
கல்வியின் முன்னேற்றத்தைத் தாண்டி, மன நலத்தில் உறுதியான மாணவர்களால்தான் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். பள்ளிப் பருவம்தான் வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மாணவரின் மனதில் என்ன கருத்துகள் உண்டாகிறதோ, அது கடைசி வரையும் நிலைபெறுகிறது. மன நல ஆலோசனைகள் என்பது மாணவர்களுக்கு வழிகாட்டி. வாழ்வின் திசை காட்டி. இதனால், ஒவ்வோர் பள்ளியிலும் மன நல ஆலோசனைகள் வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மனதுக்கு உற்ற நண்பன் உடல்; உடலுக்கு உற்ற நண்பன் மனம். இவை இரண்டும்தான் எப்போதும் ஒன்றாக இருக்கும். அன்றைய கடமையை அன்றே முடித்துவிட வேண்டும். ஏனென்றால், இன்று தூங்கி நாளை கண் விழிக்கும் போது, நேற்றைய நாள் நம்மிடமிருந்து இருந்து போய்விட்டதாகக் கருத வேண்டும். அடுத்த நாளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் முந்தைய நாளை எடுத்துச் செல்லக் கூடாது. எனவே, அன்றாடப் பணியை அன்றே செய்து முடித்தல் நல்லது.
இதைச் செய்யாமல் தவிர்க்கும்போது "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நம் மன நலன் குன்றலை நம் முகமும், கண்ணும் வெளிச்சமிட்டு காட்டிக் கொடுத்துவிடும். நாளை என்பது நிச்சயம் இல்லை, நேற்று என்பது முடிந்துபோன பொய், இன்று என்பதே உண்மை. இம்மூன்றையும் கடைப்பிடித்தாலே வாழ்க்கையில் அதிகமான பிரச்னையை சமாளித்து சரி செய்து நம்முடைய உடல் நலன், மன நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
"மனம்' மனிதனின் அதி நுட்பமான ஓர் அங்கம். அதுவே நம்மை மகிழ்ச்சியாகவும், சோகமாகவும், உற்சாகமாகவும், பதற்றமாகவும் ஆக்கக்கூடியது. ஆனால், எப்போது அது சோர்வடைகிறதோ, நம்மைச் சுவாசிக்க முடியாதபடி தடுமாறச் செய்து விடும். குறிப்பாக மன அழுத்தம், தனிமை, கவலை, பீதி தற்கொலை எண்ணங்கள் போன்றவை நம்மை உள்ளுக்குள்ளேயே கொன்று விடும்.
நாம் ஆசைப்பட்ட காரியம் நடக்கவில்லை, நேசப்பட்ட விஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக மனம் வருந்தக் கூடாது. அதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். நல்ல தூக்கம், உடற்பயிற்சி, நண்பர்களுடன் உரையாடுவது, உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே ரசிப்பது இதுபோன்றவற்றின் மூலம் உங்கள் மன அமைதிக்கு நீங்கள் தீர்வு காணலாம்.
"யாராக இருந்தாலும் சரி, யாருக்காகவும் இருந்தாலும் சரி' உங்கள் சுய மரியாதையை மற்றவர்களுக்கு நீங்கள் எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
அப்படி விட்டுக் கொடுப்பதற்கு ஆரம்பித்து விட்டால், அங்கேதான் தோன்றுகிறது உங்கள் மன நலனை நீங்களே கெடுப்பதற்கான தொடக்கப் புள்ளி. ஏனென்றால், இரவில் தூங்கும்போது அதை நினைத்து வருத்தப்படுவதைவிட, உங்கள் நண்பர்கள் அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். அந்த வார்த்தைகள் நம்மை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்காமல், மனதை சிறையில் அடைத்த மாதிரி ஓர் எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கும். ஆகவே, எப்போது உங்களுக்கு சுயமரியாதை என்ற நிலை இழக்கப்படுக்கிறதோ, அப்போது துணிச்சலாக அதற்கு எதிராக குரல் கொடுங்கள்.
மன நலம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை ஆகியவற்றின் நிலையாண்மையைக் குறிக்கிறது. இது நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவரின் மனநிலை நல்ல நிலையில் இல்லாத போது அவர் தனது வேலை, உறவுகள், நண்பர்கள் அனைத்திலும் பல சிக்கல்களை சந்திக்கக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான முதல்படி ஊக்கமாகப் பேசுதல், நம் நிலையை நமக்கே புரிய வைத்தல், தியானம், யோகா போன்றவற்றைக் கடைப்பிடித்தால் நம் மனதை சமநிலைப்படுத்த முடியும். மேலும், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.
கடந்த 2015-16-ஆம் ஆண்டுகளில் தேசிய மன நலன், நரம்பியல் நிறுவனம் மூலமாக, அரசு தேசிய மன நலக் கணக்கெடுப்பை 12 மாநிலங்களில் நடத்தியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவான மனநலக் கோளாறுகள், கடுமையான மனநலக் கோளாறுகள், மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளிட்ட மனநலக் கோளாறுகளின் பாதிப்பு சுமார் 10.6% என்று அந்தக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் மனச்சோர்வுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25% அதிகரித்துள்ளது. இதில் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானோர் பெண்கள், இளைஞர்கள்தான். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் மன நலப் பிரச்னைகளுடன், வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 8 நபர்களில் ஒருவர் மன நலக் கோளாறால் பாதிக்கப்படுகின்றார்.
தற்போது 100 இறப்புகள் நிகழ்ந்தால், அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவராக உள்ளார். தற்கொலை செய்பவர்களில் 58% பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒரு தற்கொலை நிகழ்கிறது. அதாவது ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை நகரங்களைவிட கிராமப்புறங்களில்தான் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இதுதவிர, அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சித்து தோல்வியடைகின்றனர். இது மன நல ஆபத்தைக் காட்டும் எச்சரிக்கை மணி.
இதை முன்கூட்டியே உணர்ந்து தடுக்கும் வழிகளில் மன நலப் பராமரிப்பு மிகப்பெரிய பங்காற்றுகிறது. ஒவ்வோர் உயிரும் மதிப்பு மிக்கதுதான். நாம் அனைவரும் மன நலன் குறித்த புரிதலை வளர்த்தால், ஒவ்வோர் மனிதரும் அவருக்கேற்ற ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.