

பழ. கருப்பையா
இந்திய அரசியல் நடவடிக்கைகளிலே மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்காலத்திலும், அடுத்துவரும் காலத்திலும் ஏற்படுத்தத்தக்கது மோடி-டிரம்ப் ஒப்பந்தம்! இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மிகவும் பதறிவிட்டார். நாடாளுமன்றம் அமளிக் காடானது!
லெனின் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் சோவியத்தோடு ஒன்றிணைந்த நாடுகள், விரும்பும் காலத்தில் வெளியேறிக் கொள்ளலாம் என்னும் பிரிவு இருந்தது. சோவியத் நாடு உடைந்தபின் ருசியா நீங்கலாக, எல்லா நாடுகளும் வெளியேறிவிட்டன! ருசிய இசுடாலினைவிட மோசமான வல்லாட்சியராக புதின் ருசியாவில் உருவாகிய பிறகு, உக்ரைனின் கனிம வளம் நிறைந்த பகுதி புதினை உறுத்தத் தொடங்கியது.
இப்படி ஏதாவது நிகழும் என்று உக்ரைன் முன்கூட்டியே நேட்டோ நாடுகளின் அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது. அந்த அமைப்பு நம்முடைய "பெரிய அண்ணன்' டிரம்ப் தலைமையிலுள்ள அமைப்பு! அந்த அமைப்பில் தனக்குப் பக்கத்து நாடான உக்ரைன் உறுப்பினராக இருந்தால், ருசியாவுக்குப் பாதுகாப்பில்லை என்று சண்டைக்குப் புறப்பட்டார் புதின்.
நீ சோவியத்திலிருந்து பிரிந்துவிட்டதால், கனிம வளம் உன்னோடு வந்துவிட்டது; ஆகவே உன்னை அடிமைப்படுத்திக் கனிம வளத்தைச் சுரண்டுவேன் என்றா சொல்வார் புதின்?
இது எப்படி இருக்கிறது என்றால் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு நிதியே தருவதில்லை; அதைத் தராத மோடிக்குக் கூட்டாக இருக்கிறார் எடப்பாடி! ஆகவே, முதலில் எடப்பாடியைத் தோற்கடிக்க வேண்டும் என்று நம் முதலமைச்சர் இசுடாலின் சொல்வதுபோல் இருக்கிறது!
ஆனாலும், மோடி பணமே தருவதில்லை; அத்தகைய மோடியோடு இத்தகைய எடப்பாடி எப்படிச் சேரலாம்? என்று நம் முதலமைச்சர் இசுடாலின் பகுத்தாராய்ந்து பேசுவதுபோல, ருசிய அதிபர் புதினும் நான் கனிம வளத்தைச் சுரண்டினாலும், நீ எப்படி எதிரியான டிரம்ப்போடு சேரலாம் என்று போரை விரிவுபடுத்துகிறார்!
டிரம்ப் உக்ரைனைக் காப்பாற்ற பழைய காலம்போல் ருசியா மீது போர் தொடுக்காமல், ருசியாவை எப்படி முடக்கி உக்ரைனைக் காப்பாற்றுவது என்பதற்குப் புது யோசனை செய்தார்!
மூன்றாண்டுகளாகப் போரை ருசியா நீடித்து நடத்த முடிவதற்குக் காரணம் அதனுடைய எண்ணெய் வளம்! அந்தக் கச்சா எண்ணெய்யை இந்தியா போன்ற நாடுகள் வாங்குவதால், கிடைக்கின்ற பணத்தை வைத்துத்தான், புதினால் போரை நீடித்து நடத்த முடிகிறது! ஆகவே, இந்தியா ருசியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று மோடியைக் கூப்பிட்டுச் சொன்னார் டிரம்ப்.
அதற்கெல்லாம் கேட்பாரா மோடி! தொடர்ந்து எண்ணெய் வாங்கினார்; புதினை இந்தியாவுக்கு வரவழைத்து சிவப்பு ரத்தினக் கம்பள வரவேற்பும் அளித்தார். டிரம்ப்புக்கு உச்சிக்கு ஏறிவிட்டது! என்ன இருந்தாலும் "பெரிய அண்ணன்' அல்லவா!
இப்போது இரண்டு வழி இருக்கிறது டிரம்ப்புக்கு! பாக்கித்தானின் தலைமை இராணுவ அதிகாரியை அழைத்துக் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு விருந்து அளித்தார்! பாக்கித்தானைத் தூண்டிவிட்டு, அதற்கு ஆயுதமும் பணமும் கொடுத்து, இந்தியாவின் மீது போர் தொடுப்பது! தான்தான் "பெரிய அண்ணன்' என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவது!
இன்னொரு வகை இரத்தச் சிந்தலும், போரும் இல்லாமல், அமெரிக்கக் கருவூலம் பெருமளவுக்குக் கரையாமல், இந்தியாவுக்கு வரியைத் "தலைக்கு மேல் போட்டு' இந்தியாவுக்குத் தான்தான் "பெரிய அண்ணன்' என்பதை உணர்த்துவது!
இந்த இரண்டாவது முறையை டிரம்ப் கையாண்டது மூன்றாவது உலகப் போர் போன்றவை உருவாகாமல் தடுப்பதற்குரிய புதிய முறை! ஆதிக்க மனப்பான்மை மாறவில்லை என்றாலும், ஆதிக்க முறை மாறி இருப்பது காலநிலை வளர்ச்சிதான்!
எப்போதும் போல் "பெரிய அண்ணனின்' ஆணவம் இருக்கும்; ஆனால் இரத்தச் சிந்தல் இருக்காதுதானே! ஏற்கனவே சீனா நமக்கு ஒன்பது துவாரத்திலும் குடைச்சல் கொடுக்கும்போது, ஒரு பாக்கித்தான் என்னும் "பிராக்சியை' வேறு வைத்துக் கொண்டு குடைவது நமக்குக் கேடுதானே!
அந்த வகையில் டிரம்ப் என்ன செய்தார்? இந்தியப் பொருள்கள் "கோவணத்திலிருந்து, கணிணி "சிப்' வரை எதுவாக இருந்தாலும் இருபத்தைந்து விழுக்காடு வரி;' ருசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காகக் கூடுதலாக இருபத்தைந்து விழுக்காடு வரி; ஆக ஒரு ரூபாய் பொருளுக்கு அரை ரூபாய் வரி என்று ஆக்கிவிட்டார்!
முதலில் டிரம்ப் கிறுக்குத்தனமாக ஏதோ செய்வது போல்பட்டது! ஆனால், நாட்கள் உருள உருள, இந்தியாவின் குடல் வற்றத் தொடங்கியது!
ஒரு காலத்தில் சந்திரசேகர் தலைமையமைச்சராக இருந்தபோது, நம்முடைய கோமதி அக்கா சேட்டு கடையில் தாலிச் சங்கிலியை அடைமானம் வைத்ததுபோல, இந்திய அரசு தன்னிடமிருந்த தங்கத்தைக் கப்பலில் ஏற்றி, அயல் மண்ணில் அடைமானம் வைத்தது!
அங்கிருந்து இன்றைக்கு அன்னியச் செலாவணி அமெரிக்க டாலரை மிசினில் எண்ணுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம்!
அமெரிக்காவோடு இசைந்து போகாத நிலையில் நம்முடைய உற்பத்தி தேங்கும்! அமெரிக்க டாலர் சந்தையை, நாம் இலங்கையிலும், தாய்லாந்திலும் பெற முடியாது!
திருப்பூரும், ஆம்பூரும் படுத்து விடும்; சென்னைத் துறைமுகம் காற்றாடும்!
குசராத்திலிருந்து வைரமும், பம்பாயிலிருந்து பல்பொருள்களும் ஏற்றுமதி ஆகாது!
சவப் பெட்டி தயாரிக்கின்ற எவனும் அதைத் தனக்காகத் தயாரிப்பதில்லை. பிறருக்காகத்தான் தயாரிக்கிறான்! அப்படியே தேவைப்பட்டாலும் அவனுக்கு ஒரு பெட்டிதான் தேவைப்படும்! அதற்குத் தொழிற்சாலை தேவை இல்லை!
அதே போல் நம்முடைய உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி ஆவதால்தான், மாட்டுவண்டி மிதிவண்டியாகி, இப்போது விசை மிதிகள் (மோட்டார் சைக்கிள்கள்) சாலை கொள்ளாமல் போகின்றன!
நான் நாடோடி மன்னன் பார்க்க என்னுடைய தாயாரிடம் எட்டணா வாங்கக் கெஞ்சிக் கூத்தாடியதுபோல் அல்லாமல், என்னுடைய பேத்தி படம் பார்க்க இருநூறு ரூபாய் எடுத்துச் செல்கிறாள்! அதனால்தான் விசய் தனி விமானத்தில் தில்லி செல்ல முடிகிறது!
கோட்டாவை ஒழி; லைசென்சை ஒழி; பெர்மிட்டை ஒழி; சந்தையைத் திற; அது தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும்; செல்வம் வளரும் என்றான் மூதறிஞன் இராசாசி! அவனைக் குடிகேடி என்றார்கள்; ஆச்சாரியார் என்றார்கள்! குல்லுகப்பட்டர் என்று கேலி செய்தார்கள்.
அந்த அறிஞன் சொன்னதாகக் காட்டிக் கொள்ளாமல், மன்மோகன் சிங்கும் ஆலுவாலியாவும் பெர்மிட்களை ஒழித்துச் சந்தையைத் திறந்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி விதை அவர்கள் போட்டதுதான்!
விதை விழுந்துவிட்டது; அது மரமாகிக் கொண்டிருக்கும் நிலையில் டிரம்ப்பின் ஐம்பது விழுக்காட்டு வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியை ஆட்டம் காணச் செய்துவிட்டது.
நல்ல எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி என்ன சொல்லியிருக்க வேண்டும்? அமெரிக்காவோ டிரம்ப்போ நமக்கு முக்கியமில்லை; அதனுடைய சந்தைதான் முக்கியம்; ருசியாவிடம்தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்? அவன் என்ன சும்மாவா தருகிறான்? பொய் மானம் பாராட்டத் தேவை இல்லை; திருப்பூரும், ஆம்பூரும், பம்பாயும், குசராத்தும் படுத்துவிடும் என்று சொல்லி நம்முடைய வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள யோசனை சொல்லியிருக்க வேண்டும்! ஆனால் பாரத மாதாவை விற்றுவிட்டார் மோடி என்று சொல்லி நம்மை அதிர வைத்துவிட்டார்!
டிரம்ப்போடு இணக்கப்படுத்திக் கொண்டுவிட்டார் மோடி என்றவுடன், இந்தியாவின் பங்குச் சந்தை வேட்டியைத் தலையில் கட்டிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது! சந்தையின் பிரதிபலிப்புதான் முக்கியம்! ராகுலின் பிரதிபலிப்பு அல்ல!
தனி மனிதனுக்குத்தான் இந்தப் பொய் மானம், பகட்டுப் பேச்செல்லாம் பெரிதாகத் தெரியும்! இப்போது இரண்டே முக்கால் இலட்சத்திற்கு அல்ல; இரண்டே முக்கால் இலட்சம் கோடிக்கு அமெரிக்கத் துறைமுகம் திறந்துவிடப்பட்டிருக்கிறது!
ஐம்பது விழுக்காடு வரி பதினெட்டு விழுக்காடு வரியாகிவிட்டது! முன்பை விடப் பல மடங்கு குறைவு. டிரம்ப் பெரிய அண்ணன்தான்! இது புதிதா? குன்னியூர் சாம்பசிவ ஐயர்களும், கபித்தலம் மூப்பனார்களும் பண்ணையார்களாக இருந்த ஊரில்தானே வாழ்கிறோம்...
பாரத மாதாவை விற்று விட்டார் மோடி என்னும் வாதத்திற்கு நியாயம் கற்பிக்க நாடாளுமன்றத்தில் படாதபாடு பட்டிருக்கிறார் ராகுல்! வங்கதேசப் பருத்தி ஆடைகளுக்கு சுழி விழுக்காடு (0%) வரி; இந்தியாவுக்கு 18 விழுக்காடு வரியா என்று கேட்கிறார் ராகுல்!
வங்கதேசம் அமெரிக்காவிலிருந்து மூலப்பொருளான பருத்தியை வரவழைத்து, அதைத் துணியாக்கிக் கூலிக்கு வேலை செய்கிறது; ஆகவே அதற்கு வரி இல்லை!
நாம் நம்நாட்டில் விளையும் பருத்தியில், முழுமை அடைந்த உற்பத்திப் பொருளாக, ஆடைகளாக அவற்றை மாற்றிக் கொடுக்கிறோம். ஆகவே, பொருளுக்கு வரி விதிக்கிறார் டிரம்ப்! அதுவும் பதினெட்டு விழுக்காடு மட்டும்!
நம்முடைய பருத்தியும் விலையாகிறது; உற்பத்திப் பொருளும் விலையாகிறது! இதிலே எங்கே நாட்டை அடகு வைத்துவிட்டார் மோடி!
பொய்மானம் பாராட்டாமல், ருசிய எண்ணெய்யைப் புறந்தள்ளி, இந்தியாவின் பொருள் உற்பத்திக்கும் சந்தைக்கும் டிரம்ப்போடு இணங்கிப்போய் அல்லது மாற்றார் சொல்வது போல மடங்கிப்போய், மோடி எடுத்த முடிவு நாட்டை நிமிர்த்துவதற்கு எடுத்த முடிவு!
மோடி மடங்கியது நாட்டுக்காக; நாடு நிமிரும்போது மோடியும் நிமிர மாட்டாரா?
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.