இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
ANI

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

Published on

பினாக் ரஞ்சன் சக்கரவர்த்தி

வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கான காரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்த எழுச்சியைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆற்றிய எதிர்வினையையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தேர்தல் நடத்துவதை அந்நாட்டு இடைக்கால அரசு தாமதப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். அதாவது, அந்நாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு 17 மாதங்களுக்கும் மேலான பின்னர், தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வங்கதேசத்தின் முன்னணி இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லாமியைச் சேர்ந்தவர்கள், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்த இஸ்லாமிய சார்புகொண்ட மாணவர் தலைவர்கள் ஆகியோரின் இறுக்கமான பிடியில் யூனுஸின் அரசு உள்ளது. இஸ்லாமிய கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் எழுச்சியை அவரின் அரசு சாத்தியமாக்கியுள்ளது. அந்நாட்டில் ராணுவமும் காவல் துறையும் ஒன்றுசேர்ந்த படை உள்ளபோதிலும் சட்டத்துக்குக் கட்டுப்படாத நடவடிக்கைகள் நீடிக்கின்றன.

அந்நாட்டில் ஹிந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள், சூஃபி குழுக்கள் அடங்கிய சிறுபான்மையினருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வகுப்புவாத வன்முறைச் சம்பவங்களை மனித உரிமை அமைப்புகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளன. அந்த சம்பவங்களைத் தடுக்காமல் யூனுஸ் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூனுஸ் அரசு தவறியதாக ஐ.நா.வின் பிப்ரவரி மாத அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது குறித்து சர்வதேச அளவில் கவலை எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பழைமைவாய்ந்த டாக்கேஸ்வரி கோயிலுக்கு முகமது யூனுஸ் சென்றார். அவருடன் இடைக்கால அரசின் மத விவகாரங்கள் ஆலோசகரும், தீவிர இஸ்லாமிய அமைப்பான ஹெஃபாசத்-ஏ-இஸ்லாமின் துணைத் தலைருமான ஏ.எஃப்.எம். காலித் ஹுசைனும் சென்றார். அப்போது "ஒருவர் எந்த மதம் அல்லது சித்தாந்தத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் முதலில் அவர் வங்கதேசத்தின் குடிமகன். வங்கதேசத்தின் அரசியல் சாசனத்தில் குடிமக்களின் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார் முகமது யூனுஸ்.

ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்கதேச தேசிய கீதத்தை மாற்ற வேண்டும்; அந்நாட்டின் அனைத்துப் பள்ளி நூல்களில் இருந்து ஹிந்து எழுத்தாளர்களின் எழுத்துகளை நீக்கவேண்டும்; பொது இடங்களில் இருந்து அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், வங்கதேசத்தை இஸ்லாமியமயமாக்க வேண்டும் என்று ஹெஃபாசத்-ஏ-இஸ்லாம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் குடிமக்கள் என்ற முறையில் தங்கள்

உரிமைகளைக் கோருமாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்த இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரும், துறவியுமான சின்மய் தாஸுக்கு எதிரான பரப்புரையை அந்த அமைப்பு முன்னெடுத்தது.

இதில் உள்ள பாசாங்கு கவனிக்கப்படாமல் இல்லை. சின்மய் தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடி வருகிறார். அவர் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்நாட்டின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துர்கை சிலைகள் சிதைக்கப்படுகின்றன. இதில் ஹிஜிப்-உத்-தரீர் போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகளுக்கு அளிக்கப்படும் இடம் கவனிக்கத்தக்கது. நாட்டில் இஸ்லாமிய மத குருவின் ஆட்சி அமைய வேண்டும் என்று டாக்கா வீதிகளில் அந்த அமைப்பினர் பேரணி மேற்கொண்டனர். ஜமாத் கட்சியின் தலைமையில் இஸ்லாமி அந்தோலன், கிலாஃபத் மஜ்லீஸ், நிஜாம்-ஏ-இஸ்லாம், கிலாஃபத் அந்தோலன், ஜாதிய கணதந்த்ரிக் கட்சிகளால் ஆதரிக்கப்படும் புதிய கூட்டணி வீதிகளில் திரளத் தொடங்கியுள்ளது.

நாட்டில் தேர்தல் நடத்தப்படுவது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதான அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.

தேர்தலை தள்ளிவைத்து, விகிதாசார அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாத கூட்டணி விரும்புகிறது. இதுவரை வங்கதேசத்தின் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றதில்லை. அதேவேளையில், மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ள புதிய கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி முதல்முறையாகத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

ஜமாத் கட்சி, அதன் இஸ்லாமிய அடிப்படைவாத கூட்டாளிகள் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சியின் எதிராளிகளைப் போட்டியில் இருந்து அகற்றி, சமச்சீரற்ற அரசியல் களத்தை உருவாக்கவே தேர்தலை நடத்துவதில் காலம் தாழ்த்தப்படுவதாக அஞ்சப்படுகிறது. இதற்கு அண்மையில் நடைபெற்ற டாக்கா பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் தெளிவான அறிகுறியாக உள்ளது. 28 பொறுப்புகளுக்கு நடத்தப்பட்ட அந்தத் தேர்தலில், ஜமாத் கட்சியின் இளைஞரணியான இஸ்லாமிய சாத்ர ஷிபிர் எதிர்பாராத வகையில் 23 பொறுப்புகளில் வெற்றி பெற்றது.

கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போருக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ஐந்தாம் படையாகக் கருதப்பட்ட ஜமாத் கட்சி, சமூக செயல் திட்டங்களால் இளைய தலைமுறையிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தயார்படுத்தியதன் மூலம், தமது தகுதியை மெருகேற்றியுள்ளது. 1971-ஆம் ஆண்டு போரின்போது தாம் மேற்கொண்ட செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்த அக்கட்சி, அந்தப் போரின் நினைவுகளே இல்லாத இளைஞர்களிடம் தம்மால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறது.

இந்தச் சூழலுக்கு மத்தியில், புதிதாக டாக்கா ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் தோன்றியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தைத் திட்டமிட்ட ஒருவரின் ஆதரவு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் துருக்கியில் இருந்து அந்த நிறுவனத்துக்கு நிதியுதவி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் வழியாக, அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடுவே, வங்கதேசம் சார்ந்த புவிஅரசியல் போட்டியும் தீவிரமடைந்துள்ளது. அண்மையில், அமெரிக்கா-வங்கதேச ராணுவங்களுக்கு இடையே "ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல் 25-3' என்ற பெயரில் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொள்ள, வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு சுமார் 1,000 அமெரிக்க வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளுதல், அந்நாட்டின் ராணுவத் தளங்களை அமைக்க வங்கதேசத்தில் உள்ள புனித மார்ட்டின் தீவைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் சீனாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், தமது விரிவான உத்திசார்ந்த கூட்டுறவை மேம்படுத்த சீனாவுடன் வங்கதேசம் கைகோத்து முன்னோக்கிச் செல்லும் என்று முகமது யூனுஸ் தெரிவித்தார். இதன் காரணமாக புனித மார்ட்டின் தீவைப் பயன்படுத்த அமெரிக்கப் படைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் கொலை வழக்குகளை முகமது யூனுஸ் அரசு பதிவு செய்துள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் வங்கதேசத்துக்கு இந்தியாவின் ஏற்றுமதி நான்கு சதவீதம் வளர்ச்சி கண்டது.

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துவதில் வங்கதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசை கவலையடையச் செய்துள்ளது. ஆனால், தவிர்க்க முடியாத விநியோகத் தேவை, இந்தியாவையும் வங்கதேசத்தையும் பிணைக்கும் காரணிகளாக நீடிக்கின்றன. இதுமட்டுமன்றி, தனது மின்சாரத் தேவையில் 15 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை இந்தியாவில் இருந்து வங்கதேசம் இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவுக்கு விரோதமான சக்திகள் வங்கதேச தேர்தலில் சூழ்ச்சி செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாது என்பதே மத்திய அரசின் பிரதான கவலையாக நீடிக்கும். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, வங்கதேசத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அத்துடன் இணக்கமாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

கட்டுரையாளர்:

முன்னாள் இந்தியத் தூதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com