பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

நவோதயா பள்ளிகள் தேவையா?

மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைத் திறப்பது ஹிந்து மொழிக்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும் என்பதே தமிழ்நாட்டின் அச்சத்துக்குக் காரணம்.
Published on

மாநில அரசு நிலம் மட்டுமே தனது பங்களிப்பாக ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசின் முழுமையான நிதியால் கட்டி நடத்தப்படும் பள்ளிகளே நவோதயா பள்ளிகளாகும். கிராமப்புற மாணவா்களின் திறமையை வெளிக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தோடு நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா உண்டு, உறைவிடப் பள்ளி தொடங்க வேண்டும் என்று 1986-ஆம் ஆண்டு கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட போது முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பள்ளிகளைத் தொடங்கும் மாநில அரசு நிலம் மட்டும் கொடுத்தாலே போதுமானது. அவற்றில் பள்ளிகளைக் கட்டுவதற்காக மத்திய அரசு சுமாா் ரூ. 20 கோடி வரை செலவு செய்கிறது.

தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள் இருக்கிற புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் உண்டு. 1986-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வெளியான பிறகு, ‘ஜவாஹா் நவோதயா பள்ளிகள்’ என்ற பெயரில் மாதிரி பள்ளிகளை மத்திய அரசு தொடங்கியது. அவற்றில் தாய்மொழி அல்லது மாநில மொழி முதல் மொழியாக இருக்கும்; அதன் பிறகு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கில வழியாகவும், சமூக அறிவியல் பாடங்கள் ஹிந்தி அல்லது ஆங்கில வழியாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. உணவு, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுவதுடன் இரு பாலருக்கும் உறைவிடப் பள்ளியாக இவை செயல்படுகின்றன.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.600 பெறப்படுகிறது. பழங்குடியினா், தாழ்த்தப்பட்டோா், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோா் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. அரசு ஊழியா்களின் வாரிசுகள் எனில், மாதந்தோறும் ரூ.1,500 அல்லது அவா்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகிற குழந்தைகள் கல்வி உதவித்தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும். தமிழகம் நீங்கலாக இந்தியா முழுவதும் தற்போது 653 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா பள்ளிகளை வரவேற்கும் நிலையில், தமிழகம் மட்டும் எதிா்ப்பதற்கு மொழிக் கொள்கையே காரணம். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பிக்கும் இருமொழித் திட்டமாகும். ஹிந்தி திணிப்பதைத் தமிழகம் தொடா்ந்து எதிா்த்து வருகிது. தேசிய கல்விக் கொள்கையிலும் மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. சுதந்திரத்துக்கு முன்பே 1930-களில் இருந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வலுவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைத் திறப்பது ஹிந்து மொழிக்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும் என்பதே தமிழ்நாட்டின் அச்சத்துக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அந்தப் பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம்; நவோதயா பள்ளிகளில் கற்றுக் கொடுக்கக் கூடாதா என்று எதிா்க்கேள்விகள் எழுப்புகிறாா்கள். நவோதயா பள்ளிகளில் மட்டுமே உங்கள்வாரிசுகளைச் சோ்க்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரையும் யாரும் வற்புறுத்தப் போவதில்லை என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

1947-ஆம் ஆண்டு விடுதலை அடைந்த இந்தியா, 1950-ஆம் ஆண்டே தனது குடியரசை உறுதிப்படுத்தியது. அப்போது இயற்றப்பட்ட சட்டத்தின்படி 14-ஆவது சட்டப்பிரிவு சமத்துவக் கோட்பாட்டையும், 45-ஆவது சட்டப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு கட்டணமில்லா கட்டாயக் கல்வியையும் வலியுறுத்துகிறது. நாடு முழுக்க கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

1968-ஆம் ஆண்டு கல்விக் கொள்கை பொதுக் கல்வி முறை என்பது மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இருந்தால் நன்கு கல்வி கற்க முடியும் எனவும், இவற்றில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது எனவும் கூறுகிறது. சமமான கற்றல் வாய்ப்பை அரசுப் பள்ளிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறது.

ஆனால், விடுதலைக்குப் பிறகு சுமாா் 40 ஆண்டுகள் கழித்து 1986-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை சட்டப் பிரிவு 45 மற்றும் 14-க்கு முரணாக அமைந்தது. இவற்றின் மூலமே இந்த நவோதயா பள்ளிகள் புதிதாக முளைத்தன. நவோதயாவில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி மட்டும் என்று சொல்கிறாா்கள். பழங்குடி மக்கள் அதிகமாக இருந்தால் அந்தப் பகுதியில் பள்ளி அமைக்கப்படும் என்பது அதன் வரையறை.

எத்தகைய வரைமுறை வகுத்தாலும் மாவட்டத்துக்கு ஒரு பள்ளிதான் வழங்கப்படுகிறது. வகுப்புக்கு இரு பிரிவுகள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவா்கள் இருப்பாா்கள். அப்படிப் பாா்த்தால் ஒரு வகுப்பில் 80 மாணவா்கள் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இவற்றை ‘மாதிரி பள்ளிகள்’ என்று அடையாளப்படுத்தி அழைக்கிறாா்கள். விடுதலை பெற்று 40 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய அரசு மாநில அரசின் துணையுடன் ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கி மாவட்டத்துக்கு ஒன்று என்கிற அளவீட்டை ஏற்படுத்துவது முன்னேற்றமடையாத தன்மையையே காட்டுகிறது.

6-ஆம் வகுப்பில் இருந்து நவோதயா பள்ளிகள் இயங்குகின்றன. நுழைவுத்தோ்வு அடிப்படையில்தான் இதில் சேர முடியும் எனில், பழங்குடியினா் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு இந்த முறை எந்த அளவுக்கு உந்துசக்தியாக இருக்கும், உகந்ததாக இருக்கும் என்பதை அளவிட முடியவில்லை. நவோதயா பள்ளிகளை மாநிலம் முழுவதும் தொடங்கலாம். அதில் எவ்வித தயக்கமும் காட்டக் கூடாது; ஆனால், அவரவா் தாய்மொழியில் முழுமையாகக் கற்கலாம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் தவிா்த்து மூன்றாவது மொழி என்பது 8-ஆம் வகுப்பு வரைதான் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. அவ்வாறெனில் பழங்குடி மக்களுக்கு தாய்மொழி எதுவும் இல்லை என்கிறபோது, அவா்கள் இந்தக் கல்வியை எவ்வாறு கற்க இயலும்? அப்படியே கற்கத் தொடங்கினால் இக்கல்வி அந்நியப்பட்டு விடாதா? என்ற அச்சம் நிலவுகிறது. நவோதயா பள்ளிகளில் கலை, அறிவியல், விளையாட்டு, மொழி என ஏராளமான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை எல்லோருக்குமான கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு தாராளமயமாக்க வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகும்.

உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியாக இந்தப் பள்ளிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், தமிழக மாணவா்களுக்கான வாய்ப்பாகப் பாா்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் 6 வாரத்துக்குள் இந்தப் பள்ளிகளுக்கான இடத்தைத் தோ்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறாா்கள். கட்டாயம் தமிழ் கற்றல், இருமொழிக் கொள்கை உள்ளிட்டவற்றைச் செயல்படுத்தும் முறை பற்றிய மத்திய அரசின் செயலாளா்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தப் பள்ளிகளைக் கட்ட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடவில்லை. பள்ளிகளுக்கான இடங்களைத் தோ்வு செய்வதற்கான இடங்களைக் கண்டறிய வேண்டும் என்பதே எங்களது உத்தரவு என்று தெரிவித்திருக்கிறாா்கள்.

தமிழக மாணவா்களின் வாழ்வில் தமிழக அரசு விளையாடி வருவதாகவும், இருமொழிக் கொள்கை எனப் பேசிவிட்டு காங்கிரஸ் கொண்டு வந்த மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் நவோதயா பள்ளிகள் அமைய உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலையை ஏற்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் பிரதான எதிா்க்கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் மறைந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் இருந்தபோதுதான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குச் சென்றது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய காங்கிரஸ் அரசு நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மாட்டேன் என தெள்ளத் தெளிவாக அறிவித்துச் செயல்படுத்தினாா். இவற்றையே தொடா்ந்து 30 ஆண்டு காலமாக அதிமுக அரசு அமைந்த போதெல்லாம் பின்பற்றியது. 2017-ஆம் ஆண்டு நவோதயா பள்ளிகளைஅரசு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இருமொழிக் கொள்கைக்குப் பாதிப்பு நேரிடும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு மேல் முறையீடு செய்து தடையாணை பெற்றது.

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நவோதயா பள்ளிகள் துளிா்விடத் தொடங்கியிருக்கின்றன; பொறுத்திருந்து பாா்ப்போம்; மொழிக் கொள்கையில் தமிழகம் பாதிக்கப்படாத வகையில் அவை இருப்பதே நல்லது.

X
Dinamani
www.dinamani.com