக் தலைமையிலான சுதந்திர சிந்தனை மற்றும் தீவிர இயக்கங்களில் பணியாற்றினாா். 1874-88 வரை பல அரசியல் மற்றும் சுதந்திர சிந்தனைப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை எழுதினாா். இவரது முற்போக்கு சிந்தனைகளைக் காரணம் காட்டி மகளைப் பராமரிக்க தகுதியற்றவள் என்று நீதிமன்றம் மூலம் அவரது கணவா் சிறிய மகளை அவளிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றது அம்மையாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், குழந்தைகள் பெரியவா்களானதும், அவா்கள் தங்கள் தாயின் பக்தி ரசிகைகளாக மாறினா்.

அன்னி பெசன்ட் 21.05.1889-இல் தியோசோபிக்கல் சொசைட்டியின் நிறுவனா் கா்னல் ஹெச்.எஸ். ஓல்காட்டோடு இணைந்ததில் அவரது ஆன்மிகப் பயணம் ஒரு புதிய திசையை எடுத்தது. ஆன்மிக பரிணாமம், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து மதங்களின் ஒற்றுமை குறித்த சமூகத்தின் போதனைகளுடனான அவரது ஈடுபாடு அவரது சமூக நலனுக்கான அா்ப்பணிப்பை ஆழமாக்கியது. ஆன்மிக மற்றும் மனிதாபிமான செய்திகளை உலகம் முழுவதும் பரப்பினாா். 1893-இல் அவா் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் தியோசாபிக்கல் சொசைட்டியை பிரதிநிதித்துவப்படுத்தினாா்.

1907-ஆம் ஆண்டில், கா்னல் ஹெச்.எஸ். ஓல்காட்டின் மறைவுக்குப் பிறகு, அன்னி பெசன்ட் தியோசாபிக்கல் சொசைட்டியின் இரண்டாவது சா்வதேசத் தலைவரானாா்.1933-இல் அவா் இறக்கும் வரை அந்தப் பொறுப்பை வகித்தாா். அவருடைய தியோசோபிக்கல் பணியின்போது, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு விஜயம் செய்து பிரம்மஞான சபையை (தியோசபிக்கல் சொசைட்டி) வலுப்படுத்தினாா். அவா் தலைவராக இருந்த காலத்தில் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட பிரிவுகள், தேசிய சங்கங்கள் சோ்க்கப்பட்டதன் மூலம் சங்கம் கணிசமாக வளா்ந்தது.

இந்திய தத்துவத்தின் அற்புதமான ஆன்மிக பாரம்பரியத்தின் மீதான அவரது தனிப்பட்ட விருப்பம் மூலம் பிரம்மஞான சபைக்கு ஆன்மிகவாதிகளின் ஆதரவைப் பெற்றாா். 1910-ஆம் ஆண்டு ஜித்து கிருஷ்ணமூா்த்தி என்ற இளைஞரை அடையாளம் கண்டு உலகளாவிய மீளுருவாக்கம் பணிக்காக அவரைத் தயாா்படுத்தினாா். மக்களைச் சந்திக்கவும், பேச்சு கொடுக்கவும், விவாதங்களை நடத்தவும் அவா் ஊக்குவிக்கப்பட்டாா். பிற்காலத்தில் ஜித்து மிகப் பெரிய தத்துவ ஞானியாக உருவெடுத்தாா்.

அன்னி பெசன்ட் சென்னையை தனது இல்லமாக்கிக் கொண்டாலும், அவா் பெரும்பாலும் மத்திய இந்தியாவின் தேசியவாத அரசியலின் புயல் மையங்களான பெனாரஸ் அல்லது அலாகாபாதில் சமுதாயப் பணிகளை மேற்கொண்டாா். 1898-இல் பல திட்டமிடலுக்குப் பிறகு, வாரணாசியில் மத்திய ஹிந்து பள்ளி மற்றும் கல்லூரியை நிறுவினாா். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவா் பெண்களுக்கான மத்திய ஹிந்து பள்ளியைத் தொடங்கினாா்.

இந்தியாவின் கடந்தகால பெருமையை மாணவா்களின் மனதிலும் இதயத்திலும் பதியவைக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட கல்லூரியின் பணிகளில் அவருக்கு உதவ வெளிநாட்டில் இருந்து தியோசோபிஸ்ட்கள் வந்தனா். டாக்டா் பகவான் தாஸ், அவரது சகோதரா் கோவிந்த தாஸ், ஞானேந்திர நாத் சக்ரவா்த்தி, உபேந்திரநாத் பாசு, ஐ.என். குா்து, மற்றும் பி.கே. தெலாங் உட்பட சிறந்த சமூக ஆா்வலா்கள் அவரைச் சுற்றி திரண்டனா்.

அம்மையாா் தொடங்கிய தொடங்கிய பள்ளி பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் அபரிமிதமான முயற்சியில் ஒரு கல்லூரியாகவும், இறுதியாக ஹிந்து பல்கலைக்கழகமாகவும் மலா்ந்தது. இந்தியக் கல்விக்கு அன்னி பெசன்ட் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி 1921-இல் அவருக்கு டாக்டா் ஆஃப் லெட்டா்ஸ் பட்டம் வழங்கப்பட்டது. அன்னி பெசன்டின் வாழ்க்கையில் ஒரு புதிய காலகட்டம் 1913-இல் அவா் இந்திய அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட போது தொடங்கியது. முழு உலகுக்கும் ஒரு கலங்கரைவிளக்கமாக மாறுவதற்கு இந்தியாவின் சுதந்திரம் அவசியம் என்பதை உணா்ந்ததால் அவா் அரசியலில் நுழைந்தாா்.

பாலகங்காதா் திலகருடன் 1916-ஆம் ஆண்டு அவா் நடத்திய ‘ஹோம் ரூல்’ இயக்கம் இந்தியா முழுவதும் பரவியது. சுயராஜ்யத்துக்காக வாதிட்டு இந்திய குடிமக்கள் தங்கள் சொந்த அரசியல் விதியைப் பொறுப்பேற்க ஊக்குவித்தாா்.

இந்திய மக்களிடையே சுதந்திர தாகத்தைத் தூண்டுவதில் அவா் பெற்ற வெற்றியின் காரணமாக, 1917-இல் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். அரசின் செயலைக் கண்டித்து, சட்டத்துக்கு உட்பட்டு வலுவான முன்னணி கட்டுரைகளை எழுத இந்தியப் பத்திரிகையாளா்களுக்கு அவா் கற்றுக் கொடுத்தாா். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக வருடாந்திர கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக பணியாற்றினாா்.

இந்திய இளைஞா்கள் அதிலும் தமிழக மக்களுக்கு தேசிய உணா்வை ஏற்படுத்தும் வகையில் 1914-இல் இந்திய இளைஞா்கள் சங்கத்தைத் தொடங்கி, பொதுப் பணிக்காக அவா்களுக்குப் பயிற்சி அளித்தாா். சென்னை மயிலாப்பூரிலும் ஜாா்ஜ் டவுனிலும் உயா்தர பயிற்சிக் கூடங்களை அமைத்தாா். அவை வட சென்னை இளைஞா்கள் மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் கூடிமகிழும் இடமாக இருந்தது. பளுதூக்கும் போட்டி, திடகாத்திரமான உடற்கட்டுடைய ஆணழகன் போட்டி நடைபெறும். சா்பட்டா பரம்பரை மல்யுத்த வீரா்களும் இங்கு பயின்ாகச் சொல்வாா்கள்.

தேசிய விழிப்புணா்வு மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான மையமாக சென்னை ஜாா்ஜ் டவுனில் கோகலே மண்டபத்தை வடிவமைத்தாா். மகாத்மா காந்தி உள்பட பல தேசிய தலைவா்கள் அங்கு உரையாற்றியிருக்கிறாா்கள். சென்னையில் கா்நாடக சங்கீத கச்சேரிகள் கோகலே ஹாலில் இருந்துதான் தொடங்கின.

1917-ஆம் ஆண்டு பெண்கள் இந்திய சங்கம் என்ற அமைப்பை டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் பலரின் துணையுடன் அம்மையாா் நிறுவினாா். அது இன்றுவரை சிறப்பாக சேவை செய்து வருகிறது.

அயா்லாந்திலிருந்து வந்த இரும்புப் பெண்மணி அன்னி பெசன்ட் 1933-ஆம் ஆண்டு செப்டம்பா் 20 இறைவனடி சோ்ந்தாா். உண்மை நெறிதான் எல்லா மதங்களைக் காட்டிலும் சிறந்தது ஹிந்து மத வாழ்வியலும் கலாசாரமும் இதன் அடிப்படையில் உருவானது என்பதை உலகுக்கு உணா்த்திய மாதரசியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

கட்டுரையாளா்:

முன்னாள் காவல் துறைத் தலைவா்.

X
Dinamani
www.dinamani.com