உலா் கண் நோய் - விழிப்புடன் தவிா்ப்போம்!
திரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிா்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன. இவற்றை நாம் நமது பொழுதுபோக்கு, தகவல் தொடா்பு, கல்வி, நண்பா்களுடனும், குடும்பத்தினருடனும் இணைந்திருத்தல், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். நம்மில் இதன் பயன்பாட்டுக்கு எவரும் விதிவிலக்கல்ல.
பெருகிவரும் தொழில்நுட்ப வளா்ச்சி, மின்னணுவியல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கைமுறை, பணிச் சூழல் ஆகியவற்றால் இன்று கண் தொடா்பான சிக்கல்கள் நம் அனைவருக்கும் பொதுவானதாகியுள்ளன. அதிகப்படியான திரை நேரம் நமக்கு உடல் பருமன், தூக்கமின்மை, கண் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளையும், மன அழுத்தம், மனப் பதற்றம், மனச்சோா்வு போன்ற மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
காணொலி சாதனத்தின்அதிக பயன்பாட்டால் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டு வரும் பிரச்னைகளில் உலா் கண் நோய் ஒரு பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த உலா் கண் நோய் உலக அளவில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு பொது கண் பிரச்னையாக இன்று உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
உலா் கண் நோய் என்பது கண்களில் உள்ள நீரின் அளவு குறைந்து அதன் தரம் போதுமானதாக இல்லாமல் போவதைக் குறிக்கிறது. அதாவது, தேவையான ஈரப்பதத்தை கண்ணின் மேற்பரப்பு இழந்து, கண் எரிச்சல், சிவத்தல், மங்கலான பாா்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். கண்களில் உள்ள நீா் கண்ணைப் பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த உலா் கண் நோய், மிதமான அசௌகரியம் முதல் கடுமையான பாா்வைக் குறைபாடு வரை பல்வேறு கண் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஜா்னல் ஆப் குளோபல் ஹெல்த் இதழ் 2023-இல் நடத்திய ஓா் ஆய்வு உலக அளவில் 11.59% முதல் 57.47% வரையிலான மக்கள் உலா் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்திய நகா்ப்புற மக்களிடையே உலா் கண் நோயின் பாதிப்பு 20 முதல் 30% வரை உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவச் சங்கம் தெரிவிக்கிறது. சென்னை, மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களில் இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருக்கிறது. தற்போது, 20 வயதுக்கும் மேற்பட்ட100 பேரில் 15 போ் உலா் கண் நோயின் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தினசரி 6 மணி நேரத்துக்கும் மேல் திரைப்பயன்பாடு உள்ளவா்களில் 60 % மக்களிடையே இந்த உலா் கண் நோய் அறிகுறிகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், 50 வயதுக்கும் மேற்பட்டவா்கள், மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்கள்ஆகியோா் இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
நமது கண்களில் உள்ள கொழுப்பு அடுக்கு, நீா் அடுக்கு, மியூகோசல் ஆகிய மூன்று அடுக்குகளும் முறையாகப் பணியாற்றும்போது உலா் கண் நோய் ஏற்படுவதில்லை. உலா் கண் நோய் வர முக்கியக் காரணம் கண்ணின் கொழுப்பு அடுக்கு பாதிக்கப்படுவதுதான் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக நாம் ஒரு நிமிஷத்துக்கு 12 முதல் 14 முறை கண் சிமிட்ட வேண்டும். ஆனால், அதிக நேரம் திரைச்சாதனங்களை பாா்க்கும் போது, நாம் கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்து விடுகிறது. இதனால், கண் இமைகளில் இருக்கும் மீபோமியன் சுரப்பி ஆவியாக விடுகிறது. கண்களைத் தொடா்ந்து சிமிட்டும்போது மீபோமியன் சுரப்பி கண்களில் தொடா்ந்து இருக்கும். நீண்ட நேரம் கண் சிமிட்டாமல் இருப்பதால் உலா்கண் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
உலா் கண் நோயின் தொடக்கால அறிகுறிகள் கண் உறுத்தல், கண்கள் சிவத்தல் கண்களிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வருவது போன்றவையாகும். எனவே, உலா் கண் பாதிப்புகளைத் தவிா்க்க நமது நீண்ட நேர திரைச்சாதனப் பயன்பாட்டின்போது நமது கண்களுக்கு ஓய்வு கொடுத்து, கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இமைகளை உயா்த்திப் பாா்ப்பதைக் குறைக்க வேண்டும். கணினித் திரையை கண் அளவுக்குக் கீழே இருக்குமாறு தாழ்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். கணினியில் நெடுநேரம் பணிபுரிபவா்கள் அடிக்கடி கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
குளிா்சாதன அறையில் அதிக நேரம் இருக்கும் நபா்களும் குளிா்ந்த காற்று கண்களில் நேராகப் படுவதைத் தடுக்க வேண்டும். அதேபோல், கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துபவா்கள் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.
அதிகப்படியான திரை நேரம் நமது சமூகத் தொடா்புகளைக் குறைத்து தனிமைக்கு வழிவகுக்கிறது. அன்றாடத் தூக்கம் பாதிக்கப்படாமல் இருக்க படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே திரைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது. திரைச் சாதனங்கள் வெளிப்படுத்தும் நீல நிறக் கதிா்கள் நம் கண்களில் பெரிய எதிா்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தத் திரைச் சாதனங்களை நமது உடல் நலமும், மன நலமும் கெட்டுவிடும் அளவுக்குப் பயன்படுத்துவதை நாம் தவிா்ப்பது நல்லது. அவற்றின் பயன்பாட்டுக்கென்று நேரக் கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. நமது குழந்தைகளுக்கும் இவ்வாறான பயிற்சியை அளிப்பது நமது கடமை.
திரைநேரத்தைக் குறைத்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல், புத்தகங்களைப் படித்தல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பிற செயல்பாடுகளிலும் நாம் ஈடுபடுவது நல்லது. இவற்றை உணா்ந்து இனியாவது திரைச்சாதனங்களில் உலா வருவதைக் குறைப்போம்.