மானுடவியலின் மகத்துவம்

மானுடவியல் என்ற சொல்லானது 'ஆந்த்ராபோல்' (மனிதன்) மற்றும் 'லோகிய' (ஆய்வு) எனும் சொற்களிலிருந்து பெறப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்)
செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.

அறிவியல் கண்டுபிடிப்புகளால் கல்வித் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வியக்கத்தக்கதாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் உள்ளன. ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை வரவேற்கும் நாம் இதர துறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.

அண்மைக்காலமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கைகூப்பி வரவேற்கிறோம். இதனால் கலை, மொழி, மானுடவியல், உளவியல், தத்துவம், வரலாறு, பொருளியல், தர்க்கவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் மறந்துவிடுகிறோம்.

அறிவியல் பாடங்களில் ஏற்படுத்தப்படும் அளவுக்கு கலைப் பிரிவில் புதிய வகை பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுவதில்லை. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்புக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகிய பாடங்கள் கட்டாயப் பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர ஜப்பானிய மொழி, ஜெர்மானிய மொழி, கொரிய மொழி ஆகிய வெளிநாட்டு மொழிப் பாடங்களும், தொழில் துறை சார்ந்த பாடங்களும், 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கலை அறிவியல், தொழில்நுட்பம் எனும் இரு பிரிவுகளை மட்டுமே இருந்தன.

தகுதி, திறமை, விருப்பத்துக்கேற்ப இவற்றுள் ஏதேனும் ஒன்றில் சேர்க்கை பெற்று பயின்றனர். ஆயினும் பொருளியல், அரசியல் அறிவியல், வரலாறு போன்ற பாடப் பிரிவுகளைப் பயின்றவர்கள் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கினர். அப்போது மொழி, வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், தத்துவம், உளவியல், மானுடவியல் போன்ற கலைப் பிரிவுகளும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவுகளும் முக்கிய பாடப் பிரிவுகளாக திகழ்ந்தன.

ஆனால், கடந்த 1965-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அறிவியல் பாடப் பிரிவுகளைப் பயில்வது அரசுப் பணிக்கு உகந்தது என்றும், அவை உயர்ந்தது என்றும் கருதப் பெற்றன. அறிவியல் பாடப்பிரிவுகளைப் பயில்வதன் மூலம் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் இன்றளவும் உள்ளது.

1985-க்குப் பின்னர் மற்றொரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கணினிசார் படிப்புகளைப் பயில்வதன்மூலம் உடனடியாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அதிகப்படியான ஊதியத்துடன் பணி கிடைக்கும் என்ற எண்ணம் இளையோர் மத்தியில் ஏற்படத் தொடங்கியது. அது இன்றுவரையில் தொடர்ந்து வருகிறது.

அண்மைக்காலமாக குடிமைப்பணித் தேர்வில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டோர் மானுடவியல், உளவியல், சமூகவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது ஆறுதல் தருவதாக உள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பயின்ற பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலும் இவற்றுள் ஏதேனும் ஒரு பாடத்தையே விருப்பப் பாடமாக தேர்வு செய்கின்றனர். இவற்றுள் மானுடவியல் என்பது அதிகப்படியானோரால் தேர்வு செய்யப்படும் பாடப்பிரிவாக உள்ளது.

மானுடவியல் என்ற சொல்லானது 'ஆந்த்ராபோல்' (மனிதன்) மற்றும் 'லோகிய' (ஆய்வு) எனும் சொற்களிலிருந்து பெறப்பட்டது. மானுடவியல் என்பது மனிதர்கள், அவர்களின் மூதாதையர்கள் மற்றும் அவர்களது சமூகங்களைப் பற்றிய ஆய்வாகும். மானுடவியல் ஓர் ஆய்வுத் துறையாக மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.

மானுடவியல் சமூக கலாசார மானுடவியல், உயிரியல் மானுடவியல், தொல்லியல் மானுடவியல் எனும் முப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனாலும், மனிதப் பரிணாமம் மற்றும் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்வது, கலாசார நடைமுறைகள் மற்றும் சமூக கட்டமைப்புகளை ஆராய்தல், தொல்பொருள் அறிவுக்குப் பங்களிப்பு செய்தல், சமகால சமூகப் பிரச்னைகளை நிவர்த்தி செய்தல், தொழில்முறை திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் எனும் ஐந்து பிரிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மனித மக்கள்தொகை முழுவதும் கலாசார மற்றும் உயிரியல் மாறுபாடுகளை ஆராய்வதன் மூலம் குழுக்களுக்கு இடையிலான வேறுபாடுகள் வெறுமனே மேலோட்டமானவை அல்ல என்பதையும், மாறாக அவை வரலாற்றுச் சூழல்களிலும் சுற்றுச்சூழல் தகவல்களிலும் வேரூன்றியுள்ளன என்பதையும் அடையாளம் காண உதவுகிறது.

கொள்கை வகுப்பாளர்கள் மானுடவியல் நுண்ணறிவுகளை இணைக்கும்போது மிகவும் பயனுள்ள, கலாசார ரீதியிலான பொருத்தமான தலையீடுகளை உருவாக்க முடியும். கலாசாரத்தின் உலகளாவிய பரவல், புலம் பெயர் சமூகங்களில் மத நடைமுறைகளின் தழுவல், சர்வதேச வணிக நடைமுறைகளின் உள்ளூர்மயமாக்கல் போன்ற நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

உலகமயமாக்கல் அழுத்தங்களுக்கு மத்தியில் மறைந்து போகக்கூடிய பல்வேறு கலாசார மரபுகளை ஆவணப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் மானுடவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய சூழலில் போட்டித் தேர்வை எதிர்கொள்வது முதல் சமுதாயத்தை அறிந்து கொள்வது வரை பல்வேறு நிலைகளில் மானுடவியல் பயனுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com