தமிழ்த் தாத்தாவும் தினமணியும்...

தமிழ்த் தாத்தாவும் தினமணியும்...
Updated on
3 min read

"பழந்தமிழ் இலக்கியத் தொண்டிற்குப் பிள்ளையார் சுழி போட்டால், அது உ.வே. சாமிநாதையரின் "உ' என்ற எழுத்தில்தான் தொடங்கும். இன்று பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவருவதற்கு வித்திட்டவர் அவரே.

ஏட்டுச் சுவடிகளில் ஏறக்குறைய அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் இலக்கியப் புதையலைத் தேடித் தேடிச் சேகரித்துப் பதிப்பித்த பெருமை அவருடையது. அவரது தளராத ஊக்கத்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, புறநானூறு, குறுந்தொகை போன்ற பற்பல நூல்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுப் பதிப்பாக வெளிவந்தன.

1855-ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிறந்த உ.வே.சாமிநாதையர், 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அகவை 87-இல் முதுமை காரணமாகக் காலமானார். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெரிய பெருமை அவருடையது.

"கண்ணுஞ் சடையாமல், கையுந் தளராமல்

உண்ணப் பசிஎழுவ(து) ஓராமல் -

எண்ணியெண்ணிச்

செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த

திருத்தொண்டுக்(கு)

இந்த நிலத்(து) உண்டோ இணை?'

என்ற தமிழ்த் தாத்தா குறித்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நேரிசை வெண்பாவில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் உண்மையே.

வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் "வியாசர் விருந்து' என்ற தலைப்பில் நூலாக எழுதிய மூதறிஞர் ராஜாஜி, உ.வே. சாமிநாதையரின் மாபெரும் தமிழ்த் தொண்டை மெச்சி அவரைத் "தமிழ் வியாசர்' என்றே பாராட்டியுள்ளார்.

உ.வே.சா.வின் மாபெரும் தமிழ்த் தொண்டை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் உ.வே.சா. பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

உ.வே.சா.வின் பிறந்த நாள் "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளா'கக் கொண்டாடப்படும் என இரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தாத்தா தன் வாழ்க்கைச் சரிதத்தை, "என் சரித்திரம்' என்ற பெயரில் 1940-ஆம் ஆண்டு ஜனவரி முதல், ஆனந்த விகடனில் தொடராக எழுதத் தொடங்கினார். அப்போது, விகடனின் ஆசிரியராக இருந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அன்பான வற்புறுத்தல் மற்றும் ரசிகமணி டி.கே.சி. (டி.கே.சிதம்பர முதலியார்) போன்றோருடைய தொடர்ச்சியான வேண்டுகோள்- இவையே தமிழ்த் தாத்தாவை "என் சரித்திரம்' எழுத வைத்தன. 1942-ஆம் ஆண்டு மே மாதம் வரையில் அச்சரிதம் தொடராக வெளிவந்தது.

மாபெரும் தமிழ்ப் பண்டிதரான உ.வே.சா.வின் அந்தத் தன் வரலாறு, பாமரர்க்கும் புரியும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மொழிசார்ந்த மேதைமையின் உச்சம் என்பது அதை எளிமையாகக் கையாள்வதில்தான் உள்ளது என்ற உண்மையை அந்த நூலின் நடை உணர்த்துகிறது. உ.வே.சா.வின் சமகாலத்தின் திரிக்கப்படாத வரலாற்றைச் சொல்லும் ஆவணமாக அது இலக்கிய உலகில் நிலைபெற்று விட்டது.

சென்னையில் ஹிந்தி பிரசார சபையில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். அப்போது, கல்கி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதன் பேரில், மகாத்மா காந்திக்கு தமிழில் ஒரு வாழ்த்து மடல் எழுதி வாசித்தார் உ.வே.சா.அந்தத் தருணத்தில் மகாத்மா காந்திக்கு உ.வே.சா.வை அறிமுகப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி. காந்தித் தாத்தா சிரித்தபடியே தமிழ்த் தாத்தாவிடம் "எனக்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் உங்களிடம் தமிழ் கற்க ஆசைப்படுகிறேன்!' என்று சொன்னது அப்போதுதான்.

இளம்வயதில் உ.வே.சா. பாட்டுக் கற்றுக் கொண்டிருந்தார். பல பாடல்களைப் பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். ஆனால், ஒருதுறை சார்ந்தவர்கள் அந்தத் துறையில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது உ.வே.சா.வின் குரு மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கொள்கை. தனது ஆசானின் கொள்கைக்கிணங்க உ.வே.சாமிநாதையர் தனது சங்கீதப் பயிற்சியை நிறுத்திக்கொண்டதாகப் பதிவு செய்துள்ளார்.

உ.வே.சா.வின் பதிப்புப் பணியில் பெரிதும் உதவியவர் அவரது முதன்மைச் சீடரான வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்தான். உ.வே.சா. பதிப்பித்த "தக்கயாகப் பரணி' நூல் முன்னுரையில், "இந்நூலைப் பதிப்பிக்கும்காலை உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்புநோக்குதல் போன்ற பணிகளில் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி.வா. ஜகந்நாத ஐயரின் உழைப்பு பாராட்டத்தக்கது' என எழுதி அவர் உழைப்பைக் கௌரவித்துள்ளார் உ.வே.சா.

தினமணி முன்னாள் ஆசிரியரும் தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன், தமிழ்த் தாத்தாவின் பேரன்பர். ஒருமுறை சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ.வே.சா. நூலகத்துக்கு ஐராவதம் சென்றபோது, அங்கே ஓர் ஓரமாக ஒரு சாக்கு மூட்டை வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்.

"மூட்டையில் என்ன இருக்கிறது? பழைய ஓலைச் சுவடிகளா?' என விசாரித்தார். அதனுள் இருந்தது ஓலைச் சுவடிகள் அல்ல, தமிழ்த் தாத்தாவின் மார்பளவு வெண்கலச் சிலை!

"இது ஏன் இப்படிக் கேட்பாரற்றுக் கிடக்கிறது? ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதில் பீடம் நிறுவி இந்தச் சிலையை அந்தப் பீடத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டியதுதானே?' எனக் கேட்டார் ஐராவதம். பிறகுதான் தெரியவந்தது அதற்குரிய நிதிநிலை உ.வே.சா. நூலகத்திடம் இல்லை என்பது.

இல்லம் திரும்பிய ஐராவதம் சிந்தனையில் ஆழ்ந்தார். மறுநாள், "பீடம் ஏறக் காத்திருக்கும் தமிழ்த் தாத்தா!' என்ற தலைப்பில் "தினமணி'யில் சிறப்புச் செய்தி வெளியானது.

தமிழன்பர்களான "தினமணி' வாசகர்களின் பேராதரவால் விறுவிறுவெனக் கணிசமான நிதி சேர்ந்தது. அந்த நிதியுதவியால் உ.வே.சா. நூலக வளாகத்தின் முகப்பில் ஓர் அழகிய பீடத்தில் உ.வே.சா.வின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையை நிறுவிய பிறகு அதைக் கொண்டாடும் வகையில் ஒரு விழாவும் நடத்தப் பட்டது.

பிறகு ஒரு விந்தையான சிக்கல் எழுந்தது! கடந்த காலத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி மகாகவி பாரதியாருக்கு எட்டயபுரத்தில் ஒரு மணிமண்டபம் எழுப்பினார். அதற்காக அவர் கல்கி வாசகர்களிடம் நிதியுதவி வேண்டினார். வாசகர்கள் நன்கொடையை வாரி வாரி வழங்கினார்கள். "தயவுசெய்து இனிமேல் யாரும் நிதி அனுப்ப வேண்டாம், தேவைக்குமேல் நிதி சேர்ந்துவிட்டது' என அறிவிப்புப் போட்டு நிதி வருகையை நிறுத்த நேரிட்டது.

"தினமணி'யில் ஐராவதம் மகாதேவனுக்கும் அதுபோன்ற ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ்த் தாத்தாவுக்குப் பீடம் நிறுவிய பின்னரும் "தினமணி' வாசகர்கள் அனுப்பிய நிதி மீதமிருந்தது. இந்த மீதமுள்ள நிதியைப் பொருத்தமான வகையில் பயன்படுத்தியாக வேண்டுமே?

உ.வே.சா. அடியார்க்கு நல்லார் உரையுடன் பதிப்பித்த சிலப்பதிகாரம் மறுபதிப்புக் காணாமல் இருந்ததையும் தேவைப்படுவோருக்கு விலைக்குக் கொடுக்க ஒரு பிரதிகூட இல்லாத நிலையையும் அறிந்தார் ஐராவதம்.

"தினமணி' வாசகர்களின் கொடையில், எஞ்சிய நிதியில் அரிய நூலான உ.வே.சா.வின் ஆராய்ச்சிக் குறிப்புகளோடு கூடிய சிலப்பதிகாரத்தை மறுபதிப்புச் செய்யுமாறு ஆலோசனை கூறினார்.

அவ்விதமே உ.வே.சா. பதிப்பித்த சிலப்பதிகாரம் மறுபதிப்புக் கண்டது. இன்றும் அந்த நூலை வாங்கும் வாசகர்கள், "தினமணி' வாசகர்களுக்கு அதன் முன்னுரையில் நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சிறிது காலம் சென்றதும், உ.வே.சா. ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்த அரிய சங்க நூலான குறுந்தொகையும் மறுபதிப்புக் காணாமல் இருப்பதை ஐராவதம் அறிந்தார். மிக முக்கியமான நூலான அது மறுவெளியீடு காண, தாமே ஒரு தொகை கொடுத்து மீண்டும் பதிப்பிக்கச் செய்தார். "க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் மூலம் முழுமையான செம்மையான பதிப்பாக குறுந்தொகை மறுவெளியீடு கண்டது.

அதன் வெளியீட்டு விழாவில் உடல்நலக் குறைவு காரணமாக ஐராவதம் மகாதேவன் கலந்துகொள்ள இயலவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி அவ்விழாவில் பேசும்போது, "குறுந்தொகை வெளிவரப் பெருந்தொகை கொடுத்த பெருந்தகை' என ஐராவதம் குறித்துப் பாராட்டிப் பேசினார்.

உ.வே.சா. நூல் நிலைய ஆவணக் காப்பாளர் உத்திராபதி, ஐராவதம் மகாதேவனின் அன்பர் ஏ.எம். சுவாமிநாதன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் ஐராவதம் இல்லத்துக்கே வந்து அவரைச் சந்தித்து அவருக்குச் சந்தன மாலை அணிவித்து, குறுந்தொகையின் புதிய பதிப்புப் பிரதியை அவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

தமிழ்த் தாத்தாவுக்கும் தினமணிக்கும் "தினமணி' வாசகர்களுக்கும் உள்ள தொடர்பு நெடியது. இப்போதும் தமிழ்த் தாத்தாவின் பெருமையைப் பொருத்தமான தினங்களில் தொடர்ந்து கொண்டாடி வருகிறது "தினமணி'.

"பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே!'

என்று தமிழுள்ளளவும் உ.வே.சா.வின் புகழ் நிற்கும் என மகாகவி பாரதி பாடிய வாழ்த்துப் பாவின் வரிகள் என்றென்றும் தமிழ்த் தாத்தாவின் பெருமையைப் பேசும்.

இன்று உ.வே.சா.வின்

172-ஆவது பிறந்த நாள்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com