

தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆவணம் என்று கூறப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்விவரை இந்தக் கொள்கை உள்ளடக்கியது.
முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசும், இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசும் கொண்டு வந்தன.
மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் ஒரு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களைப் புறக்கணித்து விட்டு, கல்வியாளர்கள் என்ற பெயரில் கட்சி ஆதரவாளர்களை வைத்து கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. அவர்களது அரசியல் கொள்கைகள் கல்விக் கொள்கைகளாகத் திணிக்கப்படுகின்றன.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசர அவசரமாக இந்திரா காந்தி தமது அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வந்தார். அது இப்போது பாஜக ஆட்சிக்கும் வசதியாகப் போய்விட்டது. அவசர நிலைக் காலத்தைக் கேலி பேசும் பிரதமர் மோடி பறிக்கப்பட்ட கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு வழங்குவாரா?
மத்திய, மாநில அரசுகளிடம் சிக்கித் தவிக்கும் கல்வியின் வரலாறு மிகவும் பெரியது. 1947-ஆம் ஆண்டு தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வியறிவு இல்லாமையைப் போக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.
இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார்.
மத்திய அரசு இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் திட்டங்களை உருவாக்கியது. பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-1949) இடைநிலைக் கல்வி ஆணையம் (1952-1953), பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் கோத்தாரி ஆணையம் (1964-66) ஆகியவற்றை நிறுவியது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அரசு, அறிவியல் கொள்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற உயர்தர அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவ நிதியுதவி வழங்கியது.
1961-இல் மத்திய அரசு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தை (என்சிஇஆர்டி) உருவாக்கி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டது.
இப்போது, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025 என்ற பெயரில் புதிய கொள்கை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையுடன் மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாகக் கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் அதனுடன் ஒத்துப் போவதையும் காணலாம்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையுடன் மூன்றாவது மொழி கற்பித்தல் மற்றும் மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வு போன்ற கருத்தியல்களில் முரண்பட்டு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டுக்கான தனித்த மாநிலத் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவித்தது.
இதற்காக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தொகுக்கப்பட்டு, 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இருமொழிக் கல்வி, ஆங்கில அறிவுத் திறன் ஆகிய வழிகளைக் கையாண்டு மாணவர்களை வளர்த்தெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கம். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டவிதிகளின்படி, மாணவர்கள் கூடுதலாகத் தம் தாய்மொழியைக் கற்க வாய்ப்பு வழங்க வேண்டும்.
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் ஆண்டு இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி தேர்ச்சி இருக்க வேண்டும்.
10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடர்ந்து நடத்த வேண்டும். மாணவர் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 11-ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு நிகழாண்டிலேயே செயல்படுத்தப்படவுள்ளது.
பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல், எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களின் திறன்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்க, பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்குத் தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வுகள் நடத்தப்படும்.
அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுத் திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும், இந்தத் திட்டத்தில் உரிய மாற்றங்களைக் கொண்டுவரவும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப்புத்தகங்களை மாற்ற வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குக் குறை தீர்வு கற்பித்தலை வழங்கி, வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரப்படுவார்கள். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளைப் பள்ளியில் தக்கவைக்கவும், அவர்களது கற்றல் விளைவுகளை முன்னேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, முடிவெடுக்கும் திறன் போன்ற வாழ்க்கைத் திறன் சார்ந்த சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வளர்இளம் பருவத்தினர் சரியானவற்றைத் தெரிந்தவர்களாக, நெகிழ்வுத் தன்மை உடையவர்களாக, திறன் பெற்றவர்களாக வளரத் தேவையான கலைத்திட்டம் இணைக்கப்படும்.
புலம் பெயர்ந்தோர், பழங்குடியினக் குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களது கற்றல் இடைவெளியைக் குறைக்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாட வேளைகள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய, நவீன விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்குச் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
மனப்பாட அடிப்படையிலான மதிப்பீட்டு முறையைவிட்டு, பாடக் கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவைப் புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாற வேண்டும்.
"வெற்றி' பள்ளிகள் திட்டத்தின்கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரிப் பள்ளி போல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"இந்தக் கல்விக் கொள்கை மூலமாக படித்து மனப்பாடம் செய்வதைவிட சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குச் சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம். நமது மாணவர்கள் உலக அளவில் போட்டி போட்டு வெற்றிபெற இந்த மாநிலக் கல்விக் கொள்கை துணையாக இருக்கும்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மாநிலக் கல்விக் கொள்கை பற்றி அந்த வடிவமைப்புக் குழுவில் இருந்த சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படுகிறது. அதில் உயர் கல்வியை விட்டுவிட்டு, பள்ளிக் கல்விக்கு மட்டும் தனியாகக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது பெரிய அளவில் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என கிட்டத்தட்ட மானியக் கோரிக்கைபோல உள்ளது எனக் கூறியுள்ளனர்.
"இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்' என்றே நமது அரசியல் சாசனம் கூறுகிறது. மாநிலங்களில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது பல காலமாக தமிழ்நாட்டில் வழங்கிவரும் முழக்கம். அதிலிருந்துதான் மாநிலக் கல்விக் கொள்கையும் பிறந்துள்ளது. இது தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானது அல்ல, இணையானதுதான் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.