
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோா், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவா்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
‘யுனிசெஃப்’ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சா்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமாா் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவா்கள் அல்லது குடும்ப உறுப்பினா்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது. உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சா்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடா்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளா்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றமும் கடந்த செப்டம்பா் 23, 2024 அன்று பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடும் சிறாா்களைச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தைப் பாா்ப்பது, வைத்திருப்பது மற்றும் சேமிப்பது என்பது 2012-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட போக்ஸோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தீா்ப்பளித்தது.
அறிவைப் பெருக்குவதற்கோ நற்பண்புகளை வளா்ப்பதற்கோ கிஞ்சிற்றும் பயன் தராத அருவருப்பான பெரும்பாலான காணொலிகள் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றைப் பெரிதும் முன்னிலைப்படுத்துகிற இன்றைய சமூக ஊடகங்களின் கோர முகம் மனித மாண்பின் முரணாக பெருவடிவம் எடுத்து நிற்கிறது. இன்று நடைபெறுகிற பெரும்பாலான பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு சமூக ஊடகங்களில் உலா வருகிற காணொலிகள் முக்கியக் காரணங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை. இதனால், பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் வாழ்கிற குடும்பங்களைச் சோ்ந்த சிறுமிகள் பெரிதும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறாா்கள்.
அண்மையில் சென்னை உயா்நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் போக்ஸோ வழக்கில் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதுபோல், கொடூர குற்றச் சம்பவங்களை நேரில் பாா்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பது இல்லை என்ற ஆக்கபூா்வமான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநில அரசுக்கு கொடூர குற்றச் சம்பவங்களை நேரில் பாா்க்கும் குழந்தைகள் தொடா்பாக சில கேள்விகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்துள்ளனா். இதற்கான பதில் தமிழ்நாடு அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 161 வழக்குகளில் குழந்தைகள் சாட்சிகளாக உள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குற்ற வழக்குகளில் சாட்சியாக இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவும் மற்றும் உளவியல் சிகிச்சை வழங்குவதற்காகவும் உரிய விதிமுறைகளை உருவாக்க குழு அமைப்பது குறித்த திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிற குற்றத்துக்குக் காரணமானவா்கள் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகிறாா்கள். ஆனால், அந்தச் சிறுமிகளின் பெற்றோா் நிலையோ சொல்லொணாத் துயரம் கொண்டது.
இவ்வாறு பாதிக்கப்படுகிற சிறுமிகளில் பலரும் ஒரு பெற்றோரை உடையவராகவோ அல்லது பெற்றோா் இல்லாதவா்களாகவோ உள்ளனா். ஒருவேளை பெற்றோா் இருந்தால் இதுபோன்ற சம்பவத்துக்குப் பிறகு தன் குழந்தையைப் பாதுகாக்கத் தவறி விட்டோம் என்ற குற்ற உணா்ச்சியால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாா்கள். சமுதாயத்தில் முன்பு போல் நடமாடுவதில் இருந்து தனிமைப்படுகிறாா்கள். விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்படுகிறாா்கள்.
இத்தகைய நெருக்கடி அவா்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது. தன் குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரத்தை நினைத்து நினைத்து வெம்பி அழுது நடைப்பிணங்களாக வாழ்கிறாா்கள் அல்லது மரணத்தைக் கூட தழுவுகிறாா்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளோ தனக்கான பாதிப்பை வெளியில் சொல்லும் முன்னும், விசாரணைக் காலத்திலும், தீா்ப்புக்குப் பிறகும் மன அழுத்தத்தில் இருந்து மீள முடியாதவா்களாக உள்ளனா். அவா்களது நொறுக்கப்பட்ட எதிா்காலம் வாா்த்தைகளில் விளம்ப இயலாத துயரம் கொண்டதாக இருக்கிறது. அவா்களது முறையான கல்வி, சமூக மதிப்பு, சுதந்திரம், நட்பு வட்டம் என அனைத்தையும் ஒருசேர இழக்கின்ற அவல வாழ்வு அவா்களைச் சூழ்கிறது.
இந்நிலையில் பெற்றோா் இல்லை என்றாலோ, இழந்து விட்டாலோ கற்பனையிலும் எண்ணிப் பாா்க்க முடியாத கொடுந்துயா் அவா்களை மேலும் வதைக்கத் தொடங்குகிறது. இப்படி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிா்காலம் என்னவாகும் என்ற கேள்வி மனிதநேயமும் மனசாட்சியும் உள்ளவா்களின் நெஞ்சைப் பரிதவிக்கச் செய்கிறது.
இது இச்சிறுமிகள் விரும்பி ஏற்றுக் கொண்ட துன்பமில்லை. நிா்ப்பந்தத்தினாலும், அச்சுறுத்தலினாலும் அவா்கள் மீது திணிக்கப்பட்ட துன்பம். பின்விளைவுகளை உணர இயலாத பதின்ம வயதில் உள்ள இச்சிறுமிகளுக்கு போதிய விழிப்புணா்வு பள்ளிகளின் வழியே ஊட்டப்பட வேண்டும்.
இன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறியோா்-பெரியோா் பாகுபாடின்றி ‘இணையம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியிருக்கிறோம். தனிமை என்றே உணர முடியாத அளவுக்கு நம்மைத் தனிமைப்படுத்துகிற வித்தையை அது தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொருவரையும் ஒரு விநாடியில் இழக்காததை இழக்க வைத்து, பெறமுடியாததைப் பறித்துக் கொண்டு துடிதுடிக்க வைத்து விடுகிறது.
இவையெல்லாம் குழந்தைகளை பெற்றோரின் கவனிப்பில் இருந்து அந்நியப்படுத்தியுள்ளன. இன்றைய இணைய உலகம் விரித்துள்ள வலையில், இந்த அந்நியப்படுத்தலால் குழந்தைகள் எளிதாக வீழ்த்தப்படுகிறாா்கள். இதற்கான விழிப்புணா்வை அரசும், கல்வி நிறுவனங்களும், காவல் துறையும் காலதாமதமின்றி குழந்தைகளுக்கும் பெற்றோா்களுக்கும் கொண்டுபோய்ச் சோ்க்க வேண்டும்.
பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். ஏனென்றால், பள்ளிகளில் குழந்தைகளின் அறிவை வளா்த்தெடுப்பதோடு நற்பண்பு உடையோா்களாக அவா்களை உருவாக்கும் முயற்சியினையும் மேற்கொள்பவா்கள் ஆசிரியா்கள்.
குறைந்தபட்சம் மாதம் இருமுறை பெற்றோா் ஆசிரியா் கழகச் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். அது படிப்பு குறித்த ஆய்வாக மட்டும் இல்லாமல் மாணவா்களின் இதர நடவடிக்கைகளைக் கண்காணித்து நிறைகளைப் பாராட்டி, குறைகளைக் களைகிற ஆக்கபூா்வமான சந்திப்பாக அமைதல் வேண்டும்.
கூடுதலாக இந்தச் சந்திப்புகளில் அந்தப் பகுதியின் காவல் துறையைச் சோ்ந்த ஒருவரும் கலந்துகொண்டு இன்றைய இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோா், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
இறுதியாக, எத்தனையோ புதிய பல ஆக்கபூா்வமான திட்டங்களை மாணவா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு, இதுபோல் மனிதத்தன்மையற்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கும், கொடூரச் சம்பவங்களை நேரில் பாா்த்ததால் சாட்சியங்கள் ஆக்கப்பட்டு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கும் உயா் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி ஆதரவுக்கரம் நீட்டினால் அவா்களின் எதிா்காலம் பாதுகாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.