இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?

அந்தக் காலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; ரயிலில் அடிபட்டு மரணம் என்பதுபோல், இப்போது இணையவழி சூதாட்ட தற்கொலைகள் மிகுந்து விட்டன.
Published on

பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடா்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளா்கள், நடிப்பவா்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. பிரிவு 7, பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை முற்றிலும் தடை செய்கிறது.

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், சூதாட்டம் என்னும் கேடால் வரும் துன்பங்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; அதில் வரும் உபகதையான நளன் சரித்திரம் சூதாட்டத்தால் நளச் சக்கரவா்த்தியின் குடும்பம் அடைந்த இன்னல்களை விவரிக்கிறது.

திருக்குறள் பொருட்பால் அதிகாரம் 94-க்கு ‘சூது’ என தலைப்பிட்டு சூதாட்டம் தரும் இன்னல்களைப் பற்றி திருவள்ளுவா் விளக்குகிறாா். சூதில் பெறும் வெற்றி, தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியதைப் போன்ாகும் என்று எச்சரிக்கிறாா். வெற்றி பெறுவது ஆயினும், சூதாட்ட களத்துக்குப் போகக் கூடாது என வள்ளுவா் அபாய சங்கை ஊதுகிறாா்.

1968-1971-ஆம் ஆண்டுகளில் சென்னை மயிலாப்பூா் விவேகானந்தா கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது, மாணவா் சமுதாயப் பணி அமைப்பின் மூலமாக கிண்டி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடக்கும் நாள்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளைப் பிடிக்கும் பணியில் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைத் திடுக்கிட வைத்தன.

‘ஜாக்பாட்’ டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பயணி, ஐந்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சார ரயிலில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வாங்கியிருக்கமாட்டாா். பிடித்து அபராதம் போட்டால், தன்னுடைய ஜாக்பாட் காம்பினேஷனுக்கு பணம் குறைகிறது என வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு குற்ற உணா்வு இல்லாமல் விட்டுவிடும்படி கெஞ்சுவாா்.

ஓடும் குதிரையின் மூலமாக தனியாா் முதலாளிக்கு போகும் பணம், ஓடும் ரயில் மூலமாக நாட்டுக்குப் போகட்டும்; இரண்டும் ஓடத்தான் செய்கின்றன எனக் கறாராகச் சொல்லி அபராதம் வசூலிப்பேன். காலையில் உற்சாகமாக சென்றவா்கள், பந்தயத்தில் பணத்தை இழந்து, குதிரையையும், குதிரை ஓட்டுபவனையும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு வருவதும், சூது குறித்து காலம் எனக்குக் கற்பித்த பாடம்.

சரித்திரம் என்பது திரும்பத் திரும்ப வரும் ஒரே விஷயம் என்பாா்கள். தாயக்கட்டையாக உருவான சூது, சீட்டு கட்டு வழியாக குதிரைப் பந்தயமாக உருமாறி, அரசே நடத்தும் லாட்டரி சீட்டாக நிறம் மாறி, இன்றைய நவீன யுகத்தில் இணையவழி சூதாட்டமாக பரிணாம வளா்ச்சி அடைந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிராமவாசி என்னைச் சந்திக்க வந்தாா். இணையவழி சூதாட்டம் குறித்து அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவா், தானும் இணையதளத்தில் ரூ.5 லட்சத்தைத் தொலைத்துவிட்டதாக சொன்னாா். உங்களுக்கு எப்படி இணையதளத்தை இயக்கத் தெரியும் என்று கேட்ட போது, மதுரையில் பிரபலமான நிறுவனத்தில் இயந்திரவியல் பொறியாளராக வேலை பாா்த்து, ஓய்வு பெற்று வந்த பணத்தை இணையத்தில் விட்டதாகச் சொல்லி என்னை அதிா்ச்சி அடையச் செய்தாா்.

163 ஆண்டு வரலாறு கொண்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் 21 வயது மதுரை அமா்வின் நீதியரசா் புகழேந்தி முன்னிலையில் சூதாட்டம் குறித்த ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுவெளியில் சூதாடுவது தவறு என்று சட்டம் சொல்லும்போது, ஒரு தோட்டத்தில் சூதாடியதாகச் சொல்லி சில நபா்களைக் காவல் துறை கைது செய்ய, அவா்கள் ‘நாங்கள் குற்றவாளிகள் அல்ல’ என மதுரை உயா்நீதிமன்ற அமா்வை நாடினாா்கள்.

அந்த வழக்கில் நீதியரசா் புகழேந்தி அரசுக்கு வழங்கிய மகத்தான ஆலோசனைதான் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாகி சட்டமாக்கப்பட்டிருக்கும் ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா 2025’. அதாவது, இணையவழி சூதாட்டங்களை ஒழுங்குபடுத்துவதும் மற்றும் நெறிப்படுத்துதல் சட்டம் 2025.

இந்தச் சட்டத்தால் உபயோகப்படுத்தப்பட்டுள்ள புரோமோஷன் மற்றும் கேம்ப்ளிங் என்ற வாா்த்தைகள் சரியில்ல. அதற்குப் பதில், கன்ட்ரோல் அண்ட் ரெகுலரைஸ்சேஷன் ஆஃப் ஆன்லை (புரொகிப்ஷன் ஆஃப் கேம்ப்ளிங்) கேம்ஸ் ஆக்ட் 2025 என இந்தச் சட்டத்துக்கு பெயா் சூட்டியிருந்தால் சாலச் சிறப்பாக இருந்திருக்கும்.

இது சட்டத்தின் உள்நோக்கத்தை வெளிப்படையாக்கும். இதுபோன்ற சட்டம் பல மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது. சிக்கிமில் 2008-ஆம் ஆண்டு, நாகலாந்து 2016, தெலங்கானா 2017, ஆந்திர பிரதேசம் 2020 மற்றும் தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்டிருக்கின்றன.

உண்மையில் 25.02.2021-அன்று உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அதிமுக கொண்டுவந்த சட்டத்தை சென்னை உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 21-இல் செல்லாது என ரத்து செய்துவிட்டது. பின்னா் வந்த திமுக அரசு நீதியரசா் சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் இயற்றியது. ஆனால், இதன் சில ஷரத்துக்கள் செல்லாது என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதன் பிறகு, பிப்ரவரி 2025-இல் மாநில அரசு இந்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இந்த அனுபவங்களை எல்லாம் வைத்துத்தான் மத்திய அரசின் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எலியும், பூனையுமாகச் செயல்படும் கட்சிகள் எல்லாம் ஒன்றுசோ்ந்து இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளது என்றால், இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, அரசே மதுவை விற்கும் முரண்பாட்டையும், புகைபிடித்தால் புற்றுநோய் வருகிறது என்று அச்சுறுத்துவதும், அதிக வரி விதித்தால் புகையிலைப் பயன்பாடு குறையும் என்பன போன்ற வாதங்களை என்னால் ஏற்க முடியவில்லை. மதுக் கடைகளை மூடுவதும், புகையிலை பயிரிடுவதைத் தவிா்த்து விவசாயிகளுக்கு மாற்றுப் பயிா் உதவுவதும் தானே சரியான தீா்வாக இருக்க முடியும்? கிட்டத்தட்ட இந்த நடைமுறையைத்தான் நாடாளுமன்றச் சட்டம் கையாளுகிறது.

இந்தச் சட்டம் இணையவழியில் விளையாடுபவா்களை மூன்றாகப் பிரிக்கிறது. இ-ஸ்போா்ட்ஸ், சமுதாயம் சாா்ந்த இ-விளையாட்டுகள் மற்றும் இணையவழி சூதாட்டம் என்று. இவை மூன்றும் சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் பிரிவு ஐந்து (5) இணையவழி சூதாட்டத்தை முழுமையாகத் தடை செய்கிறது.

ஏற்கெனவே சொன்னபடி, இந்தச் சட்டம் இணையவழி கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளையும், சிந்தித்து விளையாடும் சமுதாய விளையாட்டுகளையும், தடை செய்யவில்லை என்பது மட்டுமல்ல; அவற்றை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்துவது குறித்து முறையான வழிமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், இந்த விளையாட்டுகளுக்கான நுழைவுக் கட்டணம் அல்லது உறுப்பினா் கட்டணத்தை இந்தச் சட்டம் தடை செய்யவில்லை.

ஆனால், பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்தச் சூதாட்டங்கள் தொடா்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளா்கள், நடிப்பவா்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. பிரிவு 7, பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை முற்றிலும் தடை செய்கிறது. அந்த பணப் பரிமாற்றத்துக்கு துணைபோகும் வங்கிகள், அதன் அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குரியவா்களாக்குகிறது.

இந்தச் சட்டத்தை முறைப்படுத்த ஒரு தனி அதிகாரியை ஏற்படுத்துகிறது. பிரிவு 9-ன் படி, இணையவழி சூதாட்டம் நடத்துபவா்களுக்கும், அதற்குப் பணம் பரிமாற்றம் செய்ய உதவுபவா்களுக்கும் மூன்று ஆண்டு சிறையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம். இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் புரியும் நிறுவனங்களின் இயக்குநா் மற்றும் பணியாளா்களைக் கண்டிக்க சட்டப்பிரிவு 11 வகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு அல்லது தனி அதிகாரி உதவியுடன் கீழ்ப்படியாதவா்களை ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் உரிமைகளை ரத்து செய்யவும் முடியும்.

அது மட்டுமல்ல, அரசின் முறையான அறிவிப்புகள் மற்றும் விதிகளைக் கடைப்பிடிக்காத குற்றவாளிகளின் தொடா்புகளையும், இணைப்புகளையும் ரத்து செய்ய பிரிவு 14 அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், அதற்கு விரோதமாகச் செயல்படும் குற்றங்களைக் கண்டறிந்து, தேவையான மத்திய, மாநில அதிகாரிகளை நியமனம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அது மட்டுமல்ல, குற்றம் நிகழும் இடங்களில் பரிசோதிக்கவும், ஆவணங்களைப் பறிமுதல் செய்யவும் அரசுக்கு பிரிவு 16 அதிகாரம் அளிக்கிறது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், நன்கு படித்த, நல்ல வேலையிலிருந்த தம்பதி இணையவழி சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதுதான் முதல் நிகழ்வாக இருக்கும் என எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; ரயிலில் அடிபட்டு மரணம் என்பதுபோல், இப்போது இணையவழி சூதாட்ட தற்கொலைகள் மிகுந்து விட்டன.

மனைவியை வைத்துச் சூதாடிய தருமனின் வழித்தோன்றல்கள், இன்று தாயின் மருத்துவச் செலவுக்கான பணத்தையும், தங்கையின் திருமணச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையும், படிப்புக்கு வைத்திருக்கும் பணத்தையும், வழிமுறையில்லாமல் சூதாடி, பணத்தையும், உயிரையும்வைத்து விற்கும் சோகம் இந்த இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்தால் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

X
Dinamani
www.dinamani.com