

-சுவாமி அபவர்கானந்தர்
"இறைவனின் தொண்டன் வாழ்க!', "பண்டைய முனிவர்களின் தொண்டன் வாழ்க!', "அமைதியின் தூதனுக்கு நல்வரவு!', "ராமகிருஷ்ணரின் உன்னதப் புதல்வனுக்கு நல்வரவு!', "அரசிளங்குமரனுக்கு அன்பான வரவேற்புகள்!'...
மேற்கண்டவை வெறும் வார்த்தைகள் அல்ல; 1897-ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஆன்மிகப் பேரொளியான சுவாமி விவேகானந்தரை சென்னை மாநகரம் வரவேற்கத் தயாரான வேளையில் வரவேற்பு வளைவுகளில் மிளிர்ந்த உணர்ச்சிப் பெருக்குகள்.
சுவாமி விவேகானந்தர் என்னும் மாபெரும் ஆன்மிகச் சுடரை உலகுக்கு அடையாளம் காட்டிய பெருமை தமிழ்நாட்டையே சாரும். அதனால்தான் "விவேகானந்தரைப் பெற்றெடுத்தது வங்காளம்; அவரைத் தத்தெடுத்தது தமிழ்நாடு' என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்கா செல்வதற்கு முன்னரே, சுவாமிஜியின் ஆற்றலை உணர்ந்து அவரை ஊக்கப்படுத்தியது தமிழகம். அதனால்தான் சுவாமிஜியும், "சென்னை இளைஞர்களே! உங்கள் மீதே என் நம்பிக்கை உள்ளது' என்று மீண்டும் மீண்டும் தனது கடிதங்களிலும் சொற்பொழிவுகளிலும் குறிப்பிட்டு வந்தார். தான் மேலைநாடுகளில் ஆன்மிக வெற்றிக்கொடியை நாட்டிவிட்டுத் திரும்பும்போது, ஒரு நிலையான ஆன்மிக மையத்தைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற சென்னை மக்களின் வேண்டுகோளே அவரது வருகைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சுவாமிஜியின் சென்னை வருகைக்காக 1896 டிசம்பர் 21 ஆம் நாள், மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் எனப்படும் ஐஸ் ஹவுஸ் கட்டடத்தில் ஒரு முக்கியக் கூட்டம் நடைபெற்றது. அளசிங்கர், பாலாஜி ராவ், பி. சிங்காரவேலு முதலியார் போன்ற சுவாமிஜியின் நேரடிச் சீடர்களுடன், சென்னையின் முக்கியப் பிரமுகர்களான நீதிபதி சுப்பிரமணிய ஐயர், வி. பாஷ்யம் ஐயங்கார், டாக்டர் நஞ்சுண்ட ராவ் போன்றோரும் இதில் கலந்துகொண்டனர்.
சுவாமிஜியை வரவேற்பதற்கான குழுவின் தலைவராக நீதிபதி சுப்பிரமணிய ஐயர் நியமிக்கப்பட்டார். மேலும், பிரம்மஞான சபையின் கர்னல் ஆல்காட், சிகாகோ சர்வ மத சபையின் தலைவராகச் செயலாற்றியவரும் கிறிஸ்தவத்தைப் பரப்ப இந்தியா வந்தவருமான டாக்டர் பரோஸ் ஆகியோரும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தது சுவாமிஜியின் மீதான பொதுவான ஈர்ப்பைக் காட்டியது. எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஐஸ் ஹவுஸ் வரை அலங்கார வளைவுகளும் தோரணங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டன.
சுவாமிஜியின் வருகை செய்தி பரவியதும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சென்னை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக, இளைஞர்களும் மாணவர்களும் இதில் முன்னிலை வகித்தனர்.
இதற்கு ஒரு நெகிழ்ச்சியான உதாரணமாக சூரஜ்ராவ் (இவர் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரிடம் தீச்ஃப்க்ஷ பெற்று சுவாமி நிச்சயானந்தர் என்ற பெயரில் துறவறம் பூண்டார்) என்ற மகாராஷ்டிர இளைஞரைக் குறிப்பிடலாம். சுவாமிஜியைக் காணும் ஆவலில் கையில் பணமில்லாமல் சென்னைக்கு வந்த அவர், கடற்கரை வழியாக நடந்தே வந்தார். வழியில் மீனவர் குடிசைகள் தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு பிரகாசமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். காரணம் கேட்டபோது, ""உங்களுக்குத் தெரியாதா? சென்னைக்கு ஜகத்குரு வருகிறார்'' என்று ஒரு எளிய மீனவர் கூறிய பதில் சுவாமிஜியின் புகழ் பாமர மக்களிடமும் எங்ஙனம் பரவியிருந்தது என்பதற்குச் சான்றாகும்.
1897, பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை முதலே எழும்பூர் ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது; ரயிலிலிருந்து சுவாமிஜி இறங்கியவுடன் "ஜெய் விவேகானந்தா!' என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. சுவாமிஜியின் மீது பன்னீர் தெளிக்கப்பட்டு, ரோஜா இதழ்கள் தூவப்பட்டன.
இரண்டு கம்பீரமான வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சுவாமிஜி ஏறியதும் தொடங்கிய ஊர்வலம் கடற்கரைச் சாலையை அடைந்தபோது, மாணவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, தாங்களே சுவாமிஜியின் வண்டியை ஐஸ் ஹவுஸ் வரை இழுத்துச் சென்ற காட்சி காண்போர் கண்களைப் பனிக்கச் செய்தது.
சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்த அந்த ஒன்பது நாள்களும் ஐஸ் ஹவுஸ் மாளிகை ஓர் ஆன்மிகச் சந்தையாக மாறியது. சுவாமிஜி தங்கியிருந்த நாள்களில் நடைபெற்ற சில சுவையான சம்பவங்களை நினைத்துப் பார்ப்போம்.
ஒரு பண்டிதர் சுவாமிஜியிடம், "நீங்கள் சூத்திரராயிற்றே, உங்களுக்குச் சன்னியாசம் எப்படிப் பொருந்தும்?'' என்று கேட்டபோது, தான் சித்திரகுப்தனின் வம்சமான காயஸ்த குலத்தைச் சேர்ந்தவர் என்றும் பிராமணர்கள் தினமும் வணங்கும் சித்திரகுப்தனின் வழித்தோன்றலான தனக்குச் சன்னியாசத்தில் முன்னுரிமை உண்டு என்றும் சுவாமிஜி பதிலடி கொடுத்தார்.
பிப்ரவரி 7 அன்று சுவாமிஜியைக் காணவந்த சைவர்களின் "உலகம் எப்படித் தோன்றியது?'' என்பது போன்ற கேள்விகளுக்கு, "ஏன், எப்படி என்ற கேள்விகள் உலகைச் சார்ந்தவை; பரம்பொருள் இவற்றைக் கடந்தவர் என்று விளக்கினார். மேலும், கடவுளுக்குச் சேவை செய்யச் சிறந்த வழி, ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே'' என்ற உயரிய தத்துவத்தை அவர்களுக்குப் போதித்தார்.
பிப்ரவரி 8 அன்று விக்டோரியா ஹாலில் சுவாமிஜி முதல் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் அரங்குக்குள் நுழைய முடியாமல், சுவாமிஜி ஒரு வண்டியின் மீது ஏறி நின்று கீதை பாணியில் மக்களிடையே பேசினார்.
பிப்ரவரி 9 அன்று ஆற்றிய "எனது போர் முறை' என்ற சொற்பொழிவில் தனக்கு நேர்ந்த இன்னல்களை விவரித்துப் பேசிய சுவாமிஜி ""நான் இறைவனின் துணையுடன் தனித்து நிற்கிறேன்'' என்று முழங்கினார். அதில், ""எனது திட்டம் பழங்காலத்தின் மகத்தான ஆச்சார்யர்களுடைய கருத்துகளைப் பின்பற்றுவதே. அவர்கள் மாபெரும் வலிமையும் தூய்மையும் வாழ்வும் தந்தவர்கள். அவர்கள் மிக அற்புதமான செயல்களைச் செய்தார்கள். நாமும் அற்புதமான வேலைகளைச் செய்தாக வேண்டும்'' என்ற அறைகூவல் விடுத்தார்.
பிப்ரவரி 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்ற "இந்திய ரிஷிகள்' மற்றும் "வேதாந்தம்' சொற்பொழிவுகளில், "இளைஞர்களுக்கு வலிமை மிக அவசியம்'' என்பதை வலியுறுத்தினார். "கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு அருகில் செல்ல முடியும்'' என்ற அவரது புகழ் பெற்ற பொன்மொழி பச்சையப்பா அரங்கில்தான் ஒலிக்கப்பட்டது.
பிப்ரவரி 14 அன்று ஹார்ம்ஸ்டன் சர்க்கஸில் நடைபெற்ற "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான தமது சென்னையின் இறுதிச் சொற்பொழிவில், ""சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது. தாய்நாட்டின் அழைப்புக்கு செவி சாய்ப்பீர்களா?'' என்று அறைகூவல் விடுத்தார்.
சுவாமிஜி சென்னையில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர். ஆனால், அவரது பணி உலகம் தழுவியது என்பதால், தனக்கு மாற்றாகத் தனது சகோதர சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார். இதன் விளைவாகவே சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி விவேகானந்தரின் வழியில் செயலாற்றி வருகிறது.
சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்த ஐஸ்ஹவுஸ் எனப்படும் கேஸில் கெர்னன் கட்டடத்தினை "விவேகானந்தர் இல்லம்' என்று பெயர் மாற்றம் செய்து 1999 டிசம்பரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குப் பல ஆண்டுகளுக்குக் குத்தகையாக அளித்து சுவாமிஜிக்குப் பெருமை சேர்த்தது. 2013-இல் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவின்போது அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு விவேகானந்தர் பண்பாட்டு மையத்துக்கான நிலத்துடன் இல்லத்தையும் சேர்த்து 100 ஆண்டுகளுக்கு குத்தகையாக அளித்து பெருமிதம் கொண்டது.
தற்போது மெரீனா கடற்கரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் விவேகானந்தர் இல்லம் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு பணிகளின் நிலைக்கலனாக இயங்கி வருகிறது.
பிப்ரவரி 15-ஆம் தேதி காலை, சுவாமிஜி கல்கத்தா செல்வதற்காக துறைமுகம் வந்தார். கண்ணீரும், கனத்த இதயங்களுமாக சென்னை மக்கள் அந்த ஆன்மிகச் சூரியனுக்கு விடை கொடுத்தனர். சுவாமிஜி (சுவாமி விவேகானந்தர்) கப்பலில் ஏறிச் சென்றாலும், சென்னை விஜயமான அந்த ஒன்பது தினங்கள் தமிழக ஆன்மிக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயமாகும்.
சுவாமிஜியின் "எழுந்திருங்கள், விழித்திருங்கள், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்லுங்கள்' என்ற அவரது தாரக மந்திரத்துக்கு ஏற்ப இம்மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை மேன்மைமிக்கவர்களாக ஆக்கி நமது சமுதாயத்தையும் மேன்மைமிக்கதாக ஆக்குவோமாக.
1897-ஆம் ஆண்டு பிப். 6 அன்று
சுவாமி விவேகானந்தர்
சென்னை வந்த நாள்.
கட்டுரையாளர்:
ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.