அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

தினசரி மின்னணு ஊடகங்கள் மூலம் திரையைப் பார்க்கும் நேரம் 7.5 மணி நேரமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்கும் நேரம் 25 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!
Updated on
3 min read

இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால், தொலைக்காட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூகவலைதளங்கள் மூலம் உடனுக்குடன் செய்திகள் நம்மை வந்தடைகின்றன. எனினும், மக்களின் மனதோடு நெருக்கமானதாகவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் பன்னெடுங்காலமாக செய்தித்தாள்களும், புத்தகங்களும் விளங்கி வருகின்றன.

மின்னணு ஊடகங்கள் வருவதற்கு முன்பு, அச்சு ஊடகங்கள் மக்களுக்குத் தகவல்களைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தன. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சிறந்த நண்பராக புத்தகங்கள் உள்ளன.

புத்தக வாசிப்பு என்பது உலக நடப்பை அறியவும், மொழித் திறனை மேம்படுத்தவும், சமூகங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான கருவியாகவும் விளங்குகிறது. மக்களிடையே அறியாமை இருளை அகற்றி, அவர்களின் சிந்தையில் ஒளியேற்றும் கைவிளக்காகவும், அறிவுக் கருவூலத்தின் திறவுகோலாகவும் புத்தகங்கள் உள்ளன. சாதாரண மக்களுக்கு சமூகத்தை ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ளக்கூடிய சக்தியை செய்தித்தாள்கள் அளிக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெஃபர்சனிடம் "நீங்கள் செய்தித்தாளே இல்லாத அரசை விரும்புவீர்களா அல்லது அரசே இல்லாத செய்தித்தாள்களையா' என நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், "செய்தித்தாள்களையே நான் விரும்புவேன்' எனப் பதிலளித்தார்.

"வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது' என்பார்கள். எழுத்தின் தாக்கம் சக்தி வாய்ந்தது, ஆயுதத்தைவிட வலிமையானது. ஒரு கத்தி உடலுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஒரு பேனா, ஒருவரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்தனையை வளர்த்து, சமூகத்தில் மாற்றத்தையும் கொண்டு வரும்.

பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக விளங்கி வருகின்றன. இது பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை சட்டத்துக்கு உட்பட்டு பயன்படுத்துகின்றன. ஜனநாயகத்தின் முக்கிய காவலாளியாக பத்திரிகைகள், அச்சு ஊடகங்கள் செயல்படுகின்றன. "அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் என்பது, நம் ஜனநாயகத்தின் அழகு' என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

நம் ஜனநாயக நாடான இந்தியாவில், பத்திரிகைகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவுப் பாலமாகச் செயல்படுகின்றன. அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்கைகள், நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும் செய்தித்தாள்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதோடு, மக்களின் மனசாட்சியாகவும்,

சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் செய்தித்தாள்கள் விளங்குகின்றன. சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரு பொறுப்புமிக்க அமைப்பாகவும் பத்திரிகைகள், புத்தகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் சரியான செயல்பாட்டிற்கு பத்திரிகை சுதந்திரம் இன்றியமையாதது. எனினும், "பத்திரிகைச் சுதந்திரம் முழுமையான, வரம்பற்றது மற்றும் எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் கட்டுப்பாடற்றது அல்ல.

ஏனெனில், அது ஒழுங்கின்மை, அராஜகத்துக்கு வழிவகுக்கும்' என 1997-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரம் பொறுப்புடனும், பொறுப்பு மற்றும் பொது ஒழுங்கு, ஒழுக்கம் போன்றவற்றுக்கான நியாயமான கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் வளர்ச்சி, பத்திரிகை வளர்ச்சியுடன் மிகவும் பின்னிப் பிணைந்துள்ளதால், நவீன ஜனநாயகத்தின் நிறுவன அங்கமாக மக்களால் பத்திரிகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், அச்சு ஊடகங்களுடனான நமது உறவு சுருங்கி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, தினசரி மின்னணு ஊடகங்கள் மூலம் திரையைப் பார்க்கும் நேரம் 7.5 மணி நேரமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்கும் நேரம் 25 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஜோயல் ஹால்டார்ஃப், செய்தித் தாள்கள், புத்தகங்கள் வாசிப்பு மக்களிடையே குறைந்தாலோ அல்லது கைவிட்டாலோ அதனால் சமூகத்தில் பெரும் விளைவுகள் ஏற்படும் என தனது "ரீடிங் மேட்டர்ஸ்' என்னும் புத்தகத்தில் எச்சரித்துள்ளார். நாம் படிப்பதை நிறுத்தினால், நம் மூளை சாத்தானுக்கு இடம் கொடுத்து விடும் என்கிறார்.

புத்தகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பத்திரிகைகள் அதை ஜனநாயகப்படுத்தியபோது, அது சமூகத்தை மாற்றத் தொடங்கியது. புத்தக வாசிப்பு பலரின் சிந்தனையை மாற்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது. மின் ஊடகங்கள் மூலமான வாசிக்கும் பழக்கம் ஆழமான பகுத்தறிவு திறனை இழக்கச் செய்யும் என எச்சரிக்கிறார் ஹால்டார்ஃப்.

புத்தகம் என்பது அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான மனநிலையில் நம்மை இயங்க வைக்கும் ஒரு கருவி. அதைக் கையிலெடுப்பதால் தற்சார்பு, தன்னம்பிக்கை, செழிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி, வளர்ச்சி ஏற்படும் என்பது நம் சான்றோர்கள் காட்டிய உண்மை. மேலும், புத்தக வாசிப்பு எழுத்தாளரையும், வாசகரையும் அறிவுத்தளத்தில் ஒன்றாக இயங்கச் செய்து, அறிவாக மாறி, வாழ்க்கையையும் மாற்றி பல சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.

அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் எதிர்மறைத் தாக்கங்களையே ஏற்படுத்தி அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அச்சு ஊடகங்கள், மின்ஊடகங்களின் பயன்பாட்டால் ஏற்படும் நேர்மறை, எதிர்மறைத் தாக்கங்களை அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. சமூக ஊடகங்களிடம் இருந்து நமது இளைய தலைமுறையினரை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் இப்போது அரசுகளின் முன்னுள்ள தலையாய பிரச்னை.

இந்தியாவில், சமூக ஊடகங்களில் "ரீல்ஸ்' எனப்படும் சிறு சிறு காணொலி வடிவிலான காட்சிப் பதிவுகளைத்தான் இப்போது அதிகம் பேர் பார்க்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டரை மணி நேரம் "ரீல்ஸ்' பார்ப்பதில் இந்தியர்கள் செலவிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த "ரீல்ஸ்' பார்க்கும் பழக்கம், பலரது உயிரனைய நேரத்தையும் கபளீகரம் செய்து வருவதோடு, ஒரு தொற்று நோயாக அனைவரிடமும் பரவி, தீர்வு காண முடியாத சமூகச் சிக்கலாக மாறி வருகிறது. இது எதிர்கால சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தக்கால சிறார்கள் அதிகமாக தங்களின் முழுத் திறனையும், உயிரனைய காலத்தையும் சமூகவலைதளங்களில் முழுமையாகச் செலவிடுவதால், அவர்களின் கவனம் கல்வியின் பக்கம் செல்லாமல், தவறான பாதையில் செல்வதாக நாளும் வரும் செய்திகள் நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

16 வயதுக்கு கீழே உள்ள சிறார்களிடம் சுயநலமும், குரூர எண்ணங்களும், தவறான பழக்கங்களும் வளர்ந்து வருகின்றன. இதற்குக் காரணம் மாணவர்களிடையே செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதுதான் என்பது அனைவரும் அறிந்ததே.

காணொலிக் காட்சிகள், வலைபரப்புகள் (பாட்காஸ்ட்), வலையொலி போன்றவை பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அவை நம்மை இடைநிறுத்தவோ, மீண்டும் படிக்கவோ அல்லது மெதுவாகச் சிந்திக்கவோ அனுமதிக்காது. இதனால், நாம் கவனமாகப் படிப்பதை நிறுத்திவிட்டு, வேகமான எண்ம உள்ளடகத்தை மட்டுமே பார்க்கும்போது கவனமாகச் சிந்திப்பதிலும், செய்திகளைப் புரிந்துகொள்வதிலும் தவறி விடுகிறோம். கவனச்சிதறல்கள் ஏற்பட்டு மனச்சோர்வும், துயரமும் ஏற்படும்.

வாசிப்பு என்பது நிலையானது, கால வெள்ளத்தில் அழியாதது. அது நமக்கு தகவல்களை மட்டும் தருவதில்லை. நம் மனதை ஒருமுகப்படுத்துகிறது; கருத்துகளை ஒழுங்கமைக்கவும், அவற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும், பிறர்படும் துயரங்களையும், துன்பங்களையும் அறிந்து நம்மை நல்வழியில் பயணிக்கவும் உதவுகிறது. இதுதான் செய்தித்தாள்கள், புத்தகங்களின் பலம்.

"ஒரு கலாசாரத்தை அழிக்க புத்தகங்களை எரிக்க வேண்டியதில்லை. மக்கள் அவற்றைப் படிப்பதை நிறுத்தி விட்டால் போதும்' என்றார் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி. நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகளின் அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான மற்றும் புறநிலைத் தகவல்களை வழங்குவதே செய்தித்தாள்களின் முதன்மையான செயல்பாடாகும். எனவே, செய்தித்தாள்கள் உண்மைகளை முன்வைப்பது மட்டுமல்லாமல், அதன் ஆசிரியர் உரைகள் (எடிட்டோரியல்) மூலம் உண்மைகளின் விளக்கங்களையும், கருத்துகளின் சாராம்சங்களையும் வாசகர்களுக்கு வழங்குகிறது. மேலும், கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களையும் பரப்பி மக்களிடையே அறிவொளி பாய்ச்சுகின்றன.

எனவே, செய்தித்தாள்களையும், புத்தகங்களையும் நாளும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். "உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை' என்றார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்கார் வைல்ட் என்னும் எழுத்தாளர்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com