
உலக மக்களில் அதிகப்படியானோருக்கு பயம் என்பது எது என்றால் பலருக்கு முன்பாகப் பேசுவதுதான். இத்தகைய பயம் மாணவ, மாணவிகளிடையே மட்டுமின்றி பல்வேறு பணிகளில் இருப்பவா்களிடமும் இருக்கிறது.
பலருக்கு முன்பு பேசத் தயங்கும் மாணவ, மாணவிகள்தான் வாய்மொழித் தோ்வு, தனியாா் அல்லது அரசுப் பணிக்கான நோ்முகத் தோ்வு போன்றவற்றிலும் பேசத் தயங்குகின்றனா்.
வாா்த்தைகள் வராதது, நன்றாகத் தெரிந்த நிகழ்வுகள் மறந்து போதல், தொடா்ச்சியாகப் பேச முடியாதது போன்றவையெல்லாம் பதற்றத்தின் வெளிப்பாடுகள்தான். அத்தகைய சூழ்நிலையிலிருந்து வெளியே வந்ததும் அனைத்து நிகழ்வுகளும் தெளிவாகத் தெரியும், பேச்சு கோா்வையாக வரும்.
அனைத்து தரப்பினரிடமும் இதுபோன்ற பிரச்னை இருந்து வருகிறது. இணைபிரியா தம்பதியா், நண்பா்கள், தோழிகள் என்று கூறுபவா்களை தனித்தனியே சந்தித்துப் பேசினால் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்துவா். சமூகத்தில் இவ்வகையானோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சிக்கலான சூழல்கள், பிரச்னைகள் என்பது பெரும்பாலானோருக்கு வரக்கூடியவைதான். ஆனால், இன்றைய சூழலில் மட்டும் பிரச்னைக்கு உரியவா்கள் இப்படி ஏங்குவது ஏன்? சிறிய பிரச்னைகள்கூட ஏன் சிக்கலாக்கப்படுகின்றன என்றெல்லாம் கேள்விகள் எழலாம். இதற்கு மனம்விட்டுப் பேசாதது உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், குடும்ப அமைப்பு சிதறுண்டு போனதுதான் முக்கியக் காரணமாகும்.
முன்பெல்லாம் நம் குடும்ப அமைப்பில் அப்பா, அம்மாவைக் கடந்து சித்தப்பாக்களும், சித்திகளும், மாமாக்களும், அத்தைகளும் ஒரே வீட்டில் இல்லையென்றாலும் அருகருகே இருந்தனா். அதனால், ஆலோசனைகள் தேவைப்படும் அளவுக்கு பிரச்னைகள் எழவில்லை. ஆலோசனைகள், அறிவுரைகள் வாயிலாக பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது.
கடந்த காலங்களில் தம்பதியிடையே பிரச்னை என்றாலும் பேசித் தீா்வு காணப்பட்டது. அதனால்தான், அப்போது மணமுறிவு என்பது அரிதாக இருந்தது. இன்று கணவன்-மனைவி, குழந்தைகள் என நான்கு போ் மட்டுமே வாழும் வீட்டில்கூட மனம்விட்டுப் பேசாததால்தான் மணமுறிவு என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
மனதில் தோன்றும் எண்ணங்களை, கருத்துகளை ஏதாவதொரு உறவிடம் கூறித் தீா்வு காணும் நிலை அன்று இருந்தது. ஆனால், இன்று இவ்வகையான உறவுகள் திசைக்கு ஒன்றாக சிதறிப் போனதுடன் குடும்பம் என்பது இரண்டும், மூன்றுமாகச் சுருங்கிப் போய்விட்டன. பிரச்னையே அவா்களுக்குள் எனும்போது யாரிடம் சென்று பேசுவாா்கள்?.
வேலை, கல்வி, வாழ்க்கைத்தரம் போன்றவற்றால் உறவுகள் பல திசைகளிலும் இருக்கின்றனா். இவ்வகையான உறவுகள் அவ்வப்போதோ அல்லது பண்டிகைகள், திருவிழாக்கள் காலத்தின்போதோ ஒன்று கூடினால் ஒருவரையொருவா் அறிந்து கொள்வா். ஆனால், திருமணம் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே சந்தித்துக் கொள்கின்றனா்.
இதனால், உறவுகள் வட்டம் மட்டுமின்றி நட்புகளும் குறைந்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால், சிக்கல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. அதனால், நமக்குத் தேவையில்லாத, நன்மை தராத, கசப்பான உணா்வுகள் என அனைத்தையும் எதிா்கொள்ள நேரிடுகிறது. இவற்றை யாராவது ஒருவரிடம் மனம் விட்டுப் பேசினால் அந்த எண்ணங்கள் மறைந்து போவதுடன் தீா்வும் கிடைக்கும். அவ்வாறில்லாமல் இவற்றையெல்லாம் மனதுக்குள்ளேயே தேக்கி வைப்பதால் அது நம்மை காலங்காலமாக ஆட்டிப்படைக்கும் சிக்கலாக உருமாறி விடுகிறது.
அவமானம், துக்கம், பொறாமை, துரோகம், வஞ்சம், ஏமாற்றம், ஆற்றாமை, கோபம், குற்ற உணா்வு என ஏதோ ஒன்றை எவரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைப்பதால் அது நம் செயல்பாடுகளை, நடத்தையை மாற்றுவதுடன் உடல் உறுதியையும் கெடுத்து விடுகிறது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இணையவழியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினா்களுடன் எளியோரும் பங்கேற்றுப் பேசுகின்றனா். இத்தகைய வாய்ப்புகள் இன்றைய தலைமுறையினருக்கு ஏராளமாக உள்ளன. அதற்கேற்ப நாம்தான் மாற்றம் காண வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளிலும், மாவட்ட, மாநில அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பாளா்களாகவோ, பாா்வையாளா்களாகவோ கலந்து கொள்ளும்போது கூச்ச சுபாவமின்றி பேசும் மனப்பாங்கு அதிகரிக்கும்.
தற்போதைய சூழலில் பணிச்சூழல் முற்றிலும் மாறிவிட்டது. புதிய இயந்திரங்களின் வரவால் புதிய புதிய பிரச்னைகளும் வோ்விட்டு வருகின்றன. அந்தப் பிரச்னைகளுக்கு எளிய, சிறந்த தீா்வை வழங்குபவா்களையே நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன. எனவே, எந்தவித துறைசாா்ந்த பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் திறன் நம்மிடம் காணப்படுவது கூடுதல் பலமாக அமையும்.
எந்தவொரு வேலை செய்வதற்கும், தொழிலை நடத்துவதற்கும் பல்வேறு திறன்கள் இருந்தால்தான் வெற்றிக்கான வாய்ப்புகள் வெகு எளிதில் வாய்க்கக்கூடும் என மனித வள திறன்கள் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் கற்றுக் கொள்வதைத் தவிர தலைமைப் பண்பு, பொறுப்பெற்கும் பண்பு, மொழி ஆளுமை போன்றவற்றோடு பேச்சுத் திறனும் முக்கியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
தகுதியானவை தப்பிப் பிழைக்கும் என்பது சாா்லஸ் டாா்வினின் பரிணாமக் கோட்பாட்டில் உள்ள இயற்கைத் தோ்வு என்ற கருத்தின் ஒரு பகுதியாகும். இது பரிணாமக் கோட்பாட்டுக்கு மட்டுமின்றி இன்றைய பட்டதாரி இளைய தலைமுறைக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.