
முனைவர் அ.பிச்சை
அக்டோபர் 2- மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
மகாத்மா காந்தி 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அதுமுதல் ஓய்வில்லாத தேச ஒற்றுமைப் பணி- தொடர் போராட்டங்கள்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1915-1919) அவரது உடல் மெலிந்தது; நலிந்தது. அப்போது, அவர் வசித்த இடம் சபர்மதி ஆசிரமம்; 1919, அக்டோபர் 2-ஆம் தேதி அவரது 50-ஆவது பிறந்த நாள் வந்தது.
அன்று அவரது உடல் நிலை சரியில்லை. மோசமடைந்து வருகிறார்; தொடர்ந்து இருமுகிறார். உடனே வருமாறு அவரது மகன்களுக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. மகன் தேவதாஸ் வந்து தந்தையை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை. ஆசிரமவாசிகளிடம் ஏன் இவ்வளவு பேர் இங்கே வந்தீர்கள்? அவரவர் பணியைச் செய்ய வேண்டாமா? என்றார்.
எந்நிலையிலும் தன் நலம் கருதாமல், பிறர் துயர் துடைப்பதே இறைப் பணி! இதுதான் அண்ணல் நமக்கு விட்டுச் சென்ற 50-ஆவது பிறந்த நாள் செய்தி!
1931 அக்டோபர் 2-ஆம் நாள். அது மகாத்மா காந்தியின் 62-ஆவது பிறந்த நாள். அப்போது, இரண்டாவது வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக மகாத்மா பிரிட்டன் சென்றிருந்தார். அங்குள்ள காந்திய அன்பர்கள், அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பினர். லண்டன் லைசெஸ்டர் சதுக்கத்தில் உள்ள விக்டரி ஹாலில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தியர்களும் ஐரோப்பியர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
பிறந்த நாள் என்பதற்காக மகாத்மா காந்தி ஓய்வு எடுக்கவில்லை; வழக்கமான பணிகளை மேற்கொண்டார். எப்போதும்போல் வட்ட மேசை மாநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். அங்கோ விவாதங்கள் நீடித்தன. மாநாட்டுப் பணிகள் அவரை மிகவும் களைப்பாக்கியிருந்தன. விழா அரங்குக்கு காந்தி வருவதற்கு, காலதாமதம் ஆகிவிட்டது. அது மகாத்மா காந்திக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
விழா அரங்கில் அவர் அதிகம் பேசவில்லை. பேச்சைத் தொடங்கி அவர் சொன்ன முதல் வாசகம்.
"தவிர்க்க இயலாத காரணத்தால், நான் இங்கே வருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்துக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்'
என்பதாகும். வந்திருந்த விருந்தினர்கள் அதைக் கேட்டு கண் கலங்கி நின்றனர்!
காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மகாத்மா காந்தி கற்பித்த, கடைப்பிடித்த நெறிமுறைகளில் ஒன்றாகும்.
1935-இல் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 1937-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அன்றைய பிகார் காங்கிரஸ் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அது-மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாள் என்பதாகும்.
இந்த அறிவிப்பு சரியா? முறையா என்று கேட்டு ஒரு பிகாரி (இஸ்லாமிய) இளைஞர் மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினார். அதற்கு அவர், அந்த இளைஞருக்கே பதில் எழுதினார். பதிலின் வாசகம்- "என் பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவிப்பது பிடி ஆணை இன்றியே கைது செய்யப்படுவதற்குரிய குற்றமாகும்' என்பதாகும்.
"அந்த நாளில் நூல் நூற்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; ஹரிஜன சேவையில் மக்கள் ஈடுபட வேண்டும்; அது உழைப்புக்கும், சேவைக்குமான நாள். கொண்டாட்டத்துக்கான நாள் அல்ல' என்பதே மகாத்மா காந்தி வெளியிட்ட கருத்து'. (ஹரிஜன் இதழ்: 15.10.1938) ஆகவே, அக்டோபர் 2-ஆம் தேதி நாம் ஜாதிமத பேதமற்ற சமுதாயம் காணும் பணியிலும், பிற தேசப் பணியிலும் ஈடுபட வேண்டும் என்பதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய முதல் கடமை.
அக்டோபர் 2, 1947. அதுதான் சுதந்திர இந்தியாவில் காந்தியின் முதல் பிறந்த நாள்; அதுவே அவரது கடைசிப் பிறந்த நாளாகவும் அமைந்து விட்டதே! அன்று தான் 78 வயதை நிறைவு செய்து, தனது 79-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார்!
125 வயது வரை வாழ வேண்டும்; மானுட நலனுக்காகவும் உயர்வுக்காகவும் ஓயாது உழைக்க வேண்டும் என்பது ஆரம்ப கால நம்பிக்கை. ஆனால், இன்றோ வாழ்ந்தது போதும் இந்த வாழ்க்கை என எண்ணத் தொடங்கி விட்டார். தேச விடுதலை மகிழ்ச்சியைத் தந்தது: ஆனால், தேசப் பிரிவினை துயரத்தில் தள்ளியது. "ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள், பிரிந்து தனி வீடு கண்டார்கள். தவறில்லைதான். சகோதரர்களாக இருந்தவர்கள், நண்பர்களாக வாழ்வார்கள் என நம்பினேன். ஆனால், பகைவர்களாக மாறி விட்டார்களே! எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இடப் பெயர்ச்சியால் ஏற்பட்ட இன்னல்கள்; இதைக் காண்பதற்காகவா நான் வாழ்கிறேன்! இறைவா! என்னை நீ விரைவில் எடுத்துக் கொள்' என பிறந்த நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் வேண்டினார். குறைந்தபட்சம் என் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று மன்றாடினார்.
என்றும்போல் அன்றும் அண்ணல் அதிகாலையில் துயிலெழுந்தார்; காலைக் கடன்களை முடித்தார்; கைராட்டையில் நூல் நூற்றார்; கீதை சுலோகங்களைக் கேட்டார். பிரார்த்தனையில் ஈடுபட்டார். முதல் நாளிலேயே தொடங்கிய 24 மணிநேர உண்ணா நோன்பை அன்றும் தொடர்ந்தார். பார்வையாளர்களைச் சந்திக்க, அந்த சாந்த மூர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தார்.
முதலில் கவர்னர் ஜெனரல் மெüண்ட் பேட்டன் தன் துணைவியார் எட்வினாவுடன் வந்து இனிய வாழ்த்துக் கூறினார். பிரதமர் ஜவாஹர்லால், துணைப் பிரதமர் படேல், ஜி.டி. பிர்லா, கே.எம்.முன்ஷி, ராஜ்குமாரி அம்ருத கெüர், இன்னும் பலர் வந்து வாழ்த்துக் கூறினார்கள். சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது அறிவிப்புகள் அவருக்கு ஆறுதல் அளித்தன. மகிழ்ச்சியைத் தந்தன.
முதலாவதாக மதராஸ் மாகாணத்தில் அக்டோபர் 2-ஆம் நாள் முதல் மதுவிலக்கு திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பாகும். மது, போதைப் பொருள் மூலம் கிடைக்கும் வரி மிகவும் மட்டமானது. மதராஸ் மற்ற மாகாணங்களுக்கு வழிகாட்டுகிறது என்பதில் மகாத்மாவுக்கு மகிழ்ச்சி.
இரண்டாவதாக அவரது இளமைக்கால நண்பர் ஒருவர் பெயர் ராஞ்சோத் தாஸ் பட்வாரி. இவர் மகாத்மா காந்தி லண்டனில் படிப்புக்காக கப்பலில் பயணித்தபோது உதவியவர். அதன் பிறகு தொடர்பே இல்லை. அவர் மகாத்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். அதில், "சகோதரரே! நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும். உங்கள் மனிதநேயப் பணி தொடர வேண்டும்' என வாழ்த்தியிருந்தார்.
அதற்கு காந்தி உடனே அனுப்பிய பதில், "வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி! ஆனால், நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேனே! என்னை மகாத்மா என்கிறார்கள்: ஆனால், நான் இன்று ஒரு அல்பாத்மா ஆகிவிட்டேனே! நான் இருந்து என்ன பயன்?'
விலாசமில்லாத ஒரு நண்பனுக்கு உத்தமன் காந்தி எழுதிய அந்தக் கடிதம் நம் இதயத்தை நெகிழ வைக்கிறது.
மூன்றாவதாக மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர் ஒருவர், இரண்டாவது உலகப் போரில் பிரிட்டனுக்கு வெற்றி தேடித் தந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். வெற்றிக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில், அதே சர்ச்சில் பெருமகனை தூக்கி எறிந்து விட்டார்களே பிரிட்டானிய பெருமக்கள்! அதே நிலைதான் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்திக்கும் நிகழுமா என நான் அஞ்சுகிறேன் என்றார். உளவியல் ரீதியாக இது சரியான கணிப்பு என்று ஒரு பதிவு உள்ளது. இதை மகாத்மா காந்தி அறிந்த போதும் அது சரி என்னும் வகையில் தலை அசைத்தாராம்.
ஐந்தாவதாக, அண்ணலின் நண்பர் ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். அத்துடன் ஜார்ஜ் மாதிசன் எழுதிய கவிதை வரிகளையும் அனுப்புகிறார். அவ்வரிகள் இதோ!
என் கால் விலங்குகளைக் கொண்டே
என்னால் பறக்கமுடியும்!
எனது வருத்தங்களைக் கொண்டே
என்னால் வானளாவ உயர முடியும்!
எனது பின்னடைவுகளைக் கொண்டே
என்னால் ஓட முடியும்-!
எனது கண்ணீரிலேயே
என்னால் நீந்த முடியும்!
எனது சிலுவையைக் கொண்டே மானுட
சமுதாயத்தின் இதயத்தில் குடியேற முடியும்!
எனது சிலுவையைப் பெரிதாக்குங்கள்
இறைவா!
அவற்றை காந்திஜி மீண்டும் மீண்டும் படித்தார். எளிமையும், இனிமையும், அழகும், ஆன்மிக ஆழமும் கொண்ட இக்கவிதை அண்ணலின் இதயத்தைத் தொட்டது-. அந்தக் கடிதத்தை தன் அருகிலேயே வைத்துக்கொண்டார்-! மீண்டும், மீண்டும் அதைப் படித்துப் பார்த்தார்!
அண்ணலின் உள்ளுணர்வு அவரைத் தூண்டியது: உற்சாகம் மீண்டும் உயிர்த்து எழுந்தது; புத்துணர்வு பூத்தது; தனது லட்சியம் மட்டுமே தன் கண்ணுக்குத் தெரிந்தது.
எழுந்து நின்றார் எம்மான் காந்தி! தனது வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டினார்! மணிகாட்டும் கடிகாரத்தை மடியில் தொங்கவிட்டார்! போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டார்! இறை நம்பிக்கையோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார்! மண்ணுக்கும் மானுடத்துக்குமான தன் லட்சியம் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தது! ஆனால் நான்குமாதம் தான் அப்பயணம் தொடர்ந்தது!
கோட்சே என்ற கொடியவன் அம் முனிவரின் பயணத்தை மூன்று குண்டுகளால் முடித்து வைத்தான்! காந்தி மறைந்து விட்டார்! ஆனால், காந்தியத்துக்கு மரணமில்லை!
(நாளை அக். 2 காந்தி ஜெயந்தி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.