
- என். ஆர். ரவீந்திரன்
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸôர் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
இது ஒருபுறமிருக்க, நகரங்களில் பொதுமக்களிடம் பணத்தைக் கேட்டுப் பெறும் திருநங்கைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.
கடைகளில் மட்டுமல்லாது, பேருந்துகளிலும், ரயில்களிலும் அவர்கள் கூட்டமாக வந்து பணம் கேட்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் அவர்களில் சிலர் நடந்துகொள்ளும் விதம் ஏற்புடையதாக இல்லை.
பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகனங்களை திருநங்கைகள் முற்றுகையிட்டு பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி, வேலைவாய்ப்பில் சம உரிமை, பேச்சுரிமை, வாழ்க்கை உரிமை ஆகியவற்றின் கீழ் அனைத்து திருநங்கைகளும் அடிப்படை உரிமைகளுக்கு உரிமை உடையவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் அதிகாரபூர்வ பாலினமாக திருநங்கையை 2020-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
திருநங்கைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், 2008-இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என மாற்றி அறிவித்தார். இதையடுத்து, திருநங்கைகள் நல வாரியம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நல வாரியம் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, இலவச வீடு, சொந்த தொழில் தொடங்க மானியம், 40 வயதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கைகள் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. அதற்கான கல்விக் கட்டணத் தொகையும் நல வாரியம் மூலமே செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் பல்வேறு இன்னல்கள், தடைகளைத் தாண்டி உயர் கல்வி பயின்று, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியராக அண்மையில் உயர்ந்துள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்சி. முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கல்விதான் தனக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக தெரிவித்துள்ள அவர், திருநங்கைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார். இதுபோல, காவல் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளிலும் திருநங்கைகள் பலர் பணியாற்றி வருகின்றனர்.
தென்தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கைகள் இணைந்து "மதுரை டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் மதுரையில் உணவகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் திருநங்கைகள் சிலர் குழுவாகச் சேர்ந்து உணவகங்கள் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற உணவகங்கள் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், சமூகத்தில் அவர்களை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு தளமாக அமைகின்றன.
தனியார் துறையில் திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவது மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையை இளம் தொழிலதிபர்கள் முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது.
அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் பலர் சுயதொழில்கள் மூலம் கெüரவமாக வசித்து வருகின்றனர். அவ்வாறு சுயதொழில் செய்பவர்களுக்கு அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. சுயதொழில் செய்ய முன்வரும் திருநங்கைகளுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
வயதான தம்பதிகள், இயலாதோர் உள்ளிட்டோருக்கு வெளி வேலைகளை செய்து தருவதை திருநங்கைகள் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்து வருகின்றனர். குறைந்த தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இந்தப் பணிகளை அவர்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் முதல் உணவு ஏற்பாடு செய்வது வரையிலான பணிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக, நகரங்களில் சிறிய அளவில் அலுவலகம் தொடங்கி, குழுவாகச் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். வேலை அளிப்போரின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல், உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர்கள் இயங்குகின்றனர்.
அவ்வாறு உழைத்து வாழ்க்கை நடத்தும்போது, திருநங்கைகளுக்கும் சமூகத்தில் நல்ல முறையிலான அங்கீகாரம் கிடைக்கும். தவறான புரிதல் மற்றும் செயல்களால், சமூகத்தில் திருநங்கைகள் சிலர் வன்முறையையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, பழைய நிலைப்பாடுகளிலிருந்து மாறி, புதிய வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளும் வகையில் மாற்றி யோசிக்க திருநங்கைகள் முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.