

மனித வாழ்க்கை இன்று ஒரு புதிய அறிவியல் யுகத்தில் பயணிக்கிறது. அந்த யுகத்தின் மையமாக திகழ்வது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம். இதன்மூலம் இன்று பல துறைகள் ஆட்டம் கண்டிருக்க, வாசிப்பும் படைப்பாற்றலும்கூட சிக்கலைச் சந்திக்கின்றன என்று பலரிடமிருந்தும் குரல்கள் மேலெழும்புகின்றன.
இங்கே பல்வேறு புத்தகங்களைப் படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் சாராம்சங்களை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆசைதான். நேரமின்மை, வசதியின்மை, முதுமை, பார்வைக் குறைபாடு, சோம்பேறித்தனம் மற்றும் ஆர்வமின்மை போன்ற சில காரணங்களால் புத்தகம் படிக்க முடியாத நிலை. கைப்பேசி வந்த புதிதில் வாசிப்பு குறைந்து போனாலும் மக்கள் ஏராளமான செய்திகளை, தரவுகளை வாசித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஆனால், தற்போது "ஷார்ட்ஸ்', "ரீல்ஸ்' மோகம் கைப்பேசி வாசிப்பையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. ஏ.ஐ.யின் வரவால் வாசிப்பு குறைந்திருந்தாலும் அறிவுத்தளம் விரிவடைந்து இருக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் நிலவும் சூழலில், நம் மண்ணில் வாழ்ந்து மறைந்த தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார் தற்போது வாழ்ந்தால், செயற்கை நுண்ணறிவு குறித்து என்ன கருத்து சொல்லியிருப்பார் என 'சாட் ஜிபிடி' யிடம் கேட்கத் தோன்றியது. கேள்வியை உள்ளீடு செய்தேன். அதுவும் வெகு சுவாரஸ்யமாக ஒரு பதிவைத் தந்தது. என்றும் புதுமையை நேசித்த, அறிவியலை தெய்வமாக பார்த்த மகாகவி பாரதி இந்த ஏ.ஐ. என்னும் அறிவியல் அதிசயத்தை அச்சத்துடன் அல்ல, ஆழ்ந்த ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்று இருப்பார் எனத் தொடங்கியது.
தொடர்ந்து,
மனிதன் சிந்தித்தான்
இயந்திரமும் சிந்திக்கக் கற்றது
இது மனிதன் அடைந்த அறிவின் வெற்றி
என அவர் பாணியில் கவிதையும் எழுதிக் கொடுத்தது.
"ஜெமினி ஏஐ' ஒரு படி மேலே போய், அவரைப் போல வீறுகொண்ட நடையில் கற்பனைக் கவிதைகள் பல கொடுத்ததோடு புதிய ஆத்திசூடியையும் எழுதி அனுப்பியது.
அறிவை செயற்கையில் ஏற்று!
கணினி தமிழால் கவிதை தீட்டு
எந்திரம் போற்றுதல் இனிமை
சிந்தனை என்றும் மனிதற்கு உரிமை
என்று கூறி ஏ.ஐ.யை மனிதன் அறிவால் உருவான மந்திரக் கருவி என மகாகவி பாரதி அழைப்பார் எனச் சொன்னது.
இப்படி எத்தனை வகை ஏ.ஐ.யில் நாம் கேள்வி தொடுத்தாலும் மகாகவி பாரதி குறித்து நாம் என்ன இந்த பிரபஞ்சத்தில் உள்ளீடு செய்து இருக்கிறோமோ, அதன் பிரதிபலிப்பாக நமக்குப் பதிலைத் தருகிறது. ஆனால், அது சொன்ன தகவல்கள் சிந்தனையைக் கிளறி விட்டது. இன்று பலரும் ஏ.ஐ.யை ஒருவித அச்சத்துடனே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மகாகவி பாரதி நிச்சயம் நம்பிக்கையுடனும் ஆழ்ந்த ஆர்வத்துடனும் வரவேற்று இருப்பார் என்ற பதில் நல்வாக்கியமாக மனதுக்குப்பட்டது.
வாசிப்பு பழக்கம் குறைந்து அதன் வீரியமும் தன்மையும் நீர்த்துப்போவதாக பரவலாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், அதன் ஆக்கபூர்வமான மற்றொரு பக்கத்தை மனம் நோக்கத் தொடங்கியது. "சரஸ்வதி சபதம்' திரைப்படத்தில் சொடக்கு போடும் நேரத்தில், வித்தியாபதியை மெத்த படித்த பண்டிதனாக உருமாற்றி இருப்பார் சரஸ்வதி தேவி. அதுபோன்ற வரத்தை நாம் பெற முடியாவிட்டாலும், அதுபோன்ற வசதியை நாம் பெற்றுக் கொள்ள முடிகிறபடி இன்று ஏ.ஐ. சாமானியருக்கும் உதவி வருகிறது.
முன்பு புத்தகங்களை மட்டுமே வாசித்து வந்த நிலையில், இன்று ஏ.ஐ. தொழில்நுட்பம் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. நெட்பிளிக்ஸ், யூடியூப் போன்றே இப்போது நூலகங் களும் மின் புத்தகத் தளங்களும் வாசகரின் ரசனைக்கு ஏற்ப புத்தகங்களைப் பரிந்துரைக்கின்றன. தனிப்பட்ட ஒரு வாசகரின் திற நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற உள்ளடக்கங்களைப் பரிந்துரைக்கிறது.
நீண்ட கட்டுரைகள் அல்லது அதிக பக்கங்களைக் கொண்ட நூல்களை வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏ.ஐ. அதன் முக்கியக் கருத்துகளை மட்டும் சுருக்கமாகத் தருகிறது. இது தகவல்களை விரைவாகப் பெற உதவுகிறது. எழுத்து வடிவில் உள்ள எந்த ஒரு தமிழ் நூலையும் மனிதக் குரலுக்கு நெருக்கமான உணர்ச்சிகரமான குரல் மூலம் கேட்கும் வசதி இப்போது பரவலாகியுள்ளது.
இதன் மூலம் வாசிப்பில் ஆர்வம் குறைந்தவர்களும், இயலாமை நிலையில் இருப்பவர்களும்கூட அறிவுலகில் நுழைய முடிகிறது. ஏற்கெனவே ஏராளமான யூடியூபர்கள் கதைகளை வாசித்துக் காட்ட களம் இறங்கியிருந்தனர். அதற்கும் தற்போது மாற்று வந்திருப்பதாகக் பார்க்கப்படுகிறது.
வாசிப்பில் இப்படி ஒரு மாற்றம் அல்லது புரட்சி ஏற்பட்டிருக்கிறது எனும் நிலையில் படைப்பாற்றலில் அதன் பங்களிப்பை எப்படி பார்ப்பது? படைப்பாற்றல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலை மாறி, இன்று ஏ.ஐ. ஒரு சிறந்த சக படைப்பாளியாக உருவெடுத்துள்ளது. மொழியில் ஏற்படும் இலக்கணப் பிழைகளை திருத்தித் தர ஆரம்பித்த இந்த ஏ.ஐ. இன்று ஒரு வாக்கியத்தை இன்னும் எப்படி அழகாக எழுதலாம் என்பதற்கு ஆலோசனையும் வழங்குகிறது.
புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு கதையைத் தொடங்கும் போதும் அல்லது கவிதை எழுதும் போதும் ஏற்படும் தடைகளை உடைக்க புதிய கருப் பொருள்களை வழங்குகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களை இன்றைய நவீன தமிழுக்கு ஏற்ப எளிமைப்படுத்தவும் அதை உலகளாவிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் ஏ.ஐ. பெரும் அளவில் பயன்படுகிறது. இன்று மொழி பெயர்ப்பில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு நாவலை மொழிபெயர்க்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், ஏ.ஐ. வரவால் மூன்று மாதங்களிலேயே முடித்துவிடக் கூடிய நிலை. அதிலும், இயந்திரத்தின் உழைப்பை இறுதிப் படுத்த மனிதன் எடுத்துக் கொள்ளும் நேரம்தான் அது என்கிறார்கள்.
சரி, இத்தனை வசதிகள் இருப்பதால் ஒரு எழுத்தாளரை அது புறந்தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவ்வாறு இல்லை என்றுதான் தோன்றுகிறது. முன்பெல்லாம் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் படம் வரைவார்கள். இப்போது பெருவாரியான இடங்களில் ஏ.ஐ. வரைந்து கொடுக்கும் படங்களையே காண நேரிடுகிறது.
மகாகவி பாரதி குறித்து நான் கேட்ட கேள்வியை வெவ்வேறு சாதனங்களில் இருந்து "சாட் ஜிபிடி'யிடம் கேட்டுப் பார்த்ததில் எல்லாப் பதிலிலும் அதிக வேறுபாடுகள் இல்லாமல் சொன்ன வார்த்தைகளையே திருப்பிப் போட்டு மாற்றித் தந் திருந்தது. மூன்று விதமான கட்டுரைகளிலும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இதையே ஒரு மூன்று மனிதர்களிடம் கேட்டால் அவரவர் பெற்ற அனுபவப்படி கட்டுரை கொடுத்திருப்பர். மூன்றும் வெவ்வேறு முனையில் நிற்க வாய்ப்பு இருக் கிறது. கணினிக்கு என்ன புரிதல் இருக்குமோ அதற்குள் என்ன பதியப்பட்டு இருக்குமோ அதையேதான் அது கொடுக்கிறது.
ஆனால், எழுத்தாளர் என்பவர் தன்னுடைய சொந்த அனுபவத்தின், அறிவின், கற்பனையின் வழி படைப்புகளில் தனித்தன்மையை வழங்குகிறார். அவருடைய கற்பனைத் திறனுக்கு அளவுகோல் என்பதே இல்லை. கணினி சொல்லும் வார்த்தை ஜாலம் எல்லாம் எழுத்தாளருக்கு முன் ஒரு கைக்குழந்தைபோல்தான் தோன்றுகிறது. மடை திறந்த வெள்ளத்துக்கும் குழாயில் வரும் நீருக்குமான வித்தியாசமாக இதை உணர முடிகிறது.
ஏ.ஐ.யை நம்முடைய உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். தோழமையான ஓர் எழுத்தாளராகக்கூட இப்போதைக்கு ஏற்க முடியாது. ஏனெனில், மனிதனுடைய நுண்ணறிவு என்பது கற்பனைக்கு எட்டாதபடிக்கு, முன் முடிவுகள் எடுக்க முடியாத வகையில் கட்டமைக்கப்பட்ட ஆகச் சிறந்த செயல்முறை. கேட்டதைக் கொடுக்கும் அட்சய பாத்திரம் கணக்கில் ஏ.ஐ.யை இனிவரும் காலங்களில் நாம் துணையாக்கிக் கொள்ளலாம்.
இப்போது வாசிப்புக்கு வருவோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் எந்த ஒரு புத்தகத்தின் சுருக்கத்தையும் சாராம்சத்தையும் தெரிந்து கொள்ளலாம் என இருப்பினும், வாசிப்பு அனுபவத்தில் திளைக்க முடியாது. வாசிப்பின் ருசியே அந்த அனுபவம்தான்; சுயமான வாசிப்பின்றி அதை உணர முடியாது. கற்பனைக் கடலில் நீந்த முடியாது.
நேரடியாக நாம் ஒரு சுற்றுலாத் தலத்தை கண்ணுற்று மகிழ்வதற்கும் சுற்றுலாத் தலத்தை உள்ளடக்கிய ஒரு காணொலிக் காட்சியை பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டல்லவா? ஓர் ஆணுக்கு தன் காதலியைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுக்கும், இயந்திரப் பெண்ணை நோக்கும்போது எழும் உணர்வுக்குமான வித்தியாசம்தான்.
வாசிப்பு பழக்கம்கூட ஒரு மனிதருக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தால்தான் பின்னாளில் அது வெவ்வேறு வடிவம் எடுக்கும்நிலையில், அதன் வழி சென்று வாசிப்பின் சுவையை அறிய முடியும். அதனால், அடுத்த தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை விதைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
"ஏ.ஐ. பாரதியார்' சொன்னதுபோல ஏ.ஐ. வசதியை சரியான முறையில் பயன்படுத்தினால் மனிதனை அறிவிலும் சிந்தனையிலும் இன்னும் உயர்ந்த நிலைக்கு அது அழைத்துச் செல்லும். ஆனாலும், இறுதியில் உணர்வும், அனுபவமும், மதிப்பீடும் மனிதனிடமே நிலைத்து நிற்கின்றன.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.