

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆர்.) முன்பு 6,41,14,587 என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755 என்றும், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட வாக்காளார்களின் எண்ணிக்கை 97,37,832 என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தற்போதுள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் சுமார் 2. 77 கோடி என்றும், ஆண் வாக்காளர்கள் சுமார் 2. 66 கோடி என்றும், மூன்றாம் பாலினத்தவர் 7,191என்றும், மாற்றுத் திறனாளிகள் சுமார் 4.19 லட்சம் என்றும் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் தங்களின் பெயரை தகுந்த இருப்பிட ஆவணங்களைக் காட்டி சேர்த்துக் கொள்ளவும் தொடர்ந்து வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பெரும் பகுதி உதவித் தொகைகளுக்கும், மானியங்களுக்கும் செலவிடப்படுகிறது. இதனால், மாநில அரசுக்கு தற்போது சுமார் ரூ. 9 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசமான நிதி நிலையை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த முறை எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்த நிதி நெருக்கடியின் பாதிப்பு தமிழகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். எனவே, மாநிலத்தை ஆட்சி செய்யப் போகும் கட்சி இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுவும், அதைச் சாத்தியப்படுத்தும் வகையில் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளைத் திட்டமிடுவதும் நல்லது.
மக்களிடையே நுகர்வுக் கலாசாரம் பெருகி வருகிறது. இதற்குக் காரணம் கடன் வாங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதுதான். கடன் வாங்குவது தவறு என்ற மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகள் அமைவது நல்லது. மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தையும், உழைத்து வாழும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்தும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் மக்கள் மேம்பாடு அடைய கவனம் தரும் கொள்கைகள் அவசியம். மக்களின் வருமானம் உயர்ந்தால் மாநிலத்தின் வருமானமும் உயரும். அதிகமான தொழிற்சாலைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவும் கொள்கை வரைவுகள் தேவைப்படுகின்றன.
பதவி ஏற்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொழில் வாழ்க்கை முறையை எளிமையாக்கிக் கொண்டால், மக்களின் வரிப் பணம் அதிகமாக வீணாகாது. ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் அளிக்கப்படும் சலுகைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மக்களின் வரிப் பணத்தை நியாயமாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
அரசியல் தொடர்ந்து ஒரு வணிகமாகவோ, லாபம் பார்க்கும் தொழிலாக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல; அது ஒரு சமூக சேவையாக மாற வேண்டும்.
வாக்காளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவர்ச்சிமிகு தேர்தல் வாக்குறுதிகளுக்கு தேர்தலில் இரையாகிவிடக் கூடாது என்று குடியரசுத் தலைவர் நம்மை எச்சரித்திருப்பது நம் அனைவரின் சிறப்புக் கவனத்தைப் பெறுகிறது. அதற்கு செயல் வடிவம் தருவது நம் அனைவரின் கடமையாகும்.
வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களால் தேர்தல் முடிவுகள் வெகுவாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை இன்று பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. அதிக வாக்குப்பதிவு ஜனநாயக அமைப்பின் நியாயத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் பலப்படுத்துகிறது.
வாக்களிப்பதன் மூலம்தான் நாம் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதையும் உறுதி செய்ய முடியும். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருந்தால், நாம் இந்தத் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காமல் நமது அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.
வேட்பாளர்களின் ஒழுக்கம், அவர்களின் திட்டங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு வாக்களிக்கும் உரிமை நமக்கு உள்ளது. இலவசங்கள், லஞ்சம், மிரட்டல், வற்புறுத்தல் போன்ற எந்த வகையிலும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துவது சட்டத்துக்கு எதிரானதாகும். வாக்காளர்கள் தங்கள் வாக்கை எந்தவித அச்சமும், சமரசமும் இல்லாமல், சுதந்திரமாகச் செலுத்த வேண்டும். தேர்தல்கள் பாரபட்சமற்றதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவகர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. அரசு தனது திட்டங்களிலும் அவற்றைச் செயல்படுத்தும் விதங்களிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டதாக இருப்பது நல்லது. அவை மக்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை மட்டுமே அரசியல் கட்சிகள் அளிப்பது நல்லது. மேலும், சாத்தியமாகும் திட்டங்களை மட்டுமே அறிவிக்க வேண்டும். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றுவதும் மாநிலத்தின் நிதிச் சுமையை அதிகமாக்குவதும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன முறைகள் அனைத்துத் துறைகளிலும் தவிர்க்கப்படுவது நல்லது. மாநிலத்தில் பல போராட்டங்களுக்கு இதுவே காரணமாக உள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் புத்துயிர் பெற முயற்சிகள் எடுக்கப்படுவது நல்லது. பொது வாழ்வில் சாமானிய மக்கள் அரசியல்வாதிகளால் மதிக்கப்படும் ஒரே நாள் தேர்தல் நாள் மட்டுமே. அந்த நாளை சரியான தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் நாளாக மக்கள் மாற்றிக்கொள்வது நம் ஒற்றை விரலில்தான் இருக்கிறது.
இந்தியாவின் மக்களாட்சியின் அடித்தளம் வாக்குரிமையே ஆகும். எனவே, வாக்காளார்கள் தேர்தல் நாளன்று தங்கள் வலிமையை உணர்ந்து செயல்படுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.