அரசின் கடனும் மக்களின் கடனே!

அரசு வாங்கும் கடனும் தனி மனிதனின் கடனே; இதை மக்கள் உணர்ந்து செயல்படவேண்டிய தேர்தலே எதிர்வரும் தேர்தல் என்பதைப் பற்றி...
அரசின் கடனும் மக்களின் கடனே!
Updated on
2 min read

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார். ஆனால், 2010-இல், உத்தர பிரதேசத்தின் கடன் தொகை தமிழ்நாட்டின் கடனைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, இத்தொகை நாட்டில் மக்கள்தொகை அதிகமாக உள்ள உத்தர பிரதேசத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப், ஹரியாணாவுக்கு அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தற்போது தமிழ்நாட்டின் நிதி நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பரவிவரும் கருத்து சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், மக்களின் தனிநபர் கடன் ரூ.3.9 லட்சமாக இருந்த நிலையில், அது தற்போது ரூ.4.8 லட்சமாக அதிகரிகரித்திருக்கிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவே மாநிலத்தின் 25.7% வருமானம் செலவாவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன்கள் 25%-ஐ தாண்டிவிட்டன. அதிகபட்சமாக 55% கடன்கள் கடன் அட்டைகள், கைப்பேசி மாதாந்திர தவணைக் கடன்கள் போன்றவற்றுக்குச் செல்கின்றன. பண வீக்கத்தால், குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து 2024-25-ஆம் ஆண்டில் சுமார் ரூ.9.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை 45,121 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்துவதும் தற்போதைய அரசு கடன் அதிகரிப்புக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. 2023-24-ஆம் ஆண்டில் ரூ.1.31 லட்சம் கோடியை கடனாக வாங்கிய தமிழக அரசு, அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மூலதனச் செலவாகக் கூறுகிறது.

கடன் சுமை அதிகரிப்பது, நிதி ஒழுக்கமின்மையைக் காட்டுவதாகவும், பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சில கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்துவரும் இரு பெரும் கட்சிகளும் ஒருவரை ஒருவர் இதற்கு குறை கூறுவதை பொது மக்களால் ஏற்க முடியவில்லை.

தமிழக அரசின் கடன் வாங்கும் வளர்ச்சி என்பது 0.66 சதவீதம் ஆகும். இது உத்தர பிரதேசத்தைவிட தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக கடனாகும். அரசு அவ்வப்போது அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு அதிகம் செலவாவதாகவும் ,அதனால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் வருவாயைப் பெருக்க சொத்து வரி, குடிநீர்-கழிவுநீர் வரி போன்ற அனைத்துத் துறைகளிலும் அரசுக்கு செலுத்த வேண்டியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. கணிசமாக வருமான வரி செலுத்தி நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் மக்களின் குரல், இலவசங்களின் அறிவிப்பில் எங்கும் ஒலிப்பதில்லை. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். தனி மனித வாழ்க்கையில் பொருளாதார தற்சார்பு பெரிதும் போற்றப்படுகிறது.

இந்நிலையில், அரசு வாங்கும் கடனும் அவர்களின் கடன் சுமையை அதிகமாக்குவதை அவர்கள் விரும்பி ஏற்க மாட்டார்கள். தற்போதெல்லாம் மக்களுக்கு எளிதில் கடன் கிடைக்கிறது. எனவே, ஆசைப்படுவதையெல்லாம் வாங்கிக் குவிக்கும் நுகர்வு கலாசாரம் அதிகமாகி வருகிறது. பொதுவாக இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த மனப்போக்கு முடிவுக்கு வர வேண்டும்.

எளிதாக சந்தையில் கிடைக்கும் மதுவும் பிற போதைப் பொருள்களும் இளைஞர்களை திசை மாறிச் செல்ல வைக்கின்றன. இவை சந்தையில் கிடைக்காமல் இருந்தாலே அவர்களின் சிந்தைகள் செம்மைப்படும். வாழ்வில் உழைத்து முன்னேறுவதில் முனைப்புக் காட்டுவார்கள். எனவே, நலத் திட்டங்களுக்காக இலவசம் என்ற பெயரில் அரசு நிதி எதுவும் இனியும் தேவையில்லை என்பதே பொது மக்களின் கருத்து. தங்களின் கடன் சுமையை இவை உயர்த்துவதாக அவர்கள் உணருகிறார்கள். எந்த இலவசத்தையும் மக்களே விரும்பிக் கேட்டுப் பெறுவதில்லை.

அரசு வாங்கும் கடன் தனி மனிதன் கடனுமாகும். இதை மக்கள் உணர்ந்து செயல்படவேண்டிய தேர்தலே எதிர்வரும் தேர்தலாகும். இந்நிலையில் மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் மக்கள் பணத்திலேயே இலவசங்களை வாரி வழங்கும் அரசுகள் உலக வங்கிகளும் பிற நிதி அமைப்புகளிடமிருந்தும் கடன் வாங்கி நலத்திட்டங்களை அமல்படுத்துகின்றன. இதனால், அரசின் கடன் அதிகரித்து வருகிறது.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கு இலவச நலத் திட்டங்களை தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் அள்ளி வீசக்கூடும். இந்த இலவசங்கள் மக்களின் வரிப் பணத்தில் அளிக்கப்படுகின்றன. எல்லாமும் அரசினால் இலவசமாக கிடைத்துவிட்டால் நல்லது என்ற மனப்போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது. உழைக்க வேண்டும் என்ற உணர்வு மறந்து போகிறது.

எனவே, வரும் நாள்களில் இலவசங்களைப் பெறுவது இழுக்கு என்ற மனநிலையை மக்கள் உணர வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கேனும் அரசு கொடுக்கும் வேலையே அவர்களின் எதிர்பார்ப்பாக மாற வேண்டும். விரைவில் வர இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு விட்டில் பூச்சிகளாகி விடாமல் இருக்க வேண்டிய பொறுப்பு வாக்காள பெருமக்களுக்கு இருக்கிறது.

இனியும் வேண்டாம் இலவசங்கள் என்பதே நமது கொள்கையாக மாற வேண்டும்.அப்போதுதான் நம் நாடும், வீடும் நலம் பெறும்.இதில் இருவேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com