

அண்மைக்காலமாக அரசியல் தளத்தில், கடன் பேசுபொருளாக மாறி இருக்கிறது. எந்த மாநிலம் அதிக கடன் வாங்கி இருக்கிறது என்பது விமர்சனமாகவும் விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் எந்த மாநிலத்திலும் கடன் வாங்காமல் மக்களுக்கான எந்த நலத் திட்டங்களையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
கடன் வாங்காமல் மாநிலங்கள் மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால், மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் அல்லது மின்சார கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனக் கூடுதல் சுமைகளை மக்களுக்குத் தந்து அதன் மூலம்தான் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாவதால் ஆளும் கட்சிகள் இது போன்ற கட்டண உயர்வுகளைத் தவிர்க்க விரும்பும்.
உலகம் முழுவதும் உள்ள எல்லா நாட்டின் அரசுகளும் பல விதங்களில் கடன்களை வாங்குகின்றன. இதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, ஏழை நாடு என்ற வித்தியாசம் கிடையாது. பெரும்பாலான நாடுகள் கடன் வாங்கித்தான் அரசை நிர்வகிக்கின்றன. 2026-27-ஆம் நிதியாண்டில் இந்திய அரசு ரூ.17.20 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசு வாங்கும் கடன் என்பது ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கடன் பெற முடியும். அண்மையில்கூட மூலதனச் செலவுக்கு சிறப்புக் கடன் என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி ரூ. 61 ஆயிரம் கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி இருக்கிறது. இது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனச் செலவுக்காக கடந்த நவம்பர் வரை தமிழகத்துக்கு ரூ. 2,765 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 50 ஆண்டுகள் வட்டியில்லா கடனாக வழங்கும் இந்தத் திட்டம் 2020 -21-ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது வேலைவாய்ப்பு உருவாக்கம், உட்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு விதமாக நிதி விடுவிக்கப்படுகிறது. ஒன்று மாநிலங்களின் முன்னுரிமைத் திட்டங்களுக்கான நிதி. இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. மற்றொன்று நிபந்தனைக்கு உட்பட்ட நிதி. கட்டட விதிகளில் நவீன மாற்றம், நில ஆவணங்களை எண்மமயமாக்குதல், பழைய வாகனங்களை அழித்தல் மற்றும் நிதி மேலாண்மை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் நிலையில் இது வழங்கப்படும்.
இப்போது, தமிழ்நாடு வாங்கிய கடன், உத்தர பிரதேசம் வாங்கிய கடன் இரண்டுமே பேசுபொருளாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி, உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 24 கோடி. இந்திய ரிசர்வ் வங்கி தரும் புள்ளிவிவரங்களின்படி 2025-26-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.9.55 லட்சம் கோடி. உத்தர பிரதேச அரசின் மொத்த கடன் ரூ.8.58 லட்சம் கோடியாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டித்தான் உத்தர பிரதேச அரசைக் காட்டிலும் தமிழக அரசு அதிக அளவு கடன் வாங்கி இருக்கிறது என்கிற விமர்சனம் எழத் தொடங்கி இருக்கிறது.
ஆனால், இந்த ஒப்பீடு தவறு என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தொகை என்ற அடிப்படையில் பார்க்கும்போது உத்தர பிரதேசத்தின் கடன் தொகையைவிட தமிழ்நாட்டின் கடன் அதிகம்தான். என்றாலும், ஒரு மாநிலத்தின் கடன் சுமையை தொகை அடிப்படையில் அளவிடுவது சரியல்ல என்பது அவர்கள் கருத்து. பொதுவாக, ஒரு மாநிலத்தின் கடனை தொடர்புடைய மாநிலத்தின் ஜிடிபி (ஒட்டு மொத்த மாநில உற்பத்தி) என்ற அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும்.
உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறுபவரும், ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுபவரும் ஒரே தொகையை கடன் வாங்கி இருந்தாலும் இருவரது கடன் சுமையும் ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு இந்த அடிப்படையில்தான் கடன் வரம்புகளை நிர்ணயிக்கிறது என்பதுதான் உண்மை.
நிதிப் பற்றாக்குறை, கடன்கள் ஆகியவற்றை வரையறுப்பதற்காக 2003-ஆம் ஆண்டில் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு}செலவு மேலாண்மை என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் கடன் வரம்பையும் நிதிப் பற்றாக்குறை வரம்பையும் நிதி ஆணையங்கள் நிர்ணயிக்கின்றன.
தற்போது அமலில் உள்ள 15-ஆவது நிதி ஆணையம் வரையறுத்த வரம்புகளின்படி 2025 -26-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த கடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் (ஜிடிபி) 28.7 சதவீதமாக இருக்கலாம். தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 26.7 சதவீதமாக இருக்கும்.
உத்தரபிரதேசத்தை பொருத்தவரை இந்தக் கடன் அளவு அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 29.4 சதவீதமாக இருக்கும். இந்த விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் கடன் விகிதத்தைவிட உத்தர பிரதேசத்தின் கடன் விகிதம் அதிகம்.
இந்திய ரிசர்வ் வங்கியும் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் கடன் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அதன்படி பார்த்தால் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டின் கடன் விகிதம் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 30.3 சதவீதமாக இருக்கிறது; உத்தர பிரதேசத்தின் கடன் விகிதம் 31.8 சதவீதமாக இருக்கிறது.
அதே சமயம், ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் கணிசமாக உயர்ந்து இருக்கிறது என்பது உண்மைதான். 2020-21-இல் சுமார் ரூ.5.7 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் மொத்த கடன் 2024-25-இல் சுமார் ரூ.9 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் வெவ்வேறு விதமான கணக்கீடுகள் உள்ளன.
2024-25 -ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த கடனை எடுத்துக் கொண்டால் அதை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் கடன். இது சுமார் ரூ.8.3 லட்சம் கோடியாக இருக்கும். ஆனால், நிதிநிலை அறிக்கைக்கு வெளியில் வாங்கும் கடன்கள் மத்திய திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி நிலுவை ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது 9 லட்சம் கோடியை தொடும்.
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் கடனும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தின் மொத்த கடன் ரூ.5.64 லட்சம் கோடியாக இருந்தது. 2024 -25-இல் இந்தத் தொகை ரூ.8.17 லட்சம் கோடியாக உயர்ந்தது.
எல்லா மாநில அரசுகளும் கடன் சுமையைத் தவிர்க்க தங்கள் நிதி ஆதாரத்தைப் பெருக்க என்ன வழி என்று யோசிக்க வேண்டும். 1967-இல் நான் (கட்டுரையாளர்) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ்நாட்டில் வறட்சி நிலவியது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.
மாநிலங்கள் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியான அணுகுமுறை அல்ல. மாநில அரசு தங்களது நிதி ஆதாரத்தை அதிகரித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும் என்று அன்றைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் எனக்கு அறிவுரை சொல்லி எனது கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
உலகின் எல்லா நாடுகளும் கடன் வாங்குகின்றன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ந்த நாடுகள் உலக நாடுகளுக்கு கடன் வழங்குகின்றன. 23 நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதாவது ஜிடிபியைவிட கூடுதலாக கடன் வாங்கி உள்ளதாகவும் சில நாடுகள் கடனுக்குச் செலுத்துகிற வட்டி அந்த நாடு கல்வி மற்றும் முக்கிய திட்டங்களுக்கு செலவு செய்வதைவிட அதிகமாக இருப்பதாகவும் கடந்த அக்டோபரில் வெளியான சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அரசுகளின் கடன் 110.9 டிரில்லியனாக உயரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு வரம்பு இல்லை. ஆனால், அந்த நாட்டின் ஜிடிபியின் அளவில் 60% வரை கடன் வாங்குவது பாதுகாப்பானது. பொருளாதார வலிமையுடன் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காதான் மிகப் பெரிய கடனாளியாக உள்ளது. சர்வதேச அரசுகளின் கடனில் 34.5% கடன் அமெரிக்கா வாங்கி இருக்கிறது.
சீனா உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து தனது செல்வாக்கை வெளிக்காட்டிக் கொள்கிறது. அமெரிக்காவின் மொத்த கடனில் 9% சீனாவிடம் வாங்கியதுதான். அமெரிக்காவில் நடைபெறும் 2,500 திட்டங்களுக்கு சீனா 200 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. இது தவிர ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சீனாவிடம் கடன் வாங்கியுள்ன. சர்வதேச கடனில் 3% என்ற அளவில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கடன் வாங்குவது தவறு என்று சொல்லவில்லை, அதை எவ்வாறு வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் ஒரு நாடு அல்லது மாநிலம் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறுகிறது என்பதுதான் அதிமுக்கியம்.
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.