

முனைவர் கோ.விசுவநாதன்
அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
அப்போதெல்லாம் திமுகவின் பொதுக்கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.
அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர்முதல் கிளைக் கழகச் செயலாளர்வரை எல்லோர் பெயரும் சொல்லி "அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.
கட்சித் தொண்டர்களை "தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி "உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் "என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.
1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிஷம் பேசினேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது என்பது எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. அன்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு மதுரைக்குப் போனார் அண்ணா. பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து கட்சிப் பிரமுகர்கள் வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான்; வக்கீலுக்கு படித்திருக்கிறான்; அருமையாக பேசினான் என்று அங்கு இருந்தவர்களிடம் சொன்னார் அண்ணா.
அப்போது, அங்கிருந்த சட்டக் கல்லூரியில் என்னுடன் படித்த மைனர் மோசஸ் "அவன் பெயர் விசுவநாதன். நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்'. மாணவர் கழகத்தில் செயலாளராக இருந்தான் என்று சொன்னார்.
அப்போது, அண்ணா அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.
இதை மைனர் மோசஸ் சில தினங்களுக்குப் பிறகு என்னிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார். இப்படித்தான் நான் ஒரு பொதுக்கூட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டேன்.
அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் போது, நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் "துண்டு ஏந்தி தொண்டர்கள் வருகிறார்கள், உங்களால் ஆன நிதி உதவி செய்யுங்கள்' என்று அறிவிப்பு செய்வார். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் 10 பைசா, நாலணா, 50 பைசா என்று அவர்களால் முடிந்ததைத் தருவார்கள். அதைவைத்து கூட்டச் செலவுகளைச் சமாளிப்போம். இதேபோல், கட்சி பிரசார நாடகங்களும் போடுவது உண்டு. கருணாநிதி, இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கட்சி பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.
1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் 1977-இல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டுமே அரசியல் வரலாறுதான். இப்போது 1967 தேர்தல் மற்றும் 1977 தேர்தல் இரண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்துவைத்தது. அன்றைய திமுக வேட்பாளர்கள் எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். ஆனால், படித்தவர்கள். இளைஞர்கள், படித்தவர்கள், சாமானியர்களை முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் அனுப்பிய பெருமை அண்ணாவையே சேரும்.
இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்அண்ணா. சுதந்திராக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் ஒரே கூட்டணியில் வந்ததே அண்ணாவின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் தீண்டாமை முடிவுக்கு வந்தது; வெற்றிக் கூட்டணி உதயமானது.
திமுகவின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரம் இன்றி இருந்தது. மொத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்கு என்று பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி செலவு செய்தது. தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாலாயிரம் ரூபாய் தந்தார் அண்ணா. அதுகூட காசோலையாக; அந்த தேர்தல் மாதிரி சிக்கனமான தேர்தல் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.
வேட்பாளர்களிடம் கட்சிக்காரர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்த்தது கொடி, தோரணம், சுவரொட்டி; இவற்றுடன் ஓட்டு கேட்க ஊருக்கு வர வேண்டும் இவ்வளவுதான்.
அதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வீடுவீடாக ஓட்டுகேட்கும் வழக்கமெல்லாம் இல்லை. முக்கிய பிரமுகர்கள், மிட்டாமிராசுதாரர்கள், மணியக்காரர்கள், நாட்டாண்மை போன்றவர்களைச் சந்தித்துப் பேசி அந்தப் பகுதி மக்களை ஓட்டுபோட வைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அண்ணா அதை அப்படியே அடியோடு மாற்றினார். ஒவ்வொரு திமுக வேட்பாளரும் ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டு வாசல்படியும் ஏறி இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக வேட்பாளர்களும் அப்படியே செய்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அண்ணா யாரையும் அவதூறாகப் பேசமாட்டார். எனவே, தம்பிமார்களும் அப்படியே இருந்தார்கள். இதுபோதாது என்று எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம். இவை எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நான் உட்பட 25 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதை உலக சாதனை என்று பாராட்டினார் ராஜாஜி.
காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் பதவியை ராஜிநாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார்.
1977 தேர்தல் அதிமுக வெற்றிக்கு முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனைதான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ், இந்தக் கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.
அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட சில கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்தத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆருக்கும், அண்ணா திமுகவுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம்.
1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய பின்பு நடந்த தேர்தல்.
எம்ஜிஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போது, எதிர்க்கட்சிகள் கேட்ட மிக முக்கியமான கேள்வி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அரசியலில் வேஷம் போட முடியாது. திரைப்படம் என்பது நடிப்பு, அரசியல் என்பது நிஜம். ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரசாரம் செய்தார்கள்.
ஆனாலும், எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று மட்டும்தான் மக்கள் மன்றத்திடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.
அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன்கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். அண்ணாவும், எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.