வெப்ப அலையின் காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில் ஏற்படும் பாதிப்பு, தோலில் ரத்த ஓட்டம் குறைதல் முதியோர்களிடையே ஏற்படும் உயிரிழப்புக்கு காரணங்களாக அமைகின்றன. 1990-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது உலக அளவில் வெப்ப அலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 85% அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. 2004-2017 ஆண்டுகளுக்கு இடையே நம் நாட்டில் வெப்ப அலையால் உயிரிழந்த 65 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 55% அதிகரித்து இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
வியர்வை வெளியேறும் திறன் குறைந்தால் முதியோர்களுக்கு வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரஸ்), அதிவெப்பத்துவம் (ஹைப்பர் தர்மியா), வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்), வெப்பச் சோர்வு (ஹீட் எக்ஸாஷன்) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதய நோய், சிறுநீரக நோய், மனநலப் பிரச்னைகள் கொண்ட முதியவர்களின் நோய் தீவிரத்தை வெப்பநிலை உயர்வு அதிகப்படுத்துகிறது.
தாக உணர்வு குறைதல் மற்றும் குறைவான திரவம் உட்கொள்ளல், உடல் நீர் குறை (டீஹைட்ரேஷன்), மின் பகுதி சம சீர்கேடு (எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ்), சிறுநீரக பாதிப்பு, வெப்பச் சோர்வு (ஹீட் எக்ஸாஷன்) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
கிராமப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட வயது முதிர்ந்த பெண்கள் குடும்பப் பராமரிப்பு, காற்றோட்டம் இல்லாத வீடுகள், வளங்களை அணுகுவதில் உள்ள பாலின பேதம் ஆகியவற்றின் காரணமாக அதிகரிக்கும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை ஒப்பிடும்போது குளிரூட்டப்பட்ட அறைகளின் குறைந்த பயன்பாடு, காற்றோட்டம் இல்லாத சமையலறைகள், சமூக தனிமைப்படுத்துதல் போன்றவை வெப்பப் பாதுகாப்பு, பராமரிப்பில் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள வயதான ஆண்கள் விவசாயம், கட்டுமானம் போன்ற தொழிலில் மிக நீண்ட நேரம் ஈடுபடுவதால் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். தகவமைக்க இயலாத முதியோர் உடல் நிலை, வெப்பமண்டலப் பகுதிகளில் நிலவும் இரவு நேர வெப்பத்தால் பாதிப்படைகிறது.
20 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரும் வெப்பநிலையால் முதியோரின் உடல் குளிர்விக்கும் திறன் பாதிப்படைகிறது. தொடர்ச்சியான வெப்ப இரவுகள் முதியோருக்கு வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதய மற்றும் சுவாச மண்டலங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
குறைந்த உடல் இயக்கம், தனிமை மற்றும் சமூக உறவுகள் இல்லாமை முதியோர்களின் மன மற்றும் உடல் நலத்தைப் பாதிக்கின்றன. அதீத வெப்பம் முதியோரைத் தனிமைப்படுத்துகிறது. தனியாகவும் மிகக் குறைந்த குடும்ப உறவுகளுடனும் வாழும் முதியவர்கள் நோய்வாய்ப்படும் போது உதவி பெறுவதில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன.
வெப்பக் காலங்களில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உத்திகள் அடங்கிய தேசிய மற்றும் மாநில அளவிலான வெப்பச் செயல் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. வெப்ப அலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் வெப்பப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், வெப்பத்தால் பாதிக்கப்படுவோருக்கு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மானியம் வழங்கவும் இந்திய சுகாதார அமைச்சகம் செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறது.
வெப்பம் சம்பந்தப்பட்ட மரணங்களைக் கண்காணித்தல், இடர் வரைபடம் வரைதல், பாதிக்கப்பட்ட மக்கள் வாழுமிடங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவை வெப்பத் தடுப்பு செயல்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து தற்போது நடைமுறையில் உள்ள யூஎம்ஏஎன்ஜி, எம்ஏயுஎஸ்ஏஎம், மேகதூத், தாமினி போன்ற வானிலை தொடர்பான செயலிகளை ஒருங்கிணைத்து ஒரே பயன்பாட்டுச் செயலியாக உருவாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த வெப்ப அலை முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்க முடியும்.
இந்தப் பயன்பாட்டுச் செயலி வெப்ப அலை எச்சரிக்கை, வானிலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, மழைப் பதிவு, நிலநடுக்கம், போன்ற காலநிலை சம்பந்தப்பட்ட விரிவான தகவல்களை வழங்க வேண்டும். முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளில் முரண்பாடுகள் உள்ளன. 2009-2022-ஆம் ஆண்டுகளுக்கிடையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய தரவு கணக்கீட்டைவிட 4000 பேர் அதிகமாக மரணம் அடைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. முரண்பட்ட தரவுகள் வழங்கி உள்ள இரு அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
வெப்பம் தொடர்பான இறப்புகள் உள்பட காரணங்களுடன் கூடிய இறப்புத் தரவுகளை வெளியிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அனுமதி வழங்கும்போது, வெப்பத்தால் இறப்போரின் சமுதாய, பொருளாதார, தொழில் பின்புலங்களையும் எளிதில் அடையாளம் காணலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
பொது சுகாதாரத் துறை கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வெப்பம் தொடர்பாக முதியோர்களிடையே ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகள் ஏற்படுத்தியுள்ளன. அதிகரித்துவரும் வெப்பநிலை அச்சுறுத்தலைச் சமாளிக்க குறுகிய கால நடவடிக்கைகளில் இருந்து நீடித்த நீண்ட கால திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.