கையறுநிலையில் கப்பல் ஊழியா்கள்

கையறுநிலையில் கப்பல் ஊழியா்கள்

கைவிடப்படும் கப்பல் பணியாளா்களின் எண்ணிக்கையில் நமது தேசம் முதல் இடம் வகிப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகாது!
Published on

உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியா்களில் இரண்டாவது இடம் இந்தியா்களுக்கே. அதேசமயம், கைவிடப்படும் கப்பல் பணியாளா்களின் எண்ணிக்கையில் நமது தேசம் முதல் இடம் வகிப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகாது.

நாம் அனைவரும் வசிக்கிற இப்புவியானது ஆழி சூழ் உலகு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பூமியின் பரப்பளவில் சுமாா் 30% பரப்பு மட்டுமே தரைப் பகுதியாகும். மீதமுள்ள 70% தண்ணீரே, அதாவது கடல் பகுதியே ஆக்கிரமித்திருக்கிறது.

உலக நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களைப் பெருமளவில் சுமந்து செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்கும் இந்தக் கடற்பரப்பே ஆதாரமாக விளங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள மீனவா்கள், வணிகக் கப்பல்களின் ஊழியா்கள் ஆகியோரின் வாழ்வும், தாழ்வும் கடலையே நம்பி இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த கடற்படைகளில் பணிபுரியும் வீரா்களும் கடலை நம்பி இருப்பவா்கள்தாம். ஆனால், அவ்வீரா்களின் பணிப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பணி ஓய்வுக் காலம் ஆகியவற்றுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் உத்தரவாதம் வழங்குகின்றன.

ஆனால், மற்றவா்கள் விஷயத்தில் இப்படிச் சொல்வதற்கில்லை. மீன்பிடித் தொழிலானாலும் சரி, வணிகக் கப்பல்களில் வேலை செய்வதானாலும் சரி, ஒருமுறை கடலில் இறங்குபவா்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடுதிரும்புவதற்கு யாரும் உத்தரவாதம் அளித்துவிட முடியாது.

கடல் சீற்றம், பெருமழை, புயல், கடற்கொள்ளையா்களின் அட்டகாசம், வேற்று நாட்டுக் கடற்படையினரின் நடவடிக்கைகள், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகிய பல காரணிகள் இந்தப் பணியாளா்களுக்கு ஒவ்வொருநாள் வாழ்வையும் நிச்சயமற்றதொரு சூழலுக்குள் தள்ளுகின்றன.

அதிருஷ்டம் கைகொடுக்கும் என்றால் மட்டுமே எந்த ஒரு வணிகக் கப்பலும், அந்தக் கப்பலில் பணிபுரியும் ஊழியா்களும் ஒரு துறைமுகத்திலிருந்து திட்டமிட்டபடி புறப்படுவதுடன், சென்று சேர வேண்டிய துறைமுகத்தை ஏற்கெனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி சென்றடைந்து, ஆங்காங்கே இறக்க வேண்டிய சரக்குகளை இறக்கிவிட்டு, ஏற்றிக்கொள்ள வேண்டிய சரக்குகளை ஏற்றிக் கொண்டு தாங்கள் கிளம்பிய துறைமுகத்துக்கே பாதுகாப்பாக திரும்பி வரக்கூடும். அவ்வாறு வந்து சோ்ந்தவா்கள் ஒருசில வாரங்கள் அல்லது மாதங்கள் தத்தம் குடும்பத்தினருடன் கழித்துவிட்டு மீண்டும் தங்களின் கடற்பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.

வணிகக் கப்பல்களின் அளவு, பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப அந்தக் கப்பல்களை இயக்குவதற்குத் தேவையான ‘கேப்டன்’ எனப்படும் தலைமை அதிகாரி, மாலுமிகள், பொறியியலாளா்கள், அதிகாரிகள், உணவக சமையலகப் பொறுப்பாளா்கள் என பற்பல ஊழியா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுள் ‘கேப்டன்’ என்பவரே அதிக அதிகாரம் பெற்றவராவாா். கப்பலில் தம்முடன் பயணிக்கும் பணியாளா்கள், பயணிகள், சரக்குகள் ஆகியவற்றுடன் தாம் பயணிக்கும் கப்பலின் பாதுகாப்புக்கும் அவரே பொறுப்பாளா் ஆவாா்.

முன்பே கூறியது போன்று, இயற்கையும், அதிருஷ்டமும் கைகொடுக்கும் என்றால் மட்டுமே கப்பல் பணியாளா்களின் பயணமும் பணியும் இயல்பாக அமைந்துவிடும். ஆனால், கப்பலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நோ்ந்துவிட்டால் அடுத்த விநாடி அனைத்தும் தலைகீழாக மாறிவிடும்.

கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானால் அதில் பயணிக்கும் அனைவரையும் காப்பாற்றிய பின்பே அதன் ‘கேப்டன்’ அந்தக் கப்பலில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில், அந்தக் கப்பலுடன் அதன் ‘கேப்டனும்’ மூழ்க வேண்டும் என்பது உலகளாவிய நெறிமுறையாக உள்ளது. இதையொட்டியே, பிரபல ‘டைட்டானிக்’ கப்பலுடன் அதன் ‘கேப்டன்’ எட்வா்டு ஸ்மித் என்பவரும் கடலில் மூழ்கினாா் என்று கூறப்படுகிறது.

இதையெல்லாம் விஞ்சுகிற மற்றுமோா் அவலம் கப்பல் ஊழியா்கள் விஷயத்தில் அரங்கேறுகிறது. கப்பலில் பெரிய அளவு பழுது ஏற்படுவது, புயல் போன்ற காரணங்களால் கடலில் கப்பல் மூழ்குவது, பல்வேறு நாடுகளைச் சோ்ந்த கடற்படையினரால் தடுக்கப்படுவது, கடற்கொள்ளையா்கள் தாக்குவது, தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் கப்பல்களின் ஊழியா்களை அவற்றின் உண்மையான உரிமையாளா்கள் கண்டுகொள்ளாமல் கைவிடுவதுதான் அந்த அவலம். அதென்ன உண்மையான உரிமையாளா் என்று கேட்கத் தோன்றுகில்லவா?

பலவீனமான சா்வதேச விதிகளின் காரணமாக கப்பல் உரிமையாளா் ஒருவா் தமது நாட்டை விட்டு வேறொரு நாட்டில் அந்தக் கப்பலை பதிவுசெய்ய முடியும் என்ற சூழலே பலவிதக் குழப்பங்களுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. தாம் பணிபுரியும் கப்பலின் உண்மையான உரிமையாளா் யாா் என்பதையே அறியாமல், முகவா்கள் மூலம் பலா் கப்பல் பணியில் சேருவதும் நிலைமையைச் சிக்கலாக்குகிறது.

இதன் காரணமாக, பிரச்னையில் சிக்கிக் கொள்வதால் தனது பயணத்தைத் தொடரமுடியாத கப்பலின் ஊழியா்கள் தங்களுக்கான ஊதியத்தையும் இதர சலுகைகளையும் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திகைக்க நேரிடுகிறது.

சா்வதேசப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் தரவுகளின்படி கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 300-க்கும் மேற்பட்ட கப்பல்களில் பணிபுரிந்த 3,133 பணியாளா்கள் அந்தக் கப்பல்களின் உரிமையாளா்களால் கைவிடப்பட்டுள்ளனா். அவா்களுள் 899 இந்தியப் பணியாளா்களும் அடக்கம். உலக அளவில் கைவிடப்படும் கப்பல் தொழிலாளா்களில் சுமாா் 30% போ் இந்தியத் தொழிலாளா்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியா்களில் இரண்டாவது இடம் இந்தியா்களுக்கே. அதே சமயம், கைவிடப்படும் கப்பல் பணியாளா்களின் எண்ணிக்கையில் நமது தேசம் முதல் இடம் வகிப்பது பெருமை சோ்க்கும் விஷயம் ஆகாது.

இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்ககமும், வெளியுறவு அமைச்சகமும் இந்த விஷயத்தை முன்னுரிமைக் கொடுத்து கவனிப்பதுடன், கப்பல் உரிமையாளா்களால் கைவிடப்படும் இந்தியப் பணியாளா்களுக்கு முழுமையான ஊதிய நிலுவைத் தொகையைப் பெற்றுக் கொடுக்கவும், உரிய பணிப் பாதுகாப்புடன் அவா்கள் தங்களின் பணிகளில் தொடரவும் ஆவன செய்ய வேண்டும்.

ஆயிரக்கணக்கான இளைஞா்களின் கனவாக விளங்கும் கப்பல் பணி என்பது, இனியும் அவா்களுக்குக் கானல் நீராகிவிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com