புதிய திட்டமும் பழைய திட்டமும்...

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. அனைத்தும் மக்களைச் சென்று சேர்வது இல்லை. போகிற வழியிலேயே கரைந்து திசைமாறிப் போகின்றன. ஒரு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன. திட்டங்கள் வெறும் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவது இல்லை. இப்படி ஒரு திட்டம் போடப்பட்டதே மக்களுக்குத் தெரிவதும் இல்லை.

ஆனால், நூறு நாள் வேலைத் திட்டம் கிராம மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தது. செயல்படுத்தப்படும்போது குறைபாடுகளும், ஊழல்களும் இருந்தது என்பது உண்மைதான். அதையும் மீறி கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு நூறு நாள்களுக்கு வேலை உறுதி இருந்தது என்பதை மறுக்க முடியாது.

இப்போது அந்தத் திட்டத்துக்கு மாற்றாக, "வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு' (விபி ஜி ராம்-ஜி) என்ற புதிய திட்டம் கடந்த 2025 டிசம்பர் 16 -ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இனி மத்திய அரசும், மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், "தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்' என்று அழைக்கப்பட்டு, பிறகு 2009-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-09-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பின் மூலம் பொது சொத்துகள் உருவாக்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் அனைத்தும் கைப்பேசி செயலி மூலம் பணியின் விவரங்களை புவியிடக் குறியீடுகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளைத் திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு "சீரிய நிர்வாகம்' என்ற தலைப்பின் கீழ் இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அத்துடன் அந்த ஊராட்சிக்குள் குடியிருத்தல் வேண்டும். குடும்பத்துக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து உதவியாளர்களும் பதிவு செய்து வேலை அட்டை பெற்றுக் கொள்ளலாம். எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலான பணியைச் செய்வதற்கு விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்.

இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குறை தீர்க்கும் அலுவலரை நியமிக்கவும், இதன் பொருட்டு குறைகளைத் தெரிவிப்பதற்கென கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ் ஆப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மாநில சமூகத் தணிக்கை சங்கத்தைச் சார்ந்த இணை இயக்குநரை (தெற்கு மண்டலம்) மாநில குறை தீர்க்கும் அலுவலராகவும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட வளப் பயிற்றுநரை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலராகவும் நியமித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்தத் திட்டம் குறித்த முறைகேடுகளைப் புகார்களாகத் தெரிவிக்கலாம். ஏழை கிராம மக்களுக்கு உதவும் இந்தத் திட்டத்தைச் சீரழிப்பதற்கெனவே ஆங்காங்கு சில அதிகாரிகளே முனைந்துள்ளனர். இதை சமூக ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து முறைகேடுகளைக் களைவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பல மோசடிகள் நடந்துள்ளன. இதில் வேலையே செய்யாதவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது. போலிப் பணிகளைப் பதிந்தது போன்ற முறைகேடுகளும் அடங்கும். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக தணிக்கை அறிக்கைகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், இது குறித்து விசாரணைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகளில் பல வகைகள் உண்டு. வேலையே செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. சாலைகள், தடுப்பணைகள் போன்ற பல போலிப் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

சில மாவட்டங்களில் சமூகத் தணிக்கையின்போது ரூ.110 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குறை பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.

மோசடிகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஒருசில இடங்களில் அதிகாரிகள் பெயரளவுக்கு பணியிடைநீக்கம் செய்யப்படுகின்றனர். இதனால், தவறு செய்யும் அதிகாரிகள் அச்சம் இன்றி, மேலும் மேலும் தவறுகள் செய்கின்றனர்.

நூறு நாள் திட்டம் முறைகேடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறைகேடு, அனைவருக்கும் வீடு திட்டம் முறைகேடு, கழிவறைத் திட்டம் முறைகேடு, விவசாயிகளுக்கு வங்கி மூலமாகத் தரப்பட்ட நிதி முறைகேடு என்று முறைகேடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்க முடியவில்லை.

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதனால் புதிதாக வந்த பாஜக அரசு அதை பெயரளவில் செயல்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்துக்குக் கிராமப்புற ஏழை மக்கள் ஆதரவு இருப்பதால் அதை மூடவும் முடியாமல், தொடர்ந்து நடத்தவும் முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள ஊராட்சி மன்றங்களில் வேலை செய்யாமல் ஊதியம் பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 10 பேர் செய்யும் வேலைக்கு 100 பேர் செய்கின்றனர். கிராமங்களில் இந்தத் திட்டம் முறையாகச் செயல்படவில்லை. இதனால், விவசாயப் பணிகளுக்கு தொழிளாலர்கள் கிடைக்கவில்லை என்ற பொதுவான குறைபாடுகளும் உள்ளன.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் இறந்தவர்கள், கிராமத்தில் இல்லாதவர்கள், வெளியூர்வாசிகள், வட மாநிலத்தவர்கள் என வேலைக்குத் தொடர்பே இல்லாதவர்களின் பெயர்களைக் கணக்குக் காட்டி மோசடி நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. ஆனால், அரசு அதிகாரிகள் அதை அலட்சியமாக எதிர்கொள்வதே மோசடிகள் அதிகரிக்கக் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தில் போலியான கணக்குகளைக் காட்டி மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்குச் சென்றுசேர வேண்டிய அரசின் நிதி மக்கள் எதிரிகளுக்குப் பயன்படுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

ஏழை மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம். இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் தமிழகத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக பல ஊர்களில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் மட்டுமே இத்தகைய மோசடிகளில் ஏழைத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலும் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதிலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 110 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக சமூகத் தணிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கிய காலம் முதலே பொதுமக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இதன் மூலம் கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் திட்டங்களையும் பெயர்களையும் மாற்றுவது மக்கள் ஆட்சிக்கு மாண்பை ஏற்படுத்தாது. இது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகும் என்பதே கடந்த காலத் திட்ட அறிக்கையின் எச்சரிக்கையாகும். புதிய திட்டம் என்பது பழைய திட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதே மக்களாட்சிக்குப் பெருமை சேர்க்கும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com