

வாசகர் நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "அம்மா, பெண்கள் பிரச்னை குறித்தும், பொதுப் பிரச்னைகள் குறித்தும் நிறைய எழுதுகிறீர்கள். அப்படியே ஆண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் எழுதலாமே!' என்றார். அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று நான் வினவியபோது, தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
அவர் உயர் பதவியில் இருப்பவர்; சமூகத்தில் பலராலும் நன்கு அறியப்படுபவர். பொது வெளியில் வேலை நிமித்தமாகச் செல்லும்போது, பல பெண்கள் அவரிடம் மரியாதையுடன் வந்து பேசுகிறார்கள். ஒருவர் சிறந்த படைப்பாளியாகவோ அல்லது பேச்சாளராகவோ இருக்கும் நிலையில், அந்த ரசனையால் ஈர்க்கப்பட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவற்றை அவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். ஆனால், இதைச் சிலரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்; அதுவும் அந்தப் பெண்கள் அழகாகவும், வயது குறைந்தவராகவும் இருந்துவிட்டால் வினை வந்துவிடுகிறது. அவருக்கு எதிராக மொட்டைக் கடிதம் போடுவது, புகார் செய்வது, அவருடைய நடத்தையை விமர்சிப்பது என வரம்பு மீறிப் போகிறார்கள். "நம்மிடம் வந்து பேசுபவர்களிடம் பேசாமல் முகத்தை இறுக்கமாகவா வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும்போது எப்படி மறுக்க முடியும்' என்பது அவரது கேள்வி.
இதில் கசப்பான உண்மை உள்ளது. மக்கள் ஏன் இன்னமும் இப்படி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அடுத்தவர் என்ன செய்கிறார் என்று ஆராய்ந்து கொண்டிருப்பதே சிலரின் வேலையாக இருக்கிறது. "தன்னிடம் ஒருவரும் வந்து பேசவில்லையே, அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு புகழ் மாலைகள்?' என்ற எரிச்சலும் ஆற்றாமையுமே இத்தகைய சிறுபிள்ளைத்தனத்துக்குக் காரணம்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சி எவ்வளவு நன்மைகளைத் தந்திருக்கிறதோ, அதே அளவு சிலரின் குறுகிய மனப்பான்மையால் சங்கடங்களையும் உருவாக்கி வருகிறது. ஒருவரைப் பற்றி அவதூறு பேச அது ஒரு களமாக மாறிவிடுவது வேதனை அளிக்கிறது.
மக்களும் எதை வேண்டுமானாலும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு நோயாகவே பரவி வருகிறது. தங்களையே ஆராதித்துக் கொள்கிறார்கள்; தான் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் பதிவிடுகிறார்கள். சலிப்புதட்டும் அளவுக்கு எதையாவது பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறே, தான் ஏதேனும் ஒரு பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமித உணர்வையும் தரக்கூடும். அது ஒரு குற்றமா? இதைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் இழிசெயல் தேவையா? இது ஓர் உளவியல் பிரச்னை.
தன்னால் சிகரம் தொட முடியவில்லையே என்ற பொறாமையால்தான் அலர் தூற்றுகிறார்கள். வயதான பெண்கள் வந்து ஒருவரிடம் பேசினால் அதை ஏற்றுக்கொள்பவர்கள், அழகான பெண்கள் பேசினால் மட்டும் சகித்துக் கொள்வதில்லை. அந்தப் புகைப்படங்கள் அந்த ஒரு தருணத்தின் பதிவு மட்டுமே; அதை ஏன் மற்றவர்கள் சுமையாகச் சுமக்க வேண்டும்?
இதற்கோர் அழகான ஜென் கதை உண்டு. தான்சான் மற்றும் எகிடோ என்ற இரண்டு ஜென் துறவிகள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்குப் பயணம் செய்தனர். அவர்கள் ஆறு ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரை மிகவும் சகதியாக இருந்தது. அங்கே ஓர் அழகான இளம்பெண் பட்டு ஆடை அணிந்து, ஆற்றில் இறங்கினால் உடை பாழாகிவிடுமே என்ற தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய நிலையைக் கண்ட தான்சான், யோசிக்காமல் அவளை அணுகி, "வா மகளே, நான் உனக்கு உதவுகிறேன்' என்று கூறி, அவளைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து மறுபுறம் பாதுகாப்பாக இறக்கிவிட்டார். அந்தப் பெண் அவருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
மற்றொரு துறவியான எகிடோ இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், அப்போது எதையும் பேசவில்லை. அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். நேரம் செல்லச் செல்ல எகிடோவின் உள்ளுக்குள் ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருந்தது. "துறவிகள் பெண்களைத் தொடக் கூடாது என்பது விதியல்லவா? இவர் எப்படி அவளைத் தூக்கலாம்?' என்று அவர் மனம் குமைந்தது. பல மணி நேரம் கழிந்தது.எகிடோவால் பொறுக்க முடியவில்லை.
"நாம் துறவிகள், பெண்ணைத் தொடக் கூடாது என்பதுதானே முறை? பிறகு ஏன் நீங்கள் அந்தப் பெண்ணைத் தூக்கி வந்தீர்கள்' என்று தான்சானிடம் கோபமாகக் கேட்டார். அவர் அமைதியாகச் சொன்னார், "நண்பரே, நான் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள் இன்னும் உங்கள் மனதில் அவளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே!' என்றார். இவ்வாறுதான் பலரும் தேவையற்ற நிகழ்வுகளையும் எண்ணங்களையும்
தங்கள் மனதில் சுமந்துகொண்டு திரிகிறார்கள். அந்தப் பெண்கள் அடுத்து வேறு ஒரு நிகழ்ச்சியில் மற்றொரு பிரபலத்தைப் பாராட்டிப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்; அவ்வளவுதான். இது ஓர் அங்கீகாரம் மட்டுமே. ஒருவருக்கு தான் மதிக்கப்படுகிறோம் என்பது மனநிறைவைத் தரும். தன்னிடம் வந்து புகைப்படம் எடுக்கக் கேட்பவரிடம் எப்படி மறுக்க முடியும்? அப்படி மறுத்தால் அதையும் பேசுபொருளாக்கி விடுவார்கள். மெத்தப் படித்தவர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்பவர்கள் எல்லாச் செயல்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எதுவரை தங்கள் எல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படி இல்லாவிட்டாலும் கூட, இதற்காக மற்றவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இவர்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள்?
இத்தகைய நபர்களுக்குப் பயந்து ஒரு சிலர் மிகவும் கவனத்துடன் பழகுகிறார்கள். தனிமையிலோ அல்லது கைப்பேசியிலோ சாதாரணமாகப் பேசுபவர்கள், பொது இடத்தில் கண்டுகொள்வதில்லை; யாரோ போல ஒதுங்கிப் போகிறார்கள். அவர் களால் வேறு என்ன செய்ய முடியும்? இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் குழம்புகிறார்கள். "இப்படித்தான் இருக்க வேண்டும், இதுதான் பாதுகாப்பு" என்று வெளிப்படையாகவும் கூற முடியாது; அது வேறு ஒரு சிக்கலில் கொண்டு விட்டுவிடும்.
"தனிமனிதனின் ஒழுக்கத்தை அவனது இயல்பான பண்பைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்' என்றார் எமர்சன். எனவே, ஒருவருடைய சொல்லும் செயலும் சிந்தனையும் நேர்மை, தூய்மை என்னும் அடிப்படையில் அமையும்போது மக்கள் அவரைப் போற்றுகிறார்கள். இதில் ஆண் என்ன, பெண் என்ன? இளமை என்ன, முதுமை என்ன? யாரோ முகநூலில் எதையோ பதிவிடுகிறார்கள், அதனால் பிறருக்கு எவ்வளவு துன்பம்? சமூக வலைதளங்களில் முகமற்ற விமர்சகர்கள் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள். போலி அடையாளங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு யாரை வேண்டுமானாலும் எவ்வளவு தரம் தாழ்ந்தும் தூற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒருவரின் செயல் சரியா, தவறா என்று ஆராயும் முன்பே அவரைத் தூற்றி ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். இத்தகைய பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது; அவற்றைப் புறந்தள்ளிவிட்டுப் போக வேண்டும் என்று அறிவுரை கூறுவது எளிது. ஆனால், அமைதியான குளத்தில் கல்லெறிந்தால் ஏற்படும் சலன வட்டம் போல இது மறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. இத்தகைய விமர்சனங்கள் மென்மையானவர்களை அதிகம் காயப்படுத்தும்; மனச் சோர்வை உண்டாக்கும்.
அடுத்த நிகழ்வுகளில் அவர்களின் இயல்பான சிரிப்பும் பேச்சும் குறைந்து போகும். யார் பேச வந்தாலும் தயக்கம் தலைகாட்டும்; பழைய காயங்கள் நிழலாடும். தெனாலி ராமனின் "சூடு கண்ட பூனை' கதையாகிவிடும். ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் குணம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்வதெல்லாம் நெருக்கமாகி விடுமா? மொட்டைக் கடிதம் போடுபவர்கள் அந்தப் பெண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதோடு, உயர் பதவியில் இருப்பவர்களின் கண்ணியத்தையும் சிதைக்க முயல்கிறார்கள். இத்தகைய தூற்றுதலுக்கு அஞ்சித் திறமையான இளம் பெண்கள் தயக்கம் கொள்கிறார்கள்;
இருவரின் குடும்பங்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றன. ஒரு புகைப்படத்தைச் சுற்றிச் சிலர் பின்னும் கற்பனைத் திரைகள் அருவருப்பானவை. ஒரு பெண்ணின் திறமை, அந்த அதிகாரியின் கண்ணியம், நிகழ்ச்சியின் நோக்கம் இவை எதையுமே ஒரு புகைப்படம் முழுமையாகக் காட்டிவிடாது. ஒருவரின் வெற்றியையும் புகழையும் அங்கீகரிக்க மனமில்லாதவர்களே அதைத் தவறான கோணத்தில் சித்தரிக்கிறார்கள். இது அவர்களின் தரம் தாழ்ந்த மனநிலையைத்தான் காட்டுகிறது.
பெண்கள் பொதுவெளிக்கு வருவதே பெரிய சவாலாக இருக்கும் இந்தச் சூழலில், அவர்களின் பெயருக்குக் களங்கம் கற்பித்து அவர்களை மீண்டும் புதைகுழியில் தள்ளப் பார்க்கிறார்கள். எவர் குறித்தும் பொது வெளியில் அவதூறு பரப்பாமல் நாகரிகமாகப் பேசுவது முக்கியம். சமூக வலைதளம் என்பது ஒருவரின் ஆளுமையையும் நற்பண்புகளையும் உலகுக்குக் காட்டும் சாளரமாக இருக்க வேண்டுமே தவிர,கண்ணியத்தைச் சிதைக்கும் குப்பைத் தொட்டியாக மாறிவிடக் கூடாது. சமூகத்தின் இத்தகைய மனப்போக்கு விசனத்துக்குரியது. இது ஒரு நிழல் யுத்தம். தவறான புகார்க் கடிதம் எழுதும் ஒவ்வொரு விரலும் அடுத்தவரின் மன நிம்மதியைக் குலைக்கிறது; ஒருவரின் வாழ்நாள் உழைப்பைக் கொச்சைப்படுத்துகிறது. இத்தகைய அறிவு முதிர்ச்சியற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ஒரு வெற்றியாளருடன் புகைப்படம் எடுப்பது என்பது உத்வேகம் தரும்; தானும் உயர வேண்டும் என்ற தன்முனைப்பைத் தரும். எவரும் விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் "இதெல்லாம் சகஜமப்பா' என்று புன்சிரிப்புடன் கடந்துபோகப் பழகிக்கொள்ள வேண்டும். நம் பார்வையில் அழுக்கிருந்தால், நிலவு முழுவதும் கறையாகத்தான் தெரியும்!
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.