

-கேவிகே பெருமாள்
ஜஸ்பால் பட்டி என்று ஒரு நகைச்சுவையாளர் இருந்தார். அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் கேலி செய்வதில் அவர் நம்ம ஊர் சோ. ராமசாமி மாதிரி. ஒருமுறை தில்லியில் அவர் நடத்திய நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு கோரிக்கையைப் பதாகையில் எழுதி வைத்திருந்தார்.
அரசாங்கத்தில் சில துறைகள் பசை உள்ளவையாகவும், சில துறைகள் பசை அற்றவையாகவும் இருக்கின்றன. பசையற்ற துறைகளில் பணிபுரிவோருக்கு அரசாங்கம், லஞ்சத்திற்கு நிகரான சலுகைத் தொகை (நான் கரப்ஷன் அலவன்ஸ்!) வழங்க வேண்டும் என்று வேடிக்கையாக எழுதி வைத்திருந்தார். அதைப் பார்த்த அனைவரும் சிரித்தார்கள்.
அப்போது அவர், "இன்று உங்களுக்கு இது கேலியாகப் படலாம்; ஆனால், ஒரு நாள் இதுவும் நடக்க வாய்ப்பு உண்டு' என்று சொன்னார்.
அரசியல்வாதிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவர்களிடம் மட்டுமே ஊழல் இருக்கிறது என்றும், எல்லாத் தவறுகளுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் என்றும் பொத்தாம் பொதுவாகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு விவாத மேடைக்கு என்னை அழைத்திருந்தார்கள். அரசாங்கத்திற்கு வெளியே நடைபெறுகின்ற ஊழல்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று கேட்டார்கள்.
ஊழல் என்றால் அது அரசாங்கம் மட்டுமே தொடர்புடையது என்ற எண்ணம் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. அதற்குக் காரணம், நம் எல்லோருக்கும் அவ்வப்போது ஏதாவது வேலைகளுக்காக அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் அணுக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்போது கால விரயமும், பணச் செலவும் செய்தால்தான் வேலை நடக்கும் என்ற எதார்த்தத்தை (?) உணர்கிறோம். எனவே, ஊழல் என்றவுடன் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களுமே நம் கண் முன் வந்து போகிறார்கள்.
ஆனால், ஊழல் என்பது பெரும்பாலும் ஒவ்வொரு தனி மனிதரிடத்திலும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். அரசாங்கம் தொடர்பான ஒவ்வொரு தவறிலும் பொதுமக்களில் ஒருவருக்கோ, பலருக்கோ தொடர்பு இருக்கிறது. நேர்மையற்ற முறையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்புவோர் அனைவருமே முறைகேடுகள் பெருகுவதற்குக் காரணமாகிறார்கள்.
முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த முறைகேடுகள் பரிணாம வளர்ச்சி பெற்று, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து விட்டன.
சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பல ஆற்றுப்பாலங்கள் இன்றும் உறுதியோடு இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், இப்போது கட்டப்படுகிற பல பாலங்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே, சில பாலங்கள் சில மாதங்களிலேயே சிரிக்கின்றன.
கோடை காலத்தில் போடப்படும் சாலைகள் ஒரே ஒரு மழை காலத்தைக் கூடத் தாங்க முடியாமல், குண்டும், குழியுமாகி விடுகின்றன. இதனால் நமது வரிப்பணம் விரயமாவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விபத்துகள் ஏற்படவும் அவை காரணமாகின்றன. இதற்கெல்லாம் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் மட்டுமே காரணம் அல்ல; பணத்தாசை கொண்ட ஒப்பந்ததாரர்களும் காரணம்.
சில தனியார் நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைச் சொல்லி மாளாது. பொதுவாக அவர்கள் மீதெல்லாம் நமது பார்வை விழுவது இல்லை.
வங்கிகளில் கடன் பெற்று, அதில் ஒரு பகுதியை முறைகேடாகத் தனிப்பட்டவர்களின் பெயர்களில் ஒதுக்கிவிட்டு, நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகக் காட்டி, வங்கிகளை ஏமாற்றுகிற தனியார் நிறுவனங்களால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு குறித்து அவ்வப்போது செய்திகள் வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் இழக்கும் அந்தப் பணமும் பொதுமக்களாகிய நம்மைச் சார்ந்ததுதான்.
சில தனியார் நிறுவனங்கள் தவறான முறையில் தங்களது நிறுவனங்களின் மதிப்பை உயர்த்திக் காட்டி அதிக விலைக்குப் பங்குகளை விற்றுப் பெரும் பணம் சம்பாதித்து விடுகிறார்கள். பொதுமக்கள் பங்குகளை வாங்கிய பிறகு, பங்குகளின் விலை திடீரென சரிந்து விடுகிறது. இதனால் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய பங்குகளால் நஷ்டம் ஏற்பட்டு சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகிறார்கள்.
ஒருமுறை ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியோடு பேசிக் கொண்டிருக்கையில், அவரது நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மோசடி செய்து பணத்தைக் கையாடல் செய்து விட்டதாகச் சொன்னார். அதில் வியப்பு என்னவெனில், அந்த ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏனெனில், அந்த ஊழியருக்கு அந்த நிறுவனத்தின் எல்லா நுணுக்கங்களும் முழுமையாகத் தெரியும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த நிறுவனத்திற்கே அவர் தலைவலியாக மாறலாம் என்ற பயம் அந்த முதலாளிக்கு இருந்தது. மொத்தத்தில் முதலாளியிடமும் நேர்மையில்லை; தொழிலாளியிடமும் நேர்மையில்லை.
தற்போது தலைநகர் தில்லியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் மருந்துகள் உள்ளிட்ட பல பொருள்களை மோசடியாகத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல "பிராண்ட்" என்ற நம்பிக்கையில் வாங்கும் பல பொருள்களில் எது அசல், எது போலி என்று அறிய முடியாமல் நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம்.
பெரிய நிறுவனங்களின் பெயர்களில் போலியாகத் தயாரிக்கப்படாத பொருளே கிடையாது என்று சொல்லப்படுகிறது.
தொழில் நுட்பம் வளர, வளர அதற்கு இணையாக, இணையவழிக் குற்றங்களும் (சைபர் கிரைம்ஸ்) பெருகி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் அரங்கேறும் எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) போன்ற பல்வேறு குற்றங்களைக் கண்டுபிடிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் குற்றப்புலனாய்வுத் துறைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, உண்மை எது?, பொய் எது? என்று சாமானிய மக்களால் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் போதைப் பொருள் விற்பனை கோடிக்கணக்கில் பணம் புரள்கிற சந்தையாக மாறி வருகிறது. சமூகத்தைப் பற்றி இம்மியளவும் அக்கறை இல்லாத ஒரு நாசக்கார கும்பல் தங்கள் பணத் தேவைக்காக எதிர்காலச் சந்ததியினரைச் சீரழித்து வருகிறது.
மொழி, கலை மற்றும் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சில பொதுநல அமைப்புகளும் இந்த முறைகேடுகளுக்கு விதிவிலக்கல்ல.
சட்டதிட்டங்களைப் பின்பற்றாமல் அமைப்புகளை நிர்வகிப்பது, தேர்தலில் வன்முறைகளைக் கையாள்வது, நிதி மோசடிகள் எனப் பல்வேறு முறைகேடுகள் இந்த அமைப்புகளையும் பதம் பார்க்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள். அப்படிப்பட்ட நீதித்துறை குறித்து அவ்வப்போது நம் கவனத்திற்கு வரும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன.
"டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்ட, 2024}ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வுக் குறியீட்டின்படி, 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 96}வது இடத்தில் உள்ளது.
முழுமையான தூய்மைக்கு 100 புள்ளிகள் என்ற கணக்கின் அடிப்படையில், இந்தியாவுக்கு 38 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இது கவலைக்குரிய செய்தியாகும்.
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் காப்பியங்களைத் தந்த பெருமைக்குரியது பாரதம். இரு காப்பியங்களுமே அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்துகின்றன. ஆனால், அறம் என்பது தற்போது ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
ஊழல் என்பது அரசியல்வாதிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இல்லை. ஒவ்வொரு தனியார் நிறுவனங்களிலும் தனியாரிடமும்கூட இருக்கிறது. கல்வி அறிவு அதிகரிக்க, அதிகரிக்க புத்திசாலித்தனமாக அது புதுப்புது வடிவெடுக்கிறது. மனிதனுக்குப் பேராசை அதிகரிக்கும்போது, பணத்தாசையாக மாறி அடுத்த கட்டமாக ஊழலுக்கு வழிகோலுகிறது என்று தோன்றுகிறது.
யுகம், யுகமாக அரக்கர்களை அழிப்பதற்குத் தெய்வங்கள் அவதாரம் எடுத்து வந்ததாக நாம் புராணங்களில் படிக்கிறோம். சூரபத்மனை ஒடுக்க முருகப்பெருமானும், மகிஷாசுரனை அழிக்க பார்வதி தேவியும், நரகாசுரனை வதம் செய்ய விஷ்ணு பகவானும் அவதரித்து வந்ததாக நாம் புராணங்களில் படிக்கிறோம்.
இப்போது நாடெங்கும் ஊழல் என்ற மாபெரும் அரக்கன் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தலைவிரித்தாடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த அரக்கனை ஒழிக்க, எந்தக் கடவுள் எந்த ரூபத்தில் ...எப்போது வருவாரோ...?
கட்டுரையாளர்:
மத்திய அரசு அதிகாரி(ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.