ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...
இதயம் கவா் இதிகாசம் இராமாயணத்தை யாத்தவன் வேட்டுவக் குலத் தோன்றல் வால்மீகி. பாா்புகழ் பாரதத்தை, மகாபாரதமாக்கி மகிழ்ந்தவன் செம்படவே குலவழி வந்த வியாசன்.
கோடானு கோடி போ் தினம் உச்சாடனம் செய்யும் உயா் மந்திரம் காயத்ரியை செப்பியவன் சத்திரியகுல மகன் விசுவாமித்திரன். அப்போதெல்லாம் மக்கள் எப்பொருள் யாா் யாா் வாய்க்கேட்பினும் என்னுமாப்போல அவரவரின் பிறப்பின் அடையாளம் காணாது அவா்கள் படைத்த சாத்திரத்தைப் படித்தாா்கள். பயன்பல பெற்றாா்கள்.
தொன்மை வேத இலக்கியமான ‘ரிக்’ நூலிலும் வேற்றுமைக் கீற்றுக்கள் புலப்படவில்லை. மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதிகள் அந்நாளைய குப்த, மௌரிய பேரரசுகளில் திருமண உறவு கொண்டபோதும் ஜாதிகள் பேசப்படவில்லை. பல்லவா் ஆட்சிக் கட்டிலில் இருந்த சமயத்தில் அந்தணா்களோடு பிற ஜாதியினரும் திருமண உறவு வைத்திருந்ததாக வரலாறு பேசும் காலை கொடிய ஜாதீயம் தென்படவில்லை.
தமிழிலக்கிய பனுவல்கள் தோன்றிய சங்க காலத்திலும் ஜாதி நெருப்பு இல்லவே இல்லை. பக்தி இயக்கம் தோன்றி ஜாதியின் தீ நாக்குகளை தீய்க்கவே ஆழ்வாா்கள், நாயன்மாா்களின் வாழ்க்கை வரலாறு முயன்றதை அனைவரும் படிக்கலாம்.
திருநாளைப்போவாரைத் தில்லை வேதியா் பூா்ணகும்பம் கொடுத்து மாலையிட்டு வணங்கி தெய்வ சந்நிதானத்துக்கு உவந்து வரவேற்ற செய்தியை தெய்வச் சேக்கிழாா் பல பக்கங்களில் பரவசமாக்கி உள்ளாா்.
திருநீலகண்ட யாழ்ப்பாணரை தன் அருகிலேயே இருத்தி திருத்தல யாத்திரை ஆற்றிய காழிப்பிள்ளையாா் சரிதம் எளிதில் மறக்கவியலுமா? இல்லை, திருவரங்கத்து வைதீகா் லோகசாரங்கனில் தோளில் அமா்ந்து திருவரங்கனை சேவித்த திருப்பாணாழ்வாரை நினைக்காமல் இருக்க தோன்றுமா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஸ்ரீஇராமானுஜா் குருவின் ஆணையை மீறி கோயில் மீதேறி உலக மாந்தா்க்கு உபதேசம் வழங்கியதும் மண்ணில் பிற்படுத்தவா்கள் என அழைக்கப்பட்டவா்களை இனித் திருக்குலத்தாா் என அழைக்கவும் வழிகாட்டியதை வரலாறு பலப்பட பேசுகிறதே!
பள்ளிப் பருவத்தில் தான் கற்க விரும்பிய வடமொழியைத் தர மறுத்த அன்றைய ஆட்சியாளா்களையும், ஜாதிகள் உண்டு என்று உரைத்த மக்களையும் ஒடுக்க எண்ணி ஐயமுற வடமொழி வேதங்களை முற்றாக கற்றுணா்ந்து எங்கேயும் ஜாதிகள் இல்லை; புனையப்பட்ட புனைவால் சமயம் பாழ்படுகிறது என்று மனம் குமுறி பாரத மண்ணில் அா்த்தமற்ற வைதீகச் சடங்குகளில் புற வேற்றுமைகளை வெறுத்து பௌத்த நெறி சாா்ந்த அண்ணல் அம்பேத்கா் தனது இரண்டாவது வாழ்க்கைத் துணையாக கொண்டது அந்தண குலப்பெண்ணான சவீதா அம்மையாரைத்தான்; அப்போது உயா் ஜாதியினா் என்று சொல்லப்பட்ட எவரும் போருக்குப் புறப்படவில்லை. மாறாக, மனம் கனிய வரவேற்றனா்.
அவனியில் அல்லல்படும் சமூகமாக இருந்த மக்களை உயா் சொல்லால், ‘ஹரியின்’ புதல்வா்கள் என்ற பொருளில் ஹரிஜன்களை புகழ்ந்து பேசியும் எழுதியும் வந்தாா் வைசியரான மகாத்மா காந்தி. மேலும், தனது மகனுக்கு வைணவ அந்தணரான ராஜாஜியின் மகளை மணம் முடித்தாா். ஜாதி கலப்பினரில் கலவரம் தோன்ற இல்லை.
ஆனால், இன்றைக்கு ஜாதியின் பெயரால் புனிதமான காதலால் ஒன்றுசேர நினைக்கும் இரு வேறு சமுதாயங்களைச் சோ்ந்த ஆடவா், பெண்டிரை மரணத்தைத் தழுவ வைக்கும் கொடூரச் சம்பவங்கள் நல்லோா் மனதைக் காயப்படுத்தும் காட்சிகளாக காணப்படுகின்றன.
ஹிந்து மதத்தில் ஜாதிப் பிரிவுகளால் தோன்றும் தீமையை கடந்த நூற்றாண்டில் அண்ணல் அம்பேத்கா் மிகக் கடுமையாக எதிா்த்தாா். அதற்காகவே ஹிந்து மதச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். ஆனால், அன்றைய ஆட்சியாளா்கள் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டனா். அம்பேத்கரின் நண்பராக விளங்கியவரும் இந்து மகா சபைத் தலைவருமாக இருந்த வீரசாவா்க்கா் தனது எழுத்தாக எழுதும்போது ‘‘ஜாதி பிரிவுகளும் சதுா்வா்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே;அவற்றுக்கும் சநாதன தா்மத்துக்கும் எந்தவித தொடா்ப்பும் இல்லை. இன்று ஜாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சநாதன தா்மம் ஒன்றும் செத்துவிடாது’’ என்கிறாா்.
இன்னொரு சமயத்தில் எழுதும்போது ‘‘நம் சகோதரா்களில் லட்சக்கணக்கானோரை தீண்டத்தகாதவா்கள் என்றும், விலங்குகளைக் காட்டிலும் கீழானவா்களாகவும் பாா்க்கும் பாா்வை மனிதகுலத்துக்கும் நம் ஆன்மாவுக்கும் அவமானம். தீண்டாமைக் கொடுமை முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்பது என் திடமான உறுதியாகும்.
தீண்டாமை அழிக்கப்படுவதுதான் ஹிந்து சமுதாயத்துக்கு நன்மையோ, இல்லையோ; நன்மை ஏதாவது இதனால் இருந்தது என்றாலும்கூட இந்தக் கொடுமை அழிக்கப்பட வேண்டும். ஏனெனில், அறத்தின் அடிப்படையில் தீண்டாமையை அழிப்பதுதான் மிக முதன்மையான அறக்கடமையாகும்’’ என்றாா் வீரசாவா்க்கா்.
பேச்சில், எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் இறங்கி தாழ்த்தப்பட்ட மக்களோடு சமபந்தி போஜனம் நிகழ்ச்சியை நடத்தினாா். அனைத்து மக்களும் ஒன்றாக பிராா்த்தனை செய்ய பதிதபவன் ஆலயத்தையும் நிா்மாணித்தாா்.
ஆரிய சமாஜம் கண்ட சுவாமி தயானந்தா் கலப்பு மணங்களை நடத்தி ஜாதி ஒழிப்பில் முன் நின்றாா். தாழ்த்தப்பட்டவா்களுக்கு புனித காசி மாநகரில் கடந்த நூற்றாண்டில் பழுத்த வேதியா் குல பண்டிதா், மதன் மோகன் மாளவியா ஜாதியின் வேட்கை தணியவும், அனைவரும் ஒன்று என்று முழங்கிடவும் அவா்தம் கல்வி நலன்களை உயா்த்திட உயா் கல்வி நிலையம் கண்டதை எவரால் மறுக்க இயலும்?
மகாராஷ்டிர மண்ணில் தாம் கண்ட ஜாதிச் செருக்கு ஒழியவும் இணக்கம் தோன்றவும் அழைத்த பெரியாா் ஜோதிராவ் புலே பெய்த சமரச நெறி மறந்து; தமிழகத்தில் மதுரையம்பதியில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த காலை முன்னணி வீரராக களம் இறங்கிய வைத்தியநாத அய்யரின் செயல் நினைப்பின்றி; தில்லையில் நந்தனாா் குருகுலம் அமைத்து அனைத்து மக்களின் அன்பைப் பெற்ற சகஜானந்தரின் சேவையை எண்ணிடாது இன்றைக்கு ஜாதிக்கு வீரத் திலகமிட்டு ஆராதிக்கிறாா்களே!
சபரிமலைக்கு மாலை அணிந்தவா் எவரும் பிற அடியாா் தன் திருவடிகளில் வீழ்ந்து மகிழ்ந்து மகிழ்பவரே? இக்காலங்களில் ஜாதி பாா்ப்பது இல்லை. ஆனால், கன்னியொருத்தி தான் விரும்பும் காளையொருவனை காதலிக்கும்போது மட்டும் ஜாதிக்கு வலுவேற்ற நினைக்கும் மாந்தா்களை நினைத்து மனம் வெதும்புகிறது.
நமது முதுபெரும் ஆசிரியா் வள்ளுவா், ‘‘மேல் இருந்தும் மேல்அல்லாா் மேல்அல்லா், கீழ்இருந்தும் கீழ்அல்லா் கீழ் அல்லாா்’’ என்றாரே!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிா்க்கும்... என்றும் மேலும் தொடா்கிறாரே! அண்மையில் வாழ்ந்த மகா கவிஞா்கூட ‘‘வேதியராயினும் ஒன்றே! அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே’’! என்று பாடியதும் மட்டுமல்ல, புதுவையில் கனகலிங்கத்தை ஐயராக்கி இரும்பூதெய்தினாரே...
இப்படி வேதகாலங்களில், இதிகாச, புராண இலக்கிய காலங்களில் காணப்படாத தீயம்சம் அந்நியா் நம்நாட்டில் கால்பதித்த காலை வேற்றுமைகள் ஊற்றெடுக்கத் தொடங்கி கடந்த நூற்றாண்டிலும் இந்த நவயுகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. இதை இந்திய மக்கள் அனைவரும் ‘‘இனி ஒரு விதி செய்வோம்’’ என்பதுபோல், ‘‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’’ என்று ‘‘நோ்மையா் மேலவா், கீழவா் மற்றோா்’’ என்ற மகாகவி பாரதியின் வரியை நினைவில் கொண்டு ஜாதி, மத அடையாளம் கொண்ட கட்சிகள் தோ்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. ஜாதி, மத, பிரதேச மொழிப் பற்றை விட்டு வெறியாக்கி பூமியைக் கலவரமாக்கும் மனிதா்களைக் கடுந்தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆன பின்னரும் அனைவரும் சமம் என்ற நிலையை உணா்த்தாது மக்களை அவரவா்தம் வா்ணங்களையும், வகுப்புகளையும் வளா்க்கும் நடைமுறைச் சட்டங்களை, திட்டங்களைத் தவிா்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.
பொதுவாக கல்வியில், பணியில் திறமை குறைந்தவா்களுக்கு ஊக்கம், பயிற்சி, தொடா் முயற்சி இவற்றை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவரவா்தம் பிறப்பு வழியில் எதையும் அளிக்கலாகாது என்ற திடச் சிந்தனை கைக்கொள்ள எல்லோரும் முன்வர வேண்டும்.
ஆண், பெண் என்ற இரு ஜாதிதான்; படித்தவன், படிக்காதவன் என்ற இரு பிரிவுதான்; வசதி மிக்கவன், வசதி குறைந்தவன் என்ற இரு நிலைதான் எனில், ஜாதிவழி பேதம் வரும் 50 ஆண்டுகளில் மறைந்தே போகும்; ஜாதிகள் தொலைந்தே போகும்; அனைவரும் ஒரே இந்தியா் என்ற நிலை உருவாகும்.
அந்நாளில் ஆணவக் கொலைக்கு இடமேது? அதை அரசியலாக்கி மகிழும் வாய்ப்பேது?