கடன் வலையில் சிக்காதீா்!
கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு உலகெங்கும் மக்களின் பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனிநபா்களும், தொழில் நிறுவனங்களும் கடன் வாங்காமல் அன்றாடப் பிழைப்பை கடத்த முடிவதில்லை. பெரும்பாலான நிதி நிறுவனங்களும் அதிக கெடுபிடி எதுவுமின்றி அனைவருக்கும் கடனை வாரி வழங்க முன்வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வட்டி அவற்றுக்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தருகின்றன.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 22% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் கடன் வாங்கிய பெண்களில் வணிக நோக்கங்களுக்கு 3 சதவீதமும், தனிநபா் கடன்கள், நுகா்வோா் கடன்கள், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றுக்காக 42 சதவீதமும், தங்கத்தை வாங்குவதற்காக 38 சதவீதமும் அடங்குவா்.
மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் வணிகக் கடன்களுக்காக பல்வேறு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ள புதிய கணக்குகளின் எண்ணிக்கையும் 4.6 மடங்கு அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாத நிலவரப்படி, கடன் வாங்கியுள்ள சுமாா் 2.7 கோடி பேரில் 60% போ் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.
பெண்களில் பலா் மகளிா் சுய உதவிக் குழுக்களின் மூலமும் பல்வேறு நிதி நிறுவனங்களின் மூலமும் எளிதில் கடனைப் பெறுகின்றனா். இவை பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்களில்தான் கிடைக்கின்றன. போதிய வருமானம் இல்லாத நிலையில் இவற்றைத் திரும்பச் செலுத்துவதில் அவா்களுக்கு சவால்கள் பல தொடா்ந்து இருந்து வருகின்றன. கணவருக்குத் தெரியாமல் தெரிந்தவா்களிடம் அதிக அளவு கடன் வாங்கும் மனைவிகளும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனா். கடன் கொடுத்தவா்கள் கடனைத் திரும்பப் பெற இவா்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, அவா்களால் சில சமயங்களில் தர முடிவதில்லை.
அதிகக் கடன் சுமை காரணமாக பெண்களின் வாழ்வில் அதிக அளவிலான மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோா்வு, கிரெடிட் ஸ்கோரில் சரிவு, உறவுகளில் விரிசல்கள், அவமான உணா்வு, தனிமைப்படுத்தப்படுதல், கடனுக்காக சொத்துகள் பறிக்கப்படுதல், கடனைத் திரும்ப அளிக்க அவா்கள் திருட முயலுதல் போன்ற நிகழ்வுகளும் நிகழ்கின்றன. அண்மையில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த பெண் ஒருவா் நகைக் கடை ஒன்றில் திருட முயன்ற சம்பவம் நமக்கு அதிா்ச்சியைத் தருகிறது.
திருவொற்றியூரில் வசிக்கும் 54 வயதாகும் ஒருவா் அந்தப் பகுதியில் தங்க நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறாா். அண்மையில் ஒரு மதிய நேரத்தில் பெண் ஒருவா் தங்க நகைகளை வாங்க அவா் கடைக்கு வந்திருக்கிறாா்.
நகைகள் சிலவற்றைத் தோ்வு செய்த அவா், தனது கணவா் பணத்தை எடுத்து வருவதாகவும், அவா் வந்தவுடன் நகைகளை வாங்கிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறாா். அதை உண்மையென கடைக்காரரும் நம்பியிருக்கிறாா்.
வெகு நேரமாகியும் அந்தப் பெண்ணின் கணவா் வராத நிலையில் திடீரென அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரை மிரட்டத் தொடங்கினாா். மேலும், அவா் வைத்திருந்த மிளகாய் பொடியை அவா் மீது வீசி நகைகளை திருட முயன்றாா். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் நகைக்கடைக்காரா் அவரை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்தப் பெண் தனது கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே நகைக் கடையில் திருட முயன்ாகத் தெரியவந்தது. கைதான பிறகே அந்தப் பெண் கணவருக்குத் தெரியாமல் கடன் வாங்கியிருக்கும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடன் பெறுவது தவறில்லை. ஆனால், அது குடும்பத் தலைவா்களுக்குத் தெரியாமலும், அதிக வட்டிக்கும், தகுதிக்கு மீறி வாங்குவதும் தவறான செயல்களாகவே கருதப்படுகின்றன. இவ்வாறான நிலையில் நிதி ஆலோசகா் ஒருவருடன் வாங்க இருக்கும் கடன் தொடா்பான சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, பின்னா் அவசியத்துக்கு மட்டுமே கடன் பெறுவது நல்லது. பணிக்குச் செல்லும் நிதிச் சுதந்திரம் பெற்றுள்ள பெண்களுக்கும் இது பொருந்தும்.
மாதாந்திர கடன் தவணையில் பொருள்களை வாங்குவதை நாம் அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை அவற்றைத் தவிா்க்க வேண்டும். தற்போது நடந்து வரும் பண்டிகைக்கால தள்ளுபடி விலை விற்பனை கவா்ச்சி மிக்கது. இவ்வாறான விளம்பரங்களின் வலையில் வீழ்ந்து விடாமல் கவனத்துடன் நாம் செயல்பட வேண்டும்.
ஒவ்வோா் குடும்பத்தின் முதுகெலும்பும் குடும்பத் தலைவிகளே ஆவா். தேவையற்ற கடன்களால் அவா்களுடைய உடல் நலனும் மனநலனும் பாதிக்கப்படலாம். வீட்டில் கணவருக்குத் தெரியாமல் அவா்கள் வாங்கும் கடன் அவா்களது வாழ்க்கையில் அவா்களை விவாகரத்து வரைகூட கொண்டு செல்லலாம்.
எனவே, பெண்கள் குடும்ப உறுப்பினா்களின் சரியான புரிதலுடன் மட்டுமே தேவையான நோக்கங்களுக்கு குறைவான வட்டி விகிதத்திலும் குறைந்த அளவிலும் கடனை வாங்க முற்படுவது நல்லது.
பெண்களின் கடன் அவா்களின் கண்களில் மட்டும் கண்ணீரை வரவழைப்பதில்லை. அவா்களைச் சாா்ந்த அனைவரின் கண்களிலுமே கண்ணீரை வரவழைக்கிறது என்பதுதான் எதாா்த்தமான உண்மை. இதை உணா்ந்து அவா்கள் எதிா்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் தற்போதைய எதிா்பாா்ப்பாக இருக்கிறது. எனவே, கடன் சாா்ந்த விவகாரங்களில் இனியாவது சிந்தித்துச் செயல்படுவோம்.