

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், எல்லோரும் அறிந்திராத, உடனடி வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் எனும் எதிர்பார்ப்பில் புதிய படிப்புகளில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அத்துடன் போதிய உடற்திறனை எட்டியதும் வருமானம் ஈட்டவேண்டும் என்பதற்காக தொழிற்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வோர் கவனம் பெறாதவர்களாகவே இருந்தனர்.
ஒரு காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தபோது தொழிற்பயிற்சி நிலையங்களின் நிலை கவலைதரும் வகையில் இருந்தது. ஆனாலும், தொழிற்கல்வி பயிலும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் இருக்கவே செய்தது.
இதனால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளின் வளாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்) தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறையத் தொடங்கி மூடப்பட்டாலும், அவ்வளாகத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆயினும், பொறியியல் கல்லூரிகளில் தொழிற்கல்வி பயில்வதை பெருமையாகக் கருதும் மனநிலை இளைஞர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது. தொழிற்கல்வி பயில வேண்டும் எனும் போது பொறியியல் கல்லூரிகளே பெரும்பாலானோரின் தேர்வாக இருந்தது. ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், குறைவான காலத்தில் வருமானம் ஈட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களுக்கு பொறியியல் கல்வி சாத்தியமானதாகக் கருதப்படவில்லை.
இத்தகையோரின் தேர்வு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களாகவே உள்ளது. ஆனாலும், தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் அரசு நடத்தும் 132 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்பட 543 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
குறைவான பாடப் பிரிவுகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு, மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றுவந்த நிலையில் அண்மைக்காலமாக மாணவிகளும் சேர்க்கை பெற்று வருகின்றனர். இதனால், கடந்த 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 93.30 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், இராமநாதபுரம், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு அதே ஆண்டில் சேர்க்கையும் நடைபெற்றது.
இந்நிலையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியதால் 100 பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கை பெறச் செய்ய முடியும் என்பதிலும், இடைநிற்றல் என்பது வெகுவாகக் குறையும் என்பதிலும் மாற்றமில்லை.
கடந்த 1981-இல் 32.95 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 2011கணக்கெடுப்பின்போது 48.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதேபோன்று சிறு கிராமங்களில் கூட நகர்ப்புறங்களின் தாக்கம் காணப்படுகிறது. அதனால், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், வெல்டிங் போன்ற பணிகளுக்கான பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக இதுபோன்ற திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் போது அரசியல் தலையீடுகள் இருப்பதுண்டு. குறிப்பாக, பள்ளிகள் தரம் உயர்வு, புதிய கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் போது போக்குவரத்து. குடிநீர், சாலைவசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் அரசியல் தலையீடுகளும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. எனவே, பள்ளி வளாக தொழிற்கல்வி நிலையங்கள் தொடங்கப்படுவதில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிகப்படியான மாணவ-மாணவியர்கள் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்து அதனடிப்படையில் பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களின் அமைவிடத்தைத் தேர்வு செய்வது பொருத்தமானதாக இருக்கும். கிராமப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான இட வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்கல்வி எனும்போது அத்தொழிலைப் பற்றிய நுண்ணறிவைப் பெற்றவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களில் பற்றாக்குறையின்றி தொடர போதிய நிரந்தர ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தொழிற்கல்வியைப் பொருத்தவரை எழுத்துமுறையைக் காட்டிலும் செய்முறைப் பயிற்சியே முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் போதிய கட்டட வசதிகளுடன் ஆய்வக வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். சரியான திட்டமிடலுடன் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து போதிய உபகரணங்களைக் கொண்ட ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.
பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போதும், புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் போதும் வழக்கமான பாடப்பிரிவுகளே தொடங்கப்படுகின்றன. ஆனால், இவ்வகை தொழிற்பயிற்சி நிலையங்களில் வழக்கமான பாட ப்பிரிவுகள் அல்லாது தேவையான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, எளிதில் வேலை கிடைக்கக்கூடிய பாடப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும்.
அதேபோன்று இதற்கான பூர்வாங்க பணிகளை முன்கூட்டியே தொடங் வேண்டும். கல்வியாண்டு தொடக்கத்தின்போது அல்லது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னதாக இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த அளவில் சேர்க்கை நடைபெறுவதுடன் இத்திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.