
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநல சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாயப் பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை சமுதாயப் படிநிலை, வாய்ப்பு நலம்-இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும் அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை-ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய் நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் 26-ஆம் நாளாகிய ஈங்கிதனால், இந்த அரசமைப்பை ஏற்று, இயற்றி, நமக்குநாமே வழங்கிக் கொள்கிறோம்.
இது என்ன? இதுதான்அரசமைப்பு சாசனத்தின் முகவுரை. இதை நாம் அனைவரும் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக்கொண்ட சாசனம், செய்து கொண்ட உறுதிமொழி. சரி, அதற்கு இப்போது என்ன அவசியம்? இது எல்லோருக்கும் தெரியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
வழக்குரைஞருக்கும் நீதிபதிக்கும் நீதிமன்றத்துக்கும் மட்டும் அல்ல; இது எல்லோருக்கும் பொதுவான நீதி நூல் இந்த அரசமைப்பு சாசனம். அண்மையில் மதராஸ் கிரிக்கெட் கிளப்பின் இலக்கியப் பிரிவு சட்டம் இலக்கியத்துடன் சந்திப்பு என்ற தலைப்பில் என்னை ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க அழைத்தது. அப்போது, என்னுடன் உரையாடியவர், அரசமைப்பு சாசனத்தைப் பற்றி நாம் முக்கியமாக என்ன தெரிந்து கொள்ள வேண்டும், முழுவதும் படிக்க வேண்டுமா என்று கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன், 'முழுவதும் படிக்க வேண்டும் என்பது நடக்காத விஷயம். எல்லா வழக்குரைஞர்களும் நீதிபதிகளுமே முழுக்க படித்திருப்பார்களா என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது, சாதாரண குடிமக்கள் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால், முகவுரையை மட்டுமாவது எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.
அதில் நான்கு கோட்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன; நீதி, தன்னுரிமை, சமன்மை, உடன்பிறப்புரிமை. அதில் முதல் மூன்று எல்லோருக்கும் புரியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நான்காவதான உடன்பிறப்புரிமையைப் புரிந்து பழகுவது எளிதல்ல. இதை அன்றே டாக்டர் அம்பேத்கர் சொன்னார்.
இங்கிருக்கும் அனைவரும் உடன் பிறப்புகள்தான் என்கிறது அது. ஜாதி-மத வர்க்கப் பிரிவுகள் நிறைந்த நம் சமூகத்தின் உணர்வில் அதை ஏற்றுவது கடினம். ஆனால், முன்னுரையை மட்டுமாவது எல்லோரும் படிக்க வேண்டும்' என்றேன். பிறகு வேறு கேள்விக்குப் போய்விட்டோம்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்னிடம் என் மகன், 'நம் அரசமைப்பு சாசனம் எழுதப்பட்ட ஆங்கிலம் ஒரு மேட்டமைப்பு ஆங்கிலம் இல்லையா' என்று கேட்டார். உண்மை. அது எளிமையாக எல்லோருக்கும் புரியும் மொழியில் இருந்தால்தானே நாம் நமக்கு வழங்கிய என்ற சொற்றொடருக்குப் பொருள் இருக்கும்?
நம் தமிழ்நாடு அரசு, அரசமைப்பு சாசனத்தை 2009-ஆம் ஆண்டில் (2008 மார்ச் 31 வரை திருத்தப்பட்டவாறு) தமிழில் மொழியாக்கம் செய்தது. அந்த நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, 'தமிழாக்கம் இந்திய அரசுக்காக சட்டம்' (ஆட்சி மொழிப் பிரிவுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9).
அச்சிட்டு வெளியிட்டது யாரென்றால், தமிழ்நாடு அரசு எழுதுபொருள் அச்சுத் துறை இயக்குநர். எவ்வளவு பேருக்கு இதைப் பற்றித் தெரியும் என்று எனக்குத் தெரியாது. நான் திருச்சியில் இருக்கும் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அந்த நாள் வரை எனக்குத் தெரியாது.
சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு பயிற்சி முகாம் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது 2014-15-இல் இருக்கலாம். இடைவேளையில் ஒரு மேஜையைச் சுற்றி பயிற்சி வழங்கும் அறிஞர்கள், அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள், கல்லூரிப் பேரசிரியர்கள், நான் எல்லோரும் அமர்ந்திருந்தோம்.
ஒரு கருநீலப் புத்தகம் மேஜைமேல் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தால், நமது அரசமைப்பு சாசனம் அதுவும் தமிழில். எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து பொங்கியது. யார் பதிப்பு என்று கேட்டேன். அரசு பதிப்பு என்றார்கள். குடத்துள் விளக்காக இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று அரசு நினைத்துவிட்டது போலும்!
உடன்பிறப்புரிமை என்ற சொல்லை சகோதரத்துவம் என்றும் கூறலாம். அதன் பொருள் என்ன? தனி மனித மாண்பை மதிப்போம், அதை இழிவுபடுத்த மாட்டோம் என்று உறுதிப்படுத்தும் ஆன்மா. இதை இணைந்து வாழ்வது, சக மனிதர்களிடம் காட்டவேண்டிய மரியாதை, மனிதநேயம் என்றும் சொல்லலாம். இந்த ஒரு சொல்லை நாம் உள்வாங்கி தினமும் மனனம் செய்ய வேண்டும்.
சக மனிதர் என்றால் யார்? ஆண், பெண், சிறார், முதியோர், திருநர், மாற்றுத் திறனாளி, மேல் ஜாதி, கீழ் ஜாதி, மாற்று மதத்தவர், மனநிலை குன்றியவர், ஏழை, மனிதக் கழிவு அகற்றுபவர் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்திய மக்களாகிய நாம் என்றால் அதில் அனைவரும் அடக்கம் இல்லையா? நம் எல்லொருக்கும் மற்றவரிடம் சகோதரத்துவம் காட்டும் கடமை உள்ளது; மற்றவரிடம் அதை எதிர்பார்க்கும் உரிமையும் உள்ளது.
திருவள்ளூரில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 10 வயது பெண், ஒடிஸாவில் எரிக்கப்பட்ட பெண், திருப்புவனத்தைச் சேர்ந்த அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார், ஆணவக் கொலையில் இறந்தவர்-இவர்களையும் சேர்த்துத்தான்; இந்தப் பட்டியல் ஒரு தொடர்கதை- நான்கு நிகழ்வுகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
நாம் மேலே பார்த்த அரசமைப்பு முகவுரையை சிறு வயதிலேயே பள்ளிகளில் கற்பித்தால், இந்த அநியாயங்கள், கொடூரங்கள் நடக்காதிருக்குமோ?
அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசு நெறிமுறை கோட்பாடுகள் எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் மூலம் இந்த முகவுரையில் உள்ளது.
'இப்போது உயிரோடிருக்கிறேன்' என்று இமையம் ஒரு நாவல் எழுதியுள்ளார். அதில் கதைசொல்லி ஒரு 15 வயது பையன். அவனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுது. ஆகையால், அவன் தன் கிராமத்தில் இருந்து சென்னையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கிறான்.
சென்னையில் அவன் தந்தைக்கு தெரிந்தவர் பரிந்துரையில் ஒருவர் வீட்டில் இருப்பான். அவனுடைய கிராமத்தில் ஒரு செய்தித்தாள்தான் வரும். அதுவும் அந்த ஊர் தேநீர்க் கடைக்கு. அது மதியத்துக்கு மேல் தேநீர்க் கடை பஜ்ஜி பொட்டலம் செய்யப் பயன்படும். இங்கு சென்னையில் அவன் தங்கும் வீட்டிலோ ஏழெட்டு செய்தித்தாள்கள், ஆங்கிலம் தமிழ் இரண்டும்.
இந்தச் சிறுவனுக்கு வியப்பு. யோசித்து பார்ப்போம், இந்தச் சிறுவனுக்கும், அந்த சென்னை வீட்டுக்காரரின்குழந்தைகளுக்கும் வாய்ப்பு நலத்தில் சமன்மை இருக்குமா? அந்த ஏற்றத் தாழ்வை அரசமைப்பின் கீழே செயல்படும் அரசு சரி செய்யவேண்டும் இல்லையா? அவரவர் பாடு என்று இருந்தால் அது அரசமைப்புக்கு இசைவு அல்ல.
'சம்விதான்' என்ற 10-பாகங்கள் கொண்ட ஆவணப் படத்தை ஷ்யாம் பெனகல் இயக்கினார். அது பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியே வந்துவிட்டது. நான் இப்போதுதான் பார்த்தேன். அதில் அரசமைப்பு சாசனத்தை ஒவ்வொரு சொல்லாக யோசித்து வாதிட்டு, 'அதன் பெற்றோர் எப்படி உருவாக்கினார்கள் என்று படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.
சும்மா வரவில்லை இந்த அரிய அமைப்பு, ரத்தம், வியர்வை 'கண்ணீர்சிந்தி' அதனுடன் கடும் உழைப்பைச் சேர்த்து நமக்கு இதை ஈன்றார்கள். கர்ப்பகாலம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள் 18 நாள்கள்; இந்த அரசமைப்பை உருவாக்க, முதலில் 300-க்கும் மேலான அங்கத்தினர்கள் இருந்தார்கள்; பிரிவினைக்குப் பிறகு அது குறைந்தது; மொத்தம் 15 பெண்கள்; இவர்கள்தான் அரசமைப்பின் பெற்றோர்.
இதன் முகவுரையைப் படித்து பதித்துக் கொள்வது ஒரு புனிதக் கடமை. அதற்குப் பிறகு அடிப்படை உரிமைகள் என்ன, அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் என்ன, அடிப்படைக் கடமைகள் என்ன என்று படிப்படியாகத் தெரிந்து கொள்ளலாம். நம் மக்களுக்குப் புரியும் மொழியில், ஒவ்வோர் இந்திய மொழியிலும் இதை மொழியாக்கம் செய்வது அரசின் கடமை.
முதலில் இந்தத் தமிழ்ப் பதிப்பை மறுபதிப்பு செய்ய வேண்டும். ஓர் அழகான மேலட்டை வேண்டும்; மொழியாக்கத்தில் சீரமைப்பு தேவைப்பட்டால் செய்ய வேண்டும்; இன்றுவரை நாடாளுமன்றம் கொண்டுவந்துள்ள திருத்தங்களைச் சேர்க்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் அலுவலகங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதித் துறை அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இன்னபிற இடங்களில் சுவரில், பெரிய எழுத்தில் அரசமைப்பு முகவுரையை மாட்டி வைக்க வேண்டும்.
அதைப் பார்த்தாலாவது நம் சமூகம் மாறுமா? முக்கியமாக, முகவுரையை மட்டுமாவது நம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலில் தமிழில் கற்கட்டும். பசுமரத்தில் செதுக்கிவிட்டால், அழியாது என்பது என் நம்பிக்கை.
கட்டுரையாளர்:
நீதிபதி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.