ஊடகங்களின் முன்னோடி !

இன்றும் உலக அளவில் அதிகம் ஒலிபரப்பப்படும் ஊடகங்களில் முதலிடத்தில் உள்ளது வானொலியே.
வானொலி - கோப்புப்படம்
வானொலி - கோப்புப்படம்
Updated on
2 min read

கண்களுக்கு ஓய்வளித்து செவிகளுக்கு விருந்தளிப்பது வானொலி. நீண்ட காலமாக புகழ்பெற்ற ஊடகமாகவும் விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து தகவல்களைப் பெறவும், கல்வி, கலாசாரங்களை நமக்கு வெளிப்படுத்தவும், பிடித்த இசையைக் கேட்கவும் சிறந்த தளமாக விளங்குகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுபோல் வானொலி தகவல்களுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்காதது மட்டுமல்லாமல், விரும்பிய இடத்துக்கு கொண்டு செல்லும் சாதனமாகவும் வானொலி விளங்குகிறது.

முற்காலத்தில் தகவலை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மின்காந்த அலைகள் மூலம் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றிய முதல் ஊடகம் வானொலியாகும். கடந்த நூற்றாண்டில் வானொலியானது ஒவ்வோர் வீட்டிலும் முக்கிய இடத்தைப் பெற்றது. வானொலி இருப்பது அந்த வீட்டின் அந்தஸ்தில் அடையாளமாகவும் கருதப்பட்டது.

வானொலியின் விலை மலிவானது; வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் குறைவு. பார்வை மாற்றுத் திறனாளிகளும் பல்துறை தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உற்ற தோழனாக இன்றளவும் வானொலி திகழ்கிறது.

அதுபோல் கல்வியறிவு அதிகம் இல்லாதவர்கள், முதியோர்களுக்கு வானொலி சிறந்த தகவல் சாதனமாக விளங்குகிறது. வயல்வெளியில் பணிபுரியும் விவசாயத் தொழிலாளர்கள், பயணங்களை மேற்கொள்வோர் என அனைத்துத் தரப்பினருக்கும் வானொலி பயன்தரும் சாதனம்.

அகில இந்திய வானொலி நிலையமும், சென்னை வானொலி நிலையமும் பயனுள்ள தகவல்களை அளித்து வருகின்றன. உலக அளவிலான செய்திகள், மாநில செய்திகள், வட்டார செய்திகள், வானிலை அறிக்கைகள், இலக்கியம், கல்விச் சேவை, இசை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள், உரைச்சித்திரம், ஒலிச்சித்திரம், நாட்டு நடப்பு, நாடகங்கள், கிராமிய கலை, கர்நாடக இசை, கிராமப்புற இசை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், விநாடி} வினா, பெண்களுக்கான நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான சிறுவர் சோலை, அறிவியல் தகவல்கள், இன்று ஒரு தகவல், விவசாயிகளுக்கான வீடும் வயலும், பண்ணை இல்லம் போன்ற நிகழ்ச்சிகள், நேயர் விருப்பம், கிராமப்புற மேம்பாடு, பொதுப் பயன்பாட்டு நிகழ்ச்சிகள், விளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட் நேரடி வர்ணனை என பல்வேறு நிகழ்ச்சிகள் வானொலியில் நேர்த்தியாக ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள்.

இன்றும் உலக அளவில் அதிகம் ஒலிபரப்பப்படும் ஊடகங்களில் முதலிடத்தில் உள்ளது வானொலியே. தொலைக்காட்சி, அறிதிறன் பேசி, இணையதளம், சமூக ஊடகங்கள் அதிகரித்துவிட்ட போதிலும், செய்தி ஊடகத்தின் முன்னோடி வானொலிதான். தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிட முடியாதது.

வானொலி நிகழ்ச்சிகள் பேசும் வார்த்தையில் அமைகின்றன; வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோரை நேயர்களால் காண முடியாது. ஆனால், அதன் ஒலிபரப்பு உத்திகளால், நிகழ்ச்சியில் பங்குபெறுவோரை நேரில் காண்பது போன்ற உணர்வு உருவாக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், சிறந்த நடையுடன் எளிய சொற்களைக் கொண்டு, தங்கள் குரல் திறனுடன் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மிக நேர்த்தியாக பணியாற்றி நாள்தோறும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றனர்.

கல்வி ஒலிபரப்பின்போது, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய முறையில் பேசி, அவர்கள் கற்க ஏதுவான வகையில் வானொலி நிகழ்ச்சிகள் அமைகின்றன. இதனால் பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பயனடைந்துள்ளனர்.

கிரிக்கெட் நேரடி வர்ணனையின்போது வர்ணனையாளர்கள் திறம்பட விளையாட்டு குறித்த வர்ணனையை, தங்கள் குரல் வளத்தை ஏற்ற இறக்கத்துடன் பேசி கேட்பவர்களை விளையாட்டு மைதானத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவர்.

குழந்தைகளுக்கான சிறுவர் சோலை நிகழ்ச்சி சிறுவர்கள் ஆர்வத்துடன் கேட்கும் வகையில் சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது. இதுபோல், பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிபரப்பப்படுகின்றன.

"நேயர் விருப்பம்' நிகழ்ச்சிக்காக வானொலி நேயர்கள் தங்களது விருப்பப் பாடல்களை கடிதம் மூலம் வானொலி நிலையங்களுக்கு அனுப்பி வைப்பர். "நேயர் விருப்பம்' நிகழ்ச்சிக்கு கடிதங்கள் அனுப்பி பிரபலமானவர்களும் உண்டு. இவ்வாறு படைப்பாற்றலைக் கொண்டாடும் சக்தி வாய்ந்த ஊடகமாக வானொலி விளங்குகிறது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த குக்லீல்மோ மார்க்கோனி 1895 - 1896-ஆம் ஆண்டு காலகட்டங்களில் வானொலியைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசு பெற்ற அவர், "வானொலியின் தந்தை' என்றழைக்கப்பட்டார்.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், அதன் உலகளாவிய பங்கை கௌரவிக்கும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பால் பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினமாக 2011-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு,

2012-ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து விட்டதால், வானொலியின் பயன்பாடு குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத, பிரிக்க முடியாத ஓர் உறவாக வானொலி விளங்குகிறது.

பண்பலை ஒலிபரப்புகள், இணையதள வானொலி என காலத்துக்கேற்ப உருமாற்றிக் கொண்டு, தனது செயல்பாட்டை வானொலி தொடர்கிறது. இன்றும் தொலைக்க முடியாத வகையில் நிலைத்து நிற்கக் கூடிய சக்தியாக திகழ்கிறது.

(நாளை பிப்.13 உலக வானொலி தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com