

சக்தியின்றி சிவம் இல்லை என்பார்கள். இது வேளாண்மையில் அன்றும், இன்றும் உண்மை. வேளாண்மையைத் தொடங்கி வடிவமைத்தவர்கள் பெண்களே. நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனித சமூகங்கள் ஓரிடத்தில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் அன்றைய பெண்கள் விதைத்து அறுவடை செய்வது என்ற முறையை உருவாக்கிய பிறகுதான் நடைபெற்றன.
உள்ளூர் மண், பட்டத்துக்கேற்ற விதைகளைத் தேர்ந்தெடுப்பது, பாதுகாப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட எல்லாம் அவர்களால்தான் நடந்தேறுகின்றன. எதை நடவு செய்வது, விதைப்பது, பாதுகாப்பது என்பது குறித்த பெண்களின் முடிவுகள் விளைச்சலுக்காக மட்டுமல்ல; சுவை, மணம், பண்பாட்டு மதிப்பு மற்றும் வீட்டுத் தேவையைக் கொண்டே பெண் உழவர் முடிவு செய்கிறார். அவரது முடிவு வயல், சமையலறை என இரண்டிலும் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்கிறது. இது "பச்சைப் புரட்சி'க்கு முன்புவரை இருந்த நிலை.
வேளாண்மையில் அதுவரை வேலைகளில் மட்டுமல்ல, முடிவெடுத்தலிலும் பெண்களின் பங்குதான் அதிகமிருந்தது. வெளி இடுபொருள்களைச் சார்ந்து செய்ய வேண்டிய பச்சைப் புரட்சி வேளாண்மையின்போது, முடிவெடுத்தல் ஆண்கள் கைக்கு மாறியது. ஆனால், நிலத்தில் உழைக்கும் அளவு குறைவதற்கு மாறாக மகளிரின் உழைப்பின் அளவு அதிகரித்தது.
ஒரு செடியை வீட்டில், தொட்டியில் வளர்க்கவே அந்தச் செடி குறித்தும், அதன் வளரும் விதம், அதற்கே உரிய தனித்துவமான இயல்புகள் குறித்த அறிவு தேவை. பயிர்களை வளர்ப்பதற்கு இன்னமும் கூடுதலான அறிவு தேவை. நிலம், அந்த வட்டாரத்தின் காற்று அடிக்கும் முறை, பகல், இரவு வெப்ப நிலை, மழை குறித்த அறிவு, பாசனம், அந்த நிலத்தில் தானாவே வளரும் பல்வகை தாவரங்கள், அவற்றின் தன்மைகள், உணவாகக் கூடியவை, மருந்தாகக் கூடியவை உள்ளிட்ட இயற்கைச் சூழல்கள் குறித்த அறிவும் தேவை.
இத்தகைய அறிவை அடிக்கடி புத்தாக்கம் செய்யவும் வேண்டும். ஏனெனில், இயந்திரம் போன்றதல்ல இயற்கை; உயிரியக்கம். விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டேயிருக்கும். நிலத்தில் வேளாண்மை செய்வதென்பது ஒரு பெருந்தொழிற்சாலையை நிர்வாகம் செய்வதற்கு இணையானது. இந்த நிர்வாகத்தை அந்தந்த நிலத்துக்கேற்ப வடிவமைத்து நடத்துபவர்கள் இன்றளவிலும் பெண்களாகவே உள்ளனர். உலகளாவிய உணவு உற்பத்தியில் 50% பெண்களின் பங்களிப்பால் கிடைக்கிறது.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் 60% முதல் 80% வரை பெண்களால்தான் கிடைக்கிறது. விதைகள், உணவு வகைகள் பண்பாட்டைக் காப்பதன் மூலம், பல தலைமுறைகளாக வளர்த்த பயிர்களின் நினைவையும், எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான சூழல் அறிவையும் அவர்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஆனால், இத்தகு அறிவுக்கும், செயல்திறனுக்கும் எந்தவித அங்கீகாரமும், மரியாதையும் எவ்விடத்திலும் இல்லை.
இவர்கள் குடும்ப விவசாயத்துக்கு தலைமை வகிப்பவர்களாக இல்லாமல், தங்கள் கணவர்களுக்கு "உதவுபவர்கள்' அல்லது குடும்ப விவசாயத்தைத் "தாங்குபவர்கள்' என்ற அடையாளத்திலேயே உள்ளனர். அதிகாலை முதல் முன்னிரவு வரை உழைக்கிறார்கள். ஆனால், அதற்குரிய மதிப்போ அங்கீகாரமோ சிறிதும் கிடைப்பதில்லை. நமது தேநீர், காபியில் உள்ள பாலின் ஒவ்வொரு துளியிலும், நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் இந்தப் பெண் விவசாயிகளின் உழைப்பும், வியர்வையும், வாழ்வும் கலந்துள்ளது.
இதை உணர்ந்தே ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பு (எஃப்ஏஓ) இந்த பிம்பத்தை மாற்ற முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக, 2026-ஆம் ஆண்டை "உலகப் பெண் விவசாயி' ஆண்டாக அறிவித்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத உழைப்பாளர்களாக அல்லாமல், உணவுப் பாதுகாப்பின் இன்றியமையாத சிற்பிகளாக அங்கீகரிப்பதற்கான ஓர் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
உலக அளவில் விவசாயக் குடும்பத்து பெண்கள் ஊதியம் இல்லாத குடும்பத் தொழிலாளர்களாக உள்ளனர். விவசாயத்தை, வணிகத்துக்கு தொண்டூழியம் செய்யும் ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்ட பிறகு, பண்ணையின் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற தொழில்களைக் கைவிடுவது போல், விவசாயத்தை விட்டு வெளியேறுவது எளிதல்ல; நிலவுடைமை சமூகத்தில் நிலம் வெறும் அடையாள மட்டுமல்ல அதிகாரமும்கூட.
ஆனால், வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க விவசாயக் குடும்பத்து ஆண்கள் விவசாயத்துக்கு அப்பால் இருக்கும் வருவாய் வாய்ப்புகளுக்காக வெளி வேலைகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால், குடும்பப் பண்ணைகளை நிர்வகித்தலும், பண்ணையில் வேலை செய்வதும் பெண்கள் பொறுப்பில் வந்துள்ளது.
இதன் காரணமாக, பண்ணையில் வேலை செய்யும் விவசாயக் குடும்பத்து பெண்களின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் (2017-18 முதல் 2024-25 வரை) 23.6 மில்லியனிலிருந்து 59.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2023-24-ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி (பிஎல்எஃப்எஸ்), விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்திருப்பினும், அவர்களில் பாதிப் பேர் ஊதியம் பெறாதவர்களாகவே உள்ளனர். "பெண் தலைமை வகிக்கும் பண்ணைக் குடும்பங்கள் காலநிலை மாற்ற விளைவு
களால் ஆண்களைவிட அதிகம் வருவாயை இழக்கின்றனர். வெப்பநிலை அதிகரித்து வானிலை மாற்றங்கள் தீவிரமடையும் போது, இந்த ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகின்றன. பெண் விவசாயிகள் தமது குடும்பம் மற்றும் சமூகத்துக்கான உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் அதே வேளையில், காலநிலை மாறுபாட்டின் தாக்கத்தையும் அதிகம் எதிர்கொள்கின்றனர்.
பெண் விவசாயிகளுக்கான உரிய அங்கீகாரம் அளிப்பதன் மூலம் கிராம மற்றும் பல்வேறு சமூக நிலைகளில் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு இயங்குவதற்கான வளம் குன்றா வளர்ச்சிக்கான முன்மாதிரிகளை உருவாக்க இயலும்' என்கிறது ஐ.நா. சபையின் உலக பெண் விவசாயிகள் ஆண்டுக்கான தீர்மானம். இந்தியாவில், விவசாயப் பணியாளர்களில் கணிசமான பகுதியினர் பெண்களாக இருந்த போதிலும், விவசாய நில உடைமையாளர்களாக இருக்கும் பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவாகவே உள்ளனர். தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, பெண் நில உரிமையாளர்களின் சதவீதம் 8.3-ஆக உள்ளது.
வேளாண்மையை "பச்சைப் புரட்சி' வணிகமயமானதாகவும், தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்கள் உற்பத்தி செய்து தரும் ஒன்றாகவும் மாற்றியது. பெண்கள் கையில் இருந்த வேளாண்மை ஆண்கள் மயமானது. வருவாய் நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் விவசாயியின் வருவாய் பற்றாக்குறையை அதிகரித்தது. இதன் காரணமாக, விவசாயத்தில் இருந்த ஆண்கள் வெளி வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
இப்போது, மீண்டும் வேளாண்மை பெண்மயமாகிறது; ஆனால், வேளாண்மை பழைய தன்மையில் இல்லை. அதிகாலை பனியோ, மழையோ பால் கறப்பதில் தொடங்கும் இவர்களது ஒவ்வோர் நாளும், பின்னர் பண்ணையின் பல்வேறு வேலைகளையும் கவனிக்க வேண்டும்.
இந்த வேலைகளுக்கிடையே காலை உணவு உள்ளிட்ட அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். இப்படி முன்னிரவு வரை வேலைகள் தொடர்ந்து செய்வார். விடுமுறைகள் ஏதுமின்றி 365 நாள்களும், மழை, சுட்டெரிக்கும் வெயில், நடுங்க வைக்கும் பனி என எத்தகைய சூழ்நிலைகளிலும் இவரது தோளில் ஏறியிருக்கும் எந்த வேலைகளும் நிற்காது, நிறுத்தவும் முடியாது. இவர்களின் உழைப்புக்கு எவ்வித மதிப்போ, அங்கீகாரமோ, பொருளாதாரப் பலன்களோ கிடைப்பதில்லை.
பெண்மயமாகும் வேளாண்மையை பெண்களுக்கு ஏற்ற வகையில் கடன், இயந்திரங்கள், வேளாண்மைப் பணிகளுக்கான திறன்கள் உருவாக்கப்பட வேண்டும். சந்தையை மகளிர் எளிதில் கையாளுவதற்கான திறன்களை அளிக்க வேண்டும். இவற்றின் மூலம் பெண் விவசாயிகளுக்கு நிறைவான வாழ்க்கையை உறுதி செய்ய அரசும், கொள்கை வகுப்பாளர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வேளாண் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மொத்த வேளாண் குடும்பங்கள் எண்ணிக்கை 97,69,400 ஆகும். இதில் 10 ஏக்கருக்குள் நிலவுடைமை உள்ள வேளாண்மை நடத்தும் குடும்பங்கள் 25,40,044 (26.4%) மட்டுமே என தமிழ்நாடு திட்டக் குழுவின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த 25 லட்சம் குடும்பங்களில் கால நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்து பெண்களின் மதிக்கப்படாத, கூலியில்லா உழைப்பை அரசு அங்கீகரிக்கும் வகையில் மாதந்தோறுமோ, ஆண்டுக்கு ஓரிரு முறையோ கௌரவமான மதிப்பூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பை, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கிராமப் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதிலும், கிராமங்களின், பண்ணைகளின் வளம் குன்றாத தன்மையை ஊக்குவிப்பதிலும் பெண்களின் பங்கை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் சிதைந்து வரும் வேளாண்மையையும், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக "உலக பெண் விவசாயி' ஆண்டை (2026) அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.