சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

சொற்பொழிவு என்ற உயரியதொரு நிகழ்த்துக் கலையானது, வரலாறு நெடுகிலும் மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது;
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
3 min read

ஜெயபாஸ்கரன்

சொற்பொழிவு என்ற உயரியதொரு நிகழ்த்துக் கலையானது, வரலாறு நெடுகிலும் மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது; இன்றளவும் அவ்வாறே விளங்குகிறது. நமது நாட்டின் மக்கள்தொகையும், நமது மக்களது வாழ்வின் புதிய புதிய சிக்கல்களும் பெருகப் பெருக, அவற்றையெல்லாம் அறிந்து ஆராய்ந்து பேசுவதற்கான சொற்பொழிவாளர்களும் பெருக வேண்டியிருக்கிறது. அதனால்தான், அந்தக் கலையை நிகழ்த்துபவர்கள் புதிது புதிதாகவும், நிறையவும் கற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

உலக அளவிலான தகவல் தொடர்பு அறிவியலில், அண்மைக்காலப் புரட்சியாக நெடுவடிவமெடுத்து வளர்ந்திருக்கிற பன்முகச் சமூக ஊடகங்கள் பல்வேறு வகையில் தமிழின் நற்கூறுகளை பெரும்பாய்ச்சலில் மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இது மட்டுமின்றி, இத்தகைய ஊடகங்கள் தமிழை உலக அளவில் பரப்புகின்றன.

இன்றைய சமூக ஊடகங்களுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே சமூகத்தோடு இரண்டறக் கலந்து, இன்றளவும் இடையறாது பயன்பாட்டில் இருக்கின்ற அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களையும் நாம் இவ்வேளையில் நினைவில் கொண்டாக வேண்டும். வலிமைமிக்க இத்தகைய நிகழ்கால ஊடகங்களின் பின்புலத்தில் நின்று, இன்றைய நமது சொற்பொழிவாளர்களையும், சொற்பொழிவுகளுக்கான அவர்களது கருப்பொருள்களையும் கூர்ந்து கவனித்துக் கணிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

எல்லோரும், எப்போதும், எல்லாவற்றையும் படிக்கிற பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதில்லை என்பதால்தான், எல்லோருக்குமாக எப்போதும் படிப்பவர்களாகவும், படித்தவற்றை அலசி ஆராய்ந்து ஒப்பு நோக்கிப் பார்த்து, படிக்கும் வாய்ப்பற்ற பெரும்பான்மையினருக்குத் தெளிந்த குரலில் எடுத்துரைப்பவர்களாகவும் விளங்க வேண்டும் என்பது சொற்பொழிவாளர்களுக்கான எழுதப்படாத இலக்கணங்களாகும்.

சொற்பொழிவாளர்கள் எனப்படுவோர், பேச்சாளர்கள் என்கிற நிலையில் இருந்து உயர்வு பெற்றவராவர். தங்கு தடையின்றிப் பேசுவதல்ல, பேசுவதற்கு ஏற்றுக்கொண்ட கருப்பொருள்களுக்கு உரிய தரவுகளோடு பேசுவது; தெரிந்து கொண்டதையெல்லாம் பேசுவதல்ல, அந்த அவைக்குத் தேவையானவற்றைப் பேசுவது ஆகியவையும் சொற்பொழிவாளர்களுக்கான இலக்கணங்களாகும்.

சான்றாக, தமிழக மற்றும் இந்திய அளவில் விடுதலைப் போராட்ட ஈகியர், மொழியறிஞர்கள், உயரிய விருதுகளைப் பெற்றவர்கள் என்று அனைத்துத் துறைகளிலும் கணக்கிட்டால் ஆயிரக்கணக்கான சாதனையாளர்கள் நமது நினைவுகளில் மின்னுகிறார்கள்.

அவர்களில் இருந்து மிகக் கறாராக வடிகட்டி வடிகட்டித் தேர்வு செய்தால், ஓர் இருநூற்றைம்பதுபேர் கிடைப்பதாக வைத்துக் கொண்டால்கூட, அவர்களைக் குறித்து, அவர்களது வாழ்க்கை வரலாற்றின் சாதனைகளை முன்வைத்து குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் உரை நிகழ்த்துவது என்ற திட்டம் எதுவும் நமது சொற்பொழிவுக் கலாசாரத்தில் இல்லை. அப்படி இருந்தாலும், அது யாரோ ஒரு சில சாதனையாளர்களைக் குறித்து எங்கேனும் ஓரிருவர் உரையாற்றுகிற அளவிலேயே இருக்கிறது.

கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த நூற்றுக்கணக்கான நமது ஆளுமைகள் அச்சு, ஆவணங்களிலும் வாழ்க்கை வரலாற்று நூல் வடிவிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களைப் பற்றிய ஆய்வு நூல்களும் எழுதப்பட்டுள்ளன. அத்தகையவர்களைப் பற்றிய செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேடைகளில் அள்ளித் தெளிக்கப்படுவதோடு, அவர்களைப் பற்றிய நமது பெருமிதங்கள் முற்று பெற்றுவிடுகின்றன.

அதன்விளைவாக, நமது இளைய தலைமுறையினர் சொற்பொழிவாளர்களிடமிருந்து பல்வகைப்பட்ட நமது சாதனையாளர்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தவர்களாகவும், முயன்று முனைந்து அவர்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிற நூல்களின் மீது ஆர்வம் காட்டாதவர்களாகவும் மாறுகின்றனர். அந்த வகையில், தமிழ் இனத்தின் வரலாற்றில் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த பல நூற்றுக்கணக்கான மாபெரும் ஆளுமைகள் இன்றைக்கு வெறும் பெயர்களாக மட்டுமே நம்மிடம் எஞ்சியுள்ளனர்.

ஓர் இதிகாசத்தின் அனைத்து கதைமாந்தர்கள் குறித்தும் குறைந்தது தலா ஒரு மணிநேரம் தெளிவாகவும், உரத்தும் உரையாற்றுவதற்கு அந்தக் கதாபாத்திரங்களின் நூற்றுக்கணக்கான பேராளர்கள், இதிகாச சொற்பொழிவாளர்களாக இப்போது நம்மிடையே மிகுந்துள்ளனர். இவ்வாறு பேசப்படுவதற்கான ஒரு நல்வாய்ப்பு, செயற்கரியனவற்றைச் செய்து, நம்மிடையே வாழ்ந்து, நமக்காக அல்லாடியவர்களுக்கு அமையவில்லை. பெருமையுடன் பேசப்பட வேண்டியவர்கள் குறித்துப் பேச வேண்டிய நேரத்தில் உண்மையாகவும், விரிவாகவும் பேசாமல் விட்டதன் விளைவாகவே நமது சமூகத்தின் பல்வேறு சாதனையாளர்களை அவரவர் சார்ந்த சமூகங்கள் கையிலெடுத்துக் கொண்டன; இது அறிவுலகுக்கு நேர்ந்துள்ள பெரும் பின்னடைவாகும்.

"தமிழ்ச் சமூகத்துக்காகவே வாழ்ந்து போராடிச் சாதித்த சாதனையாளர்களை அவர்களது ஜாதிய வட்டத்தில் அடைத்துவிடாதீர்கள்' என்று இன்றைக்குக் கூக்குரலிட்டு அலறுகிற நமது சமூகம், நேற்று அந்தச் சாதனையாளர்களையெல்லாம் பொதுவெளிகளில் விரிவாக முன்வைத்து, அவர்களைக் கொண்டுபோய் இளையோரிடம் சேர்ப்பதற்கு என்னென்ன செய்தது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கும் கடமைப்பட்டிருக்கிறது. இத்தகைய ஆளுமைகள் குறித்து திரைப்படங்கள்கூட வெளிவந்துள்ளன என்ற விடை இதற்குப் பொருந்தாது; காரணம் அது மேடையுலகம் செய்த வேலையல்ல, தமிழ்ப்படவுலகம் செய்த சேவையாகும்.

பல்வேறு வகையான இலக்கியங்களைக் குறித்த தொடர் சொற்பொழிவுகளை சில இலக்கிய அமைப்புகள் முன்னெடுத்து நடத்துகின்றன. அவ்வகையில், எடுத்துக் கொண்ட ஓர் இலக்கியம் குறித்து நமது தமிழறிஞர்கள் அச்சு பிசகாமல் வாரக் கணக்கில் தொடர் சொற்பொழிவாற்றுவது உண்டு. நமது மொழிக்கு வளம் சேர்க்கிற இத்தகைய முயற்சியும் மிகவும் தேவையான ஒன்றுதான்.

ஆனால், மறக்கப்பட்டுவிட்ட நூற்றுக்கணக்கான நமது ஆளுமைகள் ஒவ்வொருவரையும் குறித்து, அவர்களை நன்கு ஆய்ந்தறிந்த, அறிஞர்களின் தொடர் சொற்பொழிவு என்ற வகையிலான திட்டங்கள் எதுவும் நமது அமைப்புகளால் முன்னெடுக்கப்படுவதில்லை. காரணம், அதற்கான சொற்பொழிவாளர்கள் போதாமல் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு தரப்பின் போதாமையாகவும் இருக்கலாம்.

ஒரு பொழிவாளர், பல்வேறு துறைகளைச் சார்ந்த நமது பல ஆளுமைகள் குறித்து தனித்தனியாக குறைந்தது தலா ஒரு மணிநேரம் பொழிய முடியும் என்கிற நிலை ஏற்பட்டால்தான், நமது பள்ளி கல்லூரி மாணவ}மாணவிகளும், இளையோரும் மனவெழுச்சி பெற்ற சமூகப் பற்றாளர்களாக மாறுவர்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஆளுமைகளின் பெயரில் அவர்களது குடும்பத்தினரால், அறக்கட்டளை நினைவு (வைப்புத்தொகை) இருக்கைகள் அமைக்கப்படுகிற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. அவற்றின் வாயிலாக "நினைவுச் சொற்பொழிவுகள்' நிகழ்த்தப் பெறுகின்றன. அத்தகைய சொற்பொழிவுகள், குறிப்பிட்ட அந்த வைப்புத் தொகையின் வருடாந்திர வட்டித் தொகையின் அளவுச் செலவினங்களுக்குள் நிறைவெய்துகின்றன. ஆண்டுச் சடங்குகளாக அரங்கேற்றப்படுகின்ற இத்தகைய நினைவுச் சொற்பொழிவுகளில், எத்தனையெத்தனை ஆளுமைகள் வீரியமான வகையில் மாணவர்களின் நினைவில் பதிய வைக்கப்படுகின்றனர்? அல்லது அந்தக் கல்வி நிறுவனங்களின் மாணவர்களே அத்தகைய நினைவுச் சொற்பொழிவுகளுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றனரா என்பதெல்லாம் தெரியவில்லை!

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நூலக விழாக்கள், மாபெரும் தமிழ்க் கனவு, புத்தகக் காட்சிகள் என்றெல்லாம் பல்வேறு ஊர்களில், பல்வேறு வகையான நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது. இது நல்ல நோக்கம்தான். ஆனால், அங்கெல்லாம்கூட, தங்களது "ஆறு செய்திகளோடு நூறு ஊர்களுக்குப் போகிற' பொழிவாளர்களே தொடர்ச்சியாகக் களமிறக்கப்படுகின்றனர். இது தொடர்பாக எழுகிற வினாக்களையும், கடும் விமர்சனங்களையும் தொடர்புடைய பொறுப்பாளர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

சூழலியலுக்கும், தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும், இந்திய விடுதலைக்கும், கலைகளுக்கும், கல்விக்கும், இசைக்கும், தொழிலுக்கும், ஊடகவியலுக்கும், மருத்துவம் உள்ளிட்ட பல்வகைப்பட்ட சமூக சேவைகளுக்கும், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும், மானுட உரிமைகளுக்கும் தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள், போராடியவர்கள் யார் யார்? அந்தந்த துறைகளுக்கு அவர்களின் பங்களிப்புகள் எத்தகையன? துறைதோறும் அவ்வகையில் எத்தனை எத்தனை ஆளுமைகளைப் பட்டியலிடலாம்? என்பதையெல்லாம் குறித்து அறிவுலகம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய ஆளுமைகளின் பட்டியலை நாம் மிகவும் எளிதாகத் தயாரிக்கலாம். சமூகத்தை கூர்ந்து கவனிக்கிற எவர் ஒருவராலும் இப்பட்டியலைத் தயாரிக்க முடியும்.

பல நூற்றுக்கணக்கான உண்மையான நாட்டுப் பற்றாளர்களை, மக்கள் நலப் போராளிகளை, துறை சார்ந்த மேதைகளை எடுத்துச் சொல்லி, அத்தகைய ஆளுமைகளைச் சிறப்பிப்பதும் அதன் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு அறிவுச் செறிவூட்டுவதும் ஓர் அறிவார்ந்த சமூகத்தின் நன்றியுடன் கூடிய கடமையல்லவா?

கட்டுரையாளர்:

கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com