எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் கோப்புப்படம்.
Published on
Updated on
4 min read

அண்மையில் மைய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. முப்பது நாட்கள் ஒரு மந்திரியோ, அவரனையரோ, தலைமையமைச்சர், முதலமைச்சர் உட்பட யாரோ சிறையில் இருக்க நேரிட்டால், அவர் சிறையிருந்த முப்பத்தி ஒன்றாவது நாளில் பதவியை இழந்து விடுவார்! அந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று விடுதலை பெற்ற பிறகே, அவர் பதவி அரசியலுக்குத் திரும்ப முடியும்!

நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாற்றுக் கட்சி ஆட்சியினரைப் பழி வாங்கவும், அவர்களை நிலைகுலையச் செய்யவுமே இத்தகைய சட்டங்கள் என்று அவர்கள் கூறினர்!

இது குறித்து எதிர்க்கட்சிகளோடு அலசி விவாதித்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதை நடைமுறைப்படுத்த, அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவில் பங்கேற்பதற்குப் பதிலாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவைப் புறக்கணித்துள்ளன. இதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்!

இந்தச் சட்டத்தில் உள்ள முப்பது நாள் மிகக் குறைவான காலக்கெடு என்று தோன்றினாலோ, அதைவிடக் குற்ற நடத்தையாளர் தப்பிக்க முடியாத வகையில் வேறு புது வகைத் திருத்தம் தோன்றினாலோ, அவற்றை முன்வைப்பதற்கு மாறாக, இந்தச் சட்டத்தையே முற்றாக எதிர்ப்பதன் மூலம், எல்லா மாநில ஊழல் ஆட்சிகளையும் முழுமையாகக் காப்பாற்றத்தானே இண்டி கூட்டணி வழி வகுக்கிறது!

தில்லி முதல்வர் அரவிந்த் கெசரிவால் ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குள்ளேயே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்!

சிறை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடம். அதைத் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொள்ளும் நிகழ்கால நிலையில், அதற்குரிய புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றனதானே!

இந்தியக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய மெகாலேயோ, அதற்குத் திருத்தங்கள் செய்த இந்திய ஆட்சியினரோ, மந்திரிகள் மந்திரிகளாகவே சிறைக்குள் புகுவர் என்று எதிர்பார்க்கவில்லை!

அதைவிட ஒரு படி மேலே போய், குற்ற அடிப்படையில் சிறைக்குப் போனவரை, ஆளும் கட்சி ஒரு மந்திரியாகவே சிறையில் நியமனம் செய்தது. ஆளுநர் மறுத்தபோது, யாரையும் மந்திரியாக்குவது முதலமைச்சரின் முன்னுரிமை என்று சட்டம் பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தில் தடை இருக்கிறதா என்று எதிர்க் கேள்வி எழுப்பி விமர்சகர்களின் வாயை அடைக்கிறார்கள்.

ஆகவே, எந்தக் குற்றம் சாட்டப்பட்டவரும், தண்டனை பெற்றவரும், மேலே மேலே உள்ள நீதிமன்றங்களுக்குப் போய், முடிவான தண்டனைக்கு வரும்போது, குற்றவாளி இருக்க மாட்டார்! ஆகவே வழக்குகளைக் கண்டு அஞ்சும் நிலை முற்றாகப் போய்விட்டது! ஊழல் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை ஆகிவிட்டது! பதவி இருந்தால், வாழ்நாள் முழுதும் வழக்கும் நடத்தலாம்; கொள்ளையும் அடிக்கலாம்.

நம்முடைய நீதியமைப்பு நத்தையின் தன்மையுடையது. ஆகவே இவனுடைய நச்சுப் பல்லான பதவியைச் சிறைக்குப் போன முப்பத்தி ஒன்றாவது நாளிலேயே பிடுங்கச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார் மோடி! பதவி எனும் நச்சுப் பல் பிடுங்கப்பட்ட பின், அது பாம்பில்லை, ஒரு நெடிய புழு; அவ்வளவுதான்!

ஐம்பதாண்டுகளாக நாட்டை நாசமாக்கிய கட்டுவிரியன்களிடமிருந்து பதவி என்னும் நச்சுப்பல்லைப் பிடுங்க மோடி ஒரு சட்டம் கொண்டு வந்தால், எதற்கு இவ்வளவு கூக்குரல்?

ஆளுங்கட்சியான பா.ச.க.வில் ஊழல் இல்லையா என்று கேட்பின், மைய ஆட்சி மாறும்போது, இவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயாதா? ஆகவே, இப்படி ஒரு சட்டம் இருந்தால்தானே மாறி மாறிப் பாயும்!

இதை மாற்றியமைக்க பிரதமர் மோடி 'தன்னையும்' உட்படுத்தி ஒரு சட்டம் செய்தால், அதை ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பது பதவி போய் விடும் என்னும் அச்சத்தால்தான்!

இந்தச் சட்டங்கள் நிறைவேறி, நடைமுறைக்கு இந்த ஆண்டுக்குள் வரும்போது, பாழாய்ப் போன வழக்குகள், "வாய்தா நீதியமைப்பில்' ஒரு பிறப்புக்கு நடக்கட்டும்! அவன் பதவி உடனடியாய்ப் போய் விடும் என்பதால், அவன் நடமாடும் பிணமாகி விடுவானே!

குடியாட்சியின் பேரால், ஐம்பது ஆண்டுகளாக நிலவும், இந்தக் குடிகெடுக்கும் ஆட்சி முறையில் உள்ள மானப் பெரிய பொத்தல் அடைக்கப்படாவிட்டால், அரிசுடாடில் சொல்வதுபோல இது வல்லாட்சியில்தான் போய் முடியும்! அதைத் தடுக்கும் கடைசி முயற்சிதான் இந்தச் சட்டம்!

தெற்கே எழும் இன்னொரு கூக்குரல் நாடாளுமன்றத் தொகுதி வரையறை பற்றியது! இது அண்மையில் காலாவதியாக இருக்கிறது. அந்தச் சட்டம் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் வகையில் நிறைவேறினால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் குறைந்து, 32 ஆகி விடும்!

இன்று கயமை கோலோச்சும் காலம். ஆகவே, மோகன் குமாரமங்கலங்கள் அற்றுப் போய் விட்டார்கள்! நாளையப் பொழுதை எண்ணி, நாம் அந்த இடங்களை மீட்டெடுக்க வேண்டாமா?

த.வெ.க. விசய்கூட, தொகுதிகள் குறைவதை எதிர்த்து முழங்கி இருக்கிறார்! மோடி நாடாளுமன்ற இடங்களைப் பறிக்கப் பார்க்கிறார் என்று திருச்சியில் "விசில்கள்' பறக்கப் பறக்கப் பேசி இருக்கிறார்!

தொகுதிகள் குறைவது குறித்து மோடியைச் சாடிய முதல்வருக்கும் விசய்க்கும் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் ஒரே தரத்தில் உள்ளவர்கள்! அரசியல் சாசன முகப்பு அட்டையைக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்!

தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா? மோடி அதை நிறுத்தி வைத்துவிட முடியுமா?

இப்படி மக்களிடம் பேசுகின்ற தலைவர்களுக்குத்தான் புரியாது! எழுதிக் கொடுப்பவர்களுக்காவது இது புரிந்திருக்க வேண்டாமா?

இந்தச் சிக்கலான தொகுதி வரையறைச் சட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் 1971 சென்சசு அடிப்படையிலேயே இந்த வரையறை நீடிக்கட்டும் என்று ஒவ்வொரு முறையும், இருபத்தி ஐந்து, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குக் காங்கிரசு அரசும், வாசுபாய் அரசும், தள்ளி வைத்து நழுவி விட்டன!

இப்போது அந்தப் பூதம் வானளவு பெரிதாகி விட்டது! இனி அதைப் போத்தலுக்குள் அடைக்க முடியாது! நம்முடைய அரசமைப்புக்கு நாம் எதை அடிப்படையாகக் கொண்டோம் என்றால் ஓர் ஆள்; ஒரு வாக்கு; ஒரே மதிப்பு.

உ.பி.காரனுக்கும், தமிழனுக்கும், பிகாரிக்கும், மலையாளிக்கும் "ஓராளுக்கு ஒரு வாக்குதான்; அதற்கு ஒரேமதிப்புத்தான்!'

அப்போதே 1962}லேயே நமக்கு மொத்தம் 41 இடம்; உ.பி. காரனுக்கு 86 இடம்; இது தலையெண்ணி ஒதுக்கப்பட்ட இடம்தான், அதை ஏன் ஏற்றீர்கள்? அப்போது பெரியார் கடவுளை ஒழித்துக் கொண்டிருந்தார்! அண்ணா குமரிக்கோட்டம் எழுதிக் கொண்டிருந்தார்! அவர்கள் திராவிட நாடு விடுதலை அடையப் போகிறது என்று கருதியதால், தொகுதி வரையறைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை!

"ஓர் ஆள்; ஒரு வாக்கு; ஒரே மதிப்பு' என்னும் அரசியல் சாசனத்தின் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில்தான் அன்று உ.பி.க்கு 86 இடங்கள்! நமக்கு வெறும் 41இடங்கள்! அன்று இந்த முறையை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?

இந்தியா ஒன்றாக இருந்து பழக்கப்பட்ட நாடில்லை; மொழிவழி இனங்களாகவே பழக்கப்பட்ட நாடு என்பதை அறிந்த ஒரே ஒரு தொலைநோக்காளன் காந்தி, 1920}லேயே காங்கிரசுக் கட்சியை மொழிவாரியாகப் பிரித்து அமைத்தான்!

விடுதலை பெற்ற இந்தியா அவ்வாறு அமைந்ததற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்த பெருமகன் அவன்! இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட்டு இறுக்கம் பெற்றதற்கு அவனே முதற் காரணம்!

இந்திய அரசியல் சாசனம் உருவான காலத்தில் அதற்கு வழிகாட்ட காந்தி இல்லை. தாயில்லாப் பிள்ளையாகத் தன் போக்கில் வளர்ந்தவர்கள் நாம்! அந்தக் குறைபாடுகள் இப்போது எதிரொலிக்கின்றன!

"ஓர் ஆள், ஒரு வாக்கு, ஒரே மதிப்பு' என்னும் கொள்கை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது!' ஐம்பது ஆண்டுகளுக்குத் தொகுதி வரையறையை நிறுத்திவைத்து விட்டதால், அரசியல் சாசனம் தந்த உரிமையை நாங்கள் இழந்து விட்டோம் என்கிறான் வடக்கத்தியான்! இப்போது தமிழனும் மலையாளியும் பெற்றிருக்கும் "வாக்கின் கனம்' கூடுதலானது. பிகாரி மற்றும் உ.பி.காரனின் வாக்கின் கனம் குறைவானது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இப்போது கேரளம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற வாக்காளர் எண்ணிக்கை கொஞ்சம் முன்பின்னாகப் பதின்மூன்று இலட்சம் முதல் பதினைந்து வரையிலும்! உ.பி.காரனின் தொகுதியில் முப்பது இலட்சம் வாக்காளர்கள்!

அவன் சொல்கிறான்; உங்களின் வாக்கு மதிப்பு "ஒன்று' என்றால் எங்களின் வாக்கு மதிப்பு அரைதானே(0.5)! உங்களில் ஒருவனுக்கு ஒரு எம்.பி. என்று கொண்டால் எங்களில் இருவருக்கு ஒரு எம்.பி.! இதென்ன சமத்துவம் என்கிறான்! பாதிக்கப்பட்டது நீயா, நானா என்று கேட்கிறான்!

தொகுதி வரையறையை இன்னுமொரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்காவிட்டால், எட்டு நாடாளுமன்ற இடங்களை இழந்து விடுவோம் என்று தமிழ்நாடு சொல்கிறது.

ஐம்பதாண்டுகளாகத் தொகுதி வரையறையை நிறுத்திவைத்து விட்ட காரணத்தால், "இனிமேல்தான் என்று இல்லை; ஏற்கெனவே நாற்பது நாடாளுமன்ற இடங்களை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டோம்' என்று உ.பி.காரன் சொல்கிறான். பிகாரி அதை வழி மொழிகிறான்!

"ஓர் ஆள்; ஒரு வாக்கு; ஒரே மதிப்பு' என்று மனிதர்களைச் சமத்துவப்படுத்திய பழைய அரசியல் சாசனக் கொள்கைக்கும், மனிதர்களை அல்ல; மாநிலங்களைத்தான் சமத்துவப்படுத்த வேண்டும் என்னும் புதிய கொள்கைக்கும் நடக்கும் போர் இது!

காசுச் சத்தம் கேட்டு விழிக்கின்ற தலைவர்கள்; விசில் சத்தம் கேட்டு விழிக்கின்ற தலைவர்கள்!

எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com