

இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2015-ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும், 2016-இல் இயற்றப்பட்ட இந்திய தர நிர்ணய வாரியச் சட்டமும், நுகர்வோர் மேலும் பயன்பெறுவதற்குரிய சட்டங்களாகும்.
தேவையான பொருள்களைத் தேர்வு செய்யும் முறை; அனைத்து வகையான பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான பொருள்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துகொள்ளும் உரிமை; அனைத்து வகையான பொருள்களின் தரம், செயல்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்கான உரிமை; நுகர்வோர் நலன்கள் குறித்து அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை; நுகர்வோர் உரிமைகள் மீறப்படும்போது அதற்கான தீர்வைப் பெறும் உரிமை; நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வழங்கிய உரிமைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் 22% முதல் 25% மக்களிடம் மட்டுமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள், குறைதீர் மன்றங்கள் குறித்தும், அவற்றில் புகார்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும் பலருக்குத் தெரிவதில்லை.
பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகள், ஒப்புதல் கடிதங்கள் போன்றவற்றை பாதுகாக்காததால், புகார்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், இழப்பீடு பெறுவது சிரமம் என்கிற எண்ணமும் உள்ளது. பலரும் புகார் அளிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை வழக்குத் தொடுப்பதில் காட்டுவதில்லை.
புகார்கள் மீது உடனடியாகத் தீர்வு காண்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதைக் கருத்தில் கொண்டே நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது.
ஒரு புகாரை 90 நாள்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், தீர்வு கிடைக்க ஓராண்டிலிருந்து ஐந்தாண்டுகள் வரை ஆகலாம் என்பதே தற்போதைய நிலை. 2024 ஜூலை 31 நிலவரப்படி, நாட்டில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் 50,258 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில், 2024 டிசம்பர் 31 நிலவரப்படி, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுமார் 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பு அமலாக்கம் செய்யப்படுவதைப் பொருத்தே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் வெற்றி அமைகிறது.
நுகர்வோர் பெறும் பொருள்கள், சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் இரண்டு ஆண்டுகள் வரை புகாரைப் பதிவு செய்யலாம். அவை 90 நாள்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாப்பதற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் டிசம்பர் 1986, 1987 முதல் அமலுக்கு வந்தது. 1991, 1993-ஆம் ஆண்டுகளில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன.
இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அதன் செயல்பாடுகளும் முக்கியத்துவங்களும் அதிகரிக்கப்படும் என்கிற நோக்கத்தில் டிசம்பர் 2002-இல் புதிய திருத்தச் சட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, 2003 மார்ச் 15-இல் புதிய பரிமாணங்களுடன் அமலுக்கு வந்தது. இதுபோல, அறிமுகப்படுத்தப்பட்ட விதிகள் "நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்' என்று அழைக்கப்படுகின்றன.
நுகர்வோர் பிரச்னைகள், சேவைக் குறைபாடுகள், வணிக நடைமுறைகள், நேர்மையற்ற வணிக முறைகள் போன்றவற்றுக்கு தீர்வு தரும் சட்டமாக நுகர்வோர் சட்டங்கள் உள்ளன. நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்தாரரே புகாரைத் தாக்கல் செய்து அவரே வாதிட்டு நீதி பெற முடியும்.
நுகர்வோர் பெறும் பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது புகார்கள் இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும்.
மேலும், எம்ஆர்பி குறிப்பிடாமல் பொருள்களை விற்பது, எம்ஆர்பி-க்கு அதிகமாக பொருள்களை விற்பது, சேவைகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தில் சரியாக காப்பீடுகள் வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவ சேவைகளில் ஏற்படும் குறைகள், வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் போன்றவற்றுக்கு குறைதீர் ஆணையம் மூலம் நிவாரணம் பெற முடியும்.
நுகர்வோரைக் குறிவைத்து சந்தைகள் இயங்குவதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நுகர்வோரைக் கவரும் விதத்தில் வியாபார உத்திகளைக் கையாண்டு, விற்பனையை அதிகரிக்கச் செய்து லாபம் பார்ப்பதை எல்லா நிறுவனங்களும் செய்து வருகின்றன. இந்த வலையில் நுகர்வோர் விழாமல் தரமான, தேவையான பொருள்களை வாங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
வாங்கும் பொருள்களுக்காக ஏதேனும் ஆவணங்களில் கையொப்பமிட வேண்டியிருப்பின், அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துப் பார்த்த பிறகு கையொப்பமிடுவது எதிர்காலத்தில் தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்காது. மேலும், விலை மிகுந்த பொருள்களை வாங்கியதும் அதற்கான ரசீதுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது நல்லது. நுகர்வு கலாசாரத்துக்குள் சிக்காமல் தேவையான நேரத்தில், தேவையான பொருள்களை வாங்கி புத்திசாலியான நுகர்வோராக திகழ வேண்டும். சேவைக் குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்க நுகர்வோர் மன்றங்களின் கதவுகளைத் தட்டவும் தயங்கக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.