

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை, ஐரோப்பிய நாடுகள் மருத்துவம் என்றால் அது பெரும்பாலும் அலோபதி மருத்துவம், மருந்து உற்பத்தி ஆலை, அறுவை சிகிச்சை என்றே சுழன்றது. மருந்து என்பது நோயைக் குணப்படுத்த ஒரு கருவி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
21-ஆம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்கள் நிறைவடையும் வேளையில், அந்த நம்பிக்கை மாறத் தொடங்கியது.
மருந்துகள் நோயை மட்டுப்படுத்தின; ஆனால், முழுமையாகக் குணப்படுத்தவில்லை என்பதை ஐரோப்பிய மக்களில் பலரும் உணரத் தொடங்கினர். நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா அல்லது நோயில்லாதவனாக வாழ்கிறேனா என்ற இந்தக் கேள்வியே, சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளுக்கு ஐரோப்பியாவை கதவுகளை மெதுவாகத் திறக்க வைத்தது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டும் ஐரோப்பியர்களுக்கு புதிதானவை அல்ல. காலனிய காலத்திலிருந்தே இந்த மருத்துவ முறைகள் குறித்து சில குறிப்புகள் இருந்தன. ஆனால், அவை நாட்டுப்புற மருந்துகள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அடையாளங்களுடன் மட்டுமே பார்க்கப்பட்டன; இன்று அந்த நிலை மாறியுள்ளது.
நோயைக் குணப்படுத்துவதற்காக மட்டும் அல்ல; வாழ்வைச் சீரமைப்பதற்காக இந்த மருத்துவ முறைகளை ஐரோப்பியர்கள் அணுகுகின்றனர். உணவு மருந்தாகக் கருதப்படுகிறது; உறக்கம் சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது; மனநிலை உடல் நலத்தின் அடிப்படையாக உணரப்படுகிறது.
இந்தக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் வலியுறுத்தப்பட்டன. அவை ஐரோப்பிய அறிவியல் மொழியில் தற்போது மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு அண்மைக்காலமாக மேலோங்கி வருவதற்கு வாழ்க்கை முறையும், நோய்களின் பெருக்கமும் முதன்மையான காரணம். ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துவரும் நோய்கள் பெரும்பாலும் தொற்று நோய்கள் அல்ல. மனஅழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் போன்றவைதான்.
இவற்றுக்கு அலோபதி நிரந்தரத் தீர்வை வழங்க முடியாமல் திணறுகிறது. அங்கேதான், உடல், மனம், உணவு வாழ்க்கை முறை என்ற முழுமையான பார்வையை முன்வைக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் கவனம் பெறுகின்றன.
ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற துறையின் கீழ் கிழக்கத்திய மருத்துவ முறைகள் பாடமாக கற்பிக்கப்படுகின்றன. சித்த மருத்துவ மூலிகைகள், எண்ணெய்கள் உள்ளிட்டவை மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.
சித்த, ஆயுர்வேத மருத்துவமுறைகளை ஐரோப்பியர்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றின் அறிவியல் அடித்தளம், தங்களின் வாழ்க்கை முறைக்குப் பொருந்துமா என்பது குறித்து விவாதித்த பிறகே ஏற்றுக் கொண்டார்கள். இதனால், இந்த மருத்துவ முறைகளும் ஐரோப்பிய சூழலுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு பெற்றுள்ளன. அதே நேரத்தில், அவற்றின் தத்துவ அடிப்படை "மனிதன் இயற்கையின் ஓர் அங்கம்' என்ற கருத்தை ஆழமாகப் பதிவுசெய்கிறது.
இதுவே ஒரு பெரிய பண்பாட்டு மாற்றத்தின் தொடக்கம். யோகா, தியானம் போன்றவை ஐரோப்பிய மனவலைகளில் ஏற்பட்ட அமைதியான புரட்சி என்றே கருதலாம்.
தற்போது, லண்டனில் செயல்பட்டு வரும் பெருநிறுவன அலுவலகங்களில், பாரிஸின் பள்ளிகளில், பெர்லினின் மருத்துவமனைகளில் யோகா வகுப்புகள், தியான அமர்வுகள் நடைபெறுகின்றன.
ஐரோப்பியர்களுக்கு எல்லாவற்றையும் தொழில்நுட்பம் வேகமாக வழங்குகிறது; ஆனால், அவர்களது மனம் அதற்கேற்ப அமைதியாக இல்லை. அப்போதுதான் யோகாவும், தியானமும் வித்தியாசமான குரலாகக் கேட்டன. தொடக்கத்தில் யோகாசனம் என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் பயிற்சியாகவும், அதனால் எடைக் குறைப்பு, உடலில் மிடுக்கு போன்ற பலன்கள் கிடைப்பதாகவும் கூறப்பட்டது. யோகாசனத்தை தொடர்ந்து கடைப்பிடித்த போது, அந்தக் கருத்துகள் மாறி பலன்கள் தெரியத் தொடங்கின.
ஐரோப்பாவில் தியானம் பரவிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. அது எந்த மதத்தையும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. கடவுள், புனிதம், மோட்சம் போன்ற சொற்கள் இல்லாமலேயே தியானம் மனிதனை தன்னுள் திருப்பியது. "மனம் உன் கட்டுப்பாட்டில் இல்லை; அதைக் கவனிப்பது மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளது' என்ற எண்ணமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது யோகா, தியானம் தனிநபர் விருப்பமாக மட்டுமல்ல, நிறுவனத் தீர்மானமாகவும் மாறியுள்ளது.
யோகா, தியானம் ஆகியவை ஐரோப்பாவில் பரவியபோது, அவை கிழக்கத்திய அடையாளங்களை முழுவதுமாகத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், முழுமையாக மாற்றப்படவும் இல்லை. கிழக்கின் அனுபவ ஞானமும், மேற்கின் பகுப்பாய்வு அறிவியலும் சந்திக்கும் இடம். இதுதான் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல், ஐரோப்பிய கலாசாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
தமிழர் உணவு மரபு ஐரோப்பியர்களுக்கு ஒரு புதிய உணவு தத்துவத்தை அறிமுகப்படுத்தியது. உணவு என்பது உடலைச் சீரமைக்கும் வழி; அது பருவநிலை, காலநிலை, உடல்நிலை சார்ந்தது என்பதை உணரத் தொடங்கினர். சாம்பார், ரசம், கஞ்சி, இட்லி போன்ற உணவுகள் இன்று அவர்களின் வாராந்திர உணவுப் பட்டியலில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
தாவர உணவு முறை குறித்த விழிப்புணர்வில், தமிழர்களின் உணவு மரபு முக்கியப் பங்காற்றியுள்ளது. மஞ்சள், இஞ்சி, வெந்தயம், பெருங்காயம் போன்றவை வெறும் சமையல் பொருள்களாக அல்ல; ஆரோக்கியம் சார்ந்த பொருள்களாகப் பார்க்கப்படுகின்றன.
புலால் உண்ணாமல் வாழ முடியுமா என்ற கேள்விக்கு தமிழர்களின் உணவுப் பழக்கமும், அவர்களின் ஆரோக்கியமும் பதிலாக அமைந்தன. இதைத் தொடர்ந்தே, தாவர உணவு முறைகளை ஒரு மதக் கட்டுப்பாடாக அல்லாமல், ஓர் அறிவார்ந்த வாழ்க்கைத் தேர்வாக பார்க்கும் மனநிலையை ஐரோப்பியர்கள் மத்தியில் உருவாக்கியது.
தமிழர்களின் குடும்ப அமைப்பில் வீட்டில் மூத்தோர் இருப்பது; குழந்தைகளின் வளர்ப்பில் குடும்பத்தின் பங்கு; பண்டிகைகள், சடங்குகள் மூலம் உருவாகும் சமூக இணைப்பு போன்றவை சுமை அல்ல; குடும்பத்துக்கான பாதுகாப்பு வலை என்ற எண்ணத்தை மெதுவாகத் தோற்றுவித்தது.
பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் இன்று பல ஐரோப்பிய நகரங்களில் பொதுவெளியில் கொண்டாடப்படுகின்றன. இவை தமிழர்களுக்கான நிகழ்வுகளாக மட்டுமல்ல; பன்முக கலாசார அனுபவங்களாக மாறியுள்ளன. தமிழர்கள் ஐரோப்பிய கலாசாரத்தை மாற்றவில்லை; அதில் ஒரு புதிய அடுக்கை சேர்த்துள்ளனர்.
ஐரோப்பிய சமூகத்தில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்களை தனித்தனியாகப் பார்த்தால், அவை சிதறிய சம்பவங்களாகத் தோன்றலாம். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை மீதான ஆர்வம் ஆரோக்கிய போக்காகவும், யோகா-தியானம் ஒரு வாழ்க்கை முறை போக்காகவும், புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் குடியேற்றக் கலாசார அம்சமாகவும் புரிந்து கொள்ளப்படலாம். இந்த மூன்றையும் ஒரே கண்ணோட்டத்தில் இணைத்துப் பார்த்தால், அது மனிதனை மீண்டும் மனிதனாகக் காணும் முயற்சி என்பது புலனாகும்.
இயற்கையின் ஓர் அங்கம் மனிதன்; இயந்திரத்தின் பாகம் அல்ல என்ற சிந்தனை உலகில் மெதுவாக வேரூன்றிக் கொண்டிருக்கும் புதிய மனநிலை. ஆரோக்கியம் என்பது நோயின்மை மட்டும் அல்ல; மன அமைதி, சமூக உறவு, உணவு, உறக்கம், வேலை–ஓய்வு சமநிலை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய நிலை என்ற புரிதல் வலுப்பெறுகிறது. வாழ்க்கை என்பது வேகமாக ஓட வேண்டிய போட்டி அல்ல; உணர்ந்து வாழ வேண்டிய ஓர் அனுபவம் என்ற எண்ணம் பரவுகிறது.
இந்த மாற்றம் எந்த ஓர் அரசியல் இயக்கத்தாலும், மத பிரசாரத்தாலும், கலாசார திணிப்பாலும் உருவாகவில்லை. அனுபவம், நடைமுறை வாழ்க்கை வழியாக நடைபெற்ற மாற்றம்.
ஒரு ஐரோப்பியர் சாம்பாரை உணவில் சேர்த்துக் கொள்கிறார்; உடல் இலகுவாக இருக்கிறது. ஓர் அலுவலக ஊழியர் தியானம் செய்கிறார்; மனம் சீராகிறது. ஓர் அயலவர் தமிழர் குடும்பத்தைப் பார்க்கிறார்; தனிமை தவிர்க்கப்பட முடியும் என்று உணர்கிறார். இவை சிறிய அனுபவங்கள்தான். ஆனால், அவை பெரிய மனநிலை மாற்றத்தை உருவாக்குகின்றன.
அதனால்தான், இன்று ஐரோப்பிய சமூகத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை "கிழக்கு-மேற்கு கலாசார கலவை' என்று சொல்லிவிட முடியாது. இது அதைவிடவும் ஆழமானது; நவீன மனிதன் தன்னைத் திரும்பிப் பார்க்கும் தருணம்.
எதிர்கால ஐரோப்பிய சமூகத்தின் வடிவம் என்னவாக இருக்கும் என்பதை இன்றே தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; அது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மட்டும் வரையறுக்கப்படாது. அதில் உடல், மனம், சமூகம், இயற்கை ஆகிய அனைத்தும் இடம்பெற்றிருக்கும். அந்த இடத்தை உருவாக்குவதில் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளும், யோகாவும் தியானமும், புலம்பெயர் தமிழர்களின் அமைதியான வாழ்வியலும் தத்தம் பங்களிப்பை ஓசையின்றி ஆழமாக அளித்துள்ளன.
இந்த மாற்றம் கிழக்கின் வெற்றியாகவோ, மேற்கின் தோல்வியாகவோ புரிந்துகொள்ளப்பட வேண்டியதல்ல. அதே நேரத்தில் தமிழர் பண்பாடு ஒரு மொழியாக, உணவாக, வாழ்வியலாக, அமைதியான சாட்சியாக செயல்படுகிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.