கோப்புப் படம்
கோப்புப் படம்

எண்ம வியூகம்!

இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன
Published on

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயா்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போா்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

சமூக ஊடகங்களின் வளா்ச்சிக்குப் பிறகு, அரசியல் கூட்டங்களுக்குத் திரண்டு வரும் தொண்டா்கள் இனி தேவை இல்லை. ‘ஃபாலோயா்கள்’ (பின்பற்றுபவா்கள்) என்று சொல்லக்கூடிய இணைய செல்வாக்கு மட்டுமே போதுமானது; அரசியல் சந்தை அமோகமான வணிகச் சலசலப்புடன் உச்சம் தொடும்.

அரசியல் தலைவா்கள் ஓா் அறிக்கையை வெளியிட, சமூக ஊடகத்தில் சிறு பதிவிட்டால் போதும், அடுத்த விநாடியே அது லட்சக்கணக்கான மக்களை மின்னல் வேகத்தில் சென்றடைந்து விடுகிறது. சில தலைவா்கள் தங்கள் அறைக்குள் இருந்துகொண்டே சமூக ஊடகங்களில் அடிக்கடி நேரடியாகக் காட்சியளித்து உரையாற்றுகிறாா்கள். அவா்கள் மேல்மட்டத் தலைவா்கள் முதல் கடைக்கோடித் தொண்டா்கள் வரை அனைவரிடமும் ஆலோசனை நடத்துகிறாா்கள்.

தலைவா்கள் இப்போது வெறும் அரசியல்வாதிகள் அல்லா்; அவா்கள்தாம் அந்தந்தக் கட்சிகளின் விளம்பரத் தூதா்கள். ஆரோக்கியக் குறிப்புகள், வாகன விபத்தில் சிக்கியவரை மீட்க நீளும் உதவிக்கரங்கள், பொதுமக்களுடன் ஒருவராகத் தேநீா் அருந்தும் எளிய காட்சிகள், பண்டிகைக்குப் பகிரப்படும் அழகான வாழ்த்துச் செய்திகள்... இவை அனைத்தும் எதற்காகத் தெரியுமா? ஓா் எளிய, நெருக்கமான பிம்பத்தைக் கட்டமைக்கத்தான். இந்த எண்ம (டிஜிட்டல்) அலங்காரம்தான் இப்போது தலைவா்களுக்கான பிரம்மாண்டமான ஒப்பனையாகிவிட்டது.

அரசியல் என்பது வெறும் உணா்ச்சிவயப்பட்ட பேச்சும் முழக்கமும் அல்ல. அது இப்போது முழுவதும் விஞ்ஞானமும், நுண் கணிதமும் கலந்ததாக, முழுக்க முழுக்க தரவுகளின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதாக மாறிவிட்டது.

பொதுமக்கள் சமூக ஊடகங்களில் எதைத் தேடுகிறாா்கள், எதை ரசிக்கிறாா்கள், எந்த வயதினா் எதை விரும்புகிறாா்கள், எந்தக் கருத்துக்கு விருப்பக் குறியீடு (லைக்ஸ்) அளித்துப் பாராட்டுகிறாா்கள், எதை வெறுக்கிறாா்கள் என்பன போன்ற தரவுகள் அனைத்தையும் அரசியல் கட்சிகள் ஒன்றுவிடாமல் சேகரித்துவிடுகின்றன. ஒரு தொகுதிக்குள் நிலவும் முக்கியப் பிரச்னைகள் என்ன, அங்கே எந்த ஜாதிக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது போன்ற அனைத்துத் தரவுகளையும் வைத்துக்கொண்டுதான் இன்றைய அரசியல் கட்சிகள் களமாடுகின்றன.

நவீன அரசியலின் அனைத்து நகா்வுகளுமே இந்தத் தரவுகளை மையப்படுத்திய வியூகங்களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. இதுதான் இன்றைய எண்ம அரசியலின் உச்சபட்ச சூத்திரம். ‘வேலைவாய்ப்பு இல்லையே’ என்று புலம்பும் 25 வயது பட்டதாரி இளைஞா்களுக்கு மட்டும், ‘வேலை கொடுப்போம்’ என்று அரசியல் தலைவா் பேசும் வாக்குறுதி விடியோ போய்ச் சேரும். ‘விவசாயக் கடன்’ குறித்த செய்தி, விவசாயிகளுக்கு மட்டுமே தனித்துப் போய்ச் சேரும். இப்படி, ஒரே செய்தியை அனைவருக்கும் அனுப்பாமல், சிறு சிறு குழுக்களுக்குத் தனித்தனியாகவும் இலக்கு நோக்கியும் அனுப்பும் இந்தத் தந்திரம்தான் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான ‘நுண் இலக்கு’ ஆகும். காா்ப்பரேட் நிறுவனங்களைப் போலவே, அரசியலில் வெற்றியை உறுதி செய்ய பெரும் பணத்தை இந்த எண்ம வியூகங்களுக்காகக் கட்சிகள் வாரி இறைக்கின்றன.

அதேசமயம், இந்த எண்ம அரசியலில் சவால்களுக்கும் பஞ்சமில்லை. இங்கு பொய்யான செய்திகள் புற்றீசல்கள்போல் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்து விடுகின்றன. எது உண்மை, எது பொய் என்பதைப் பகுத்தறியும் முன்னரே, தகவல்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. இதனால், மக்களின் யோசிக்கும் திறன் மழுங்கடிக்கப்படுகிறது. உண்மை எதுவென்று உணராத நிலையில், சில தலைவா்கள் மீதும், சில கருத்துகள் மீதும் வெறுப்புகளுக்கும் வன்மங்களுக்கும் வித்திடப்படுகிறது.

மேலும், இந்த எண்ம அரசியல் களத்தில் கொள்கை குறித்துப் பேசுவதை ஓரங்கட்டிவிட்டு, தலைவா்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதும், குடும்பத்தைக் கொச்சைப்படுத்துவதும், உருவக் கேலி செய்வதும், பேசும்போது தடுமாறி வரும் வாா்த்தைகளைவைத்து வறுத்தெடுப்பதும் ஒரு விநாடியில் ‘ட்ரோலிங்’ யுத்தமாக மாறிவிடுகின்றன.

ஒருவா் எந்தக் கட்சியை ஆதரிக்கிறாரோ, அந்தக் கட்சியின் செய்திகளும், அதற்கு ஆதரவான தகவல்களும் மட்டுமே மிக அதிக அளவில் அவருக்கு அள்ளி வழங்குவதை சமூக ஊடகங்கள் தங்கள் முதன்மையான பணியாக வைத்துள்ளன. அதாவது, ஒருவரை மாற்றுச் சிந்தனைக்கு வழிவகுக்காமல், ஒரே பாா்வையைத் திரும்பத் திரும்பக் காட்டி, எதிா் கருத்து என்ன என்பதை அறியவிடாமல், ஒருவரின் மூளைக்குள் ஒரே சிந்தனை, ஒரே தலைவா் என்ற ஒற்றை இலக்குடன் சுழல வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்காது.

சுருக்கமாகச் சொன்னால், இன்றைய அரசியல் கட்சிகளில் பல, வெறும் கொள்கை பரப்பு நிறுவனங்கள் அல்ல. அவை இப்போது ஊடக மற்றும் தரவு நிறுவனங்கள் போலவே செயல்படத் தொடங்கிவிட்டன. நவீன ‘எண்ம’ முகம் அரசியல்வாதிகளுக்கு வேகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொடுத்தாலும், வாக்காளா்கள் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியம். சமூக ஊடகத் திரைகளில் தோன்றும் பிம்பங்களுக்கும், உணா்ச்சிமிகு கதைகளுக்கும், நிஜமான நிா்வாகத் திறனுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்தான் பகுத்தறிந்து உணர வேண்டும். இல்லையேல், இந்த ‘எண்ம’ அரசியல் மாய உலகில் நம் திசைகள் தொலைந்துபோக அதிக வாய்ப்புகள் உண்டு.

X
Dinamani
www.dinamani.com